Pages

Wednesday, March 15, 2017

திருக்குறள் - கல்லாதான் சொல் காமுறுதல்

திருக்குறள் - கல்லாதான் சொல் காமுறுதல் 


கல்வி அறிவு இல்லாதவன் ,  பேச (அவையில்) நினைப்பது முலை இரண்டும் இல்லாத பெண் காமம்/காதல் கொண்டது போல என்கிறார் வள்ளுவர்

பாடல்

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

பொருள்

கல்லாதான் = கல்வி அறிவு இல்லாதவன்

சொற்கா முறுதல் = சொல் காமுறுதல் , சொல்ல நினைத்தல்

முலையிரண்டும் = முலை இரண்டும்

இல்லாதாள் = இல்லாத

பெண்காமுற் றற்று. = பெண் காமம் அடைந்தது போல

என்ன இது வள்ளுவர் இப்படி ஒரு பாடலை எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறதா ? ஒரு பெண்ணின் அங்கங்களை கூறி , பால் உணர்வு சார்ந்து பாடல் உள்ளது போல தோன்றுகிறது அல்லவா ?

மார்பகங்கள் பெரியதாக அழகாக இல்லாத பெண்கள் காதல் வயப்படக் கூடாதா ? அவர்களுக்கு உணர்ச்சி இருக்காதா ?

காதலுக்கு உடல்தான் முக்கியமா ? அதுவும் குறிப்பாக பெண்ணின் மார்பகமா முக்கியம் ?  வள்ளுவர் இப்படி பாடல் எழுதுவாரா ?

வள்ளுவர் கூற வந்ததே வேற.

ஒரு பெண்ணுக்கு காதல் வருகிறது. ஒரு ஆணை காதலித்து மணம் புரிந்து கொள்கிறாள். அவளுக்கு பெரிய மார்பு இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அவளுடைய கணவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவள் குணத்தில் தங்கம். அறிவு, பண்பாடு, வீட்டை பராமரிப்பதில் எல்லாம்  சிறந்து விளங்குகிறாள்.

இல்லறம் இனிதே நடக்கிறது.

நாளடைவில் அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

குழந்தை பசித்து அழுகிறது. குழந்தைக்கு பால் தர வேண்டும்.  அவள் எப்படி அந்த குழந்தையின் பசியை போக்குவாள் ? அவளுக்கு அது எவ்வளவு வருத்தமாய் இருக்கும். குழந்தை பசித்து அழுகிறது. தன்னால் அந்த குழந்தைக்கு தாய் பால் தர முடியவில்லையே என்று தவிப்பாள் அல்லவா ? தாய்ப்பால் புகட்டிய பெண்களுக்குத்தான் அந்த சுகமும், வலியும் , தாய்மையின் பூர்ணமும் தெரியும்.

அவளிடம் ஆயிரம் சிறந்த குணங்கள் இருக்கலாம். மற்ற அழகு எல்லாம் இருக்கலாம். அவள் ஒரு பெண்ணாகபூர்ணம் அடைவது தாய்மையில்தான்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்பார் மணிவாசகர்.

தந்தைக்கு அப்படி ஒன்றும் சொல்ல முடியாது.

உதிரத்தை பாலாக்கி , அன்பைக் கலந்து தரும் அந்த மகோன்னதம் ஒரு தாயால்தான் மட்டும்தான் முடியும்.

அது முடியாத பெண் எவ்வளவு வருந்துவாள் , அது போல கல்வி அறிவு இல்லாதவன் கற்றறிந்தோர் சபையில் பேச நினைத்தால் அவ்வளவு வருந்துவான் என்கிறார்.

இந்த அர்த்தம் சரிதானா என்று வாசிப்பவர்களுக்குத் தோன்றும். இது சரி தான் என்று நிரூபிக்க முடியும்.


சிறு குழந்தைக்கு பல் கிடையாது. அதற்கு உணவை கடித்து உண்ண முடியாது.

அதன் செரிமான குழாய்கள் நன்றாக வளர்ந்து இருக்காது. திட உணவு எளிதாக அதில் செல்ல முடியாது.

அதன் ஜீரண உறுப்புகள் முழுதும் வளர்ச்சி பெற்றிருக்காது. அதனால் கடின உணவை ஜீரணம் செய்ய முடியாது.

தாய் என்ன செய்கிறாள், உணவை தான் உண்டு, செரித்து, அதை இரத்தமாக்கி, அதை பாலாக்கி , அதில் குழந்தைக்கு வேண்டிய சத்து மட்டும் நோய்  எதிர்ப்பு பொருள்களை கலந்து குழந்தை எளிமையாக ஜீரணம் பண்ணும் வகையில் பாலாக, திரவ வடிவில் தருகிறாள்.

குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்றால், தான் பத்தியம் இருக்கிறாள்.

குழந்தைக்கு எப்போது தர வேண்டும் (நினைந்து ஊட்டும்), எவ்வளவு தர வேண்டும் என்று அறிந்து தருகிறாள்.

அது போல, ஒரு படித்தவன் , பல நூல்களை படித்து, உள்வாங்கி, ஒன்றோடு ஒன்று  இணைத்து, கடின பதங்களை எளிமையாக்கி, கேட்பவர் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம்  பேச வேண்டும். அவர்களுக்கு எவ்வளவு தர வேண்டும், எப்போது தரவேண்டும் என்று அறிந்து தரவேண்டும்.

அதனால் தான் கல்வி அறிவு உள்ளவனை தாய்க்கு உதாரணமாக கூறினார்.

ஒரு தடவை பால் தந்து விட்டாள் போதாது. குழந்தை பெரிதாக வளரும் வரை தாய் தன் பாலை தந்து கொண்டே இருப்பாள். அதற்காக அவள் மேலும் மேலும் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்கு சொல்லுபவனும் அது போல படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாளும் புதிய செய்திகளை கொண்டு தர வேண்டும்.

தாய் எப்படி உணவை தான் ஜீரணம் செய்து பிள்ளைக்கு அதை பால் வடிவில் தருகிறாளோ அது போல பேச நினைப்பவன் புத்தகங்களை மேற் கோள் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. படித்து, உள்வாங்கி, அவனுடைய அறிவினால் படித்ததை எளிமையாக்கி , செறிவூட்டி தரவேண்டும்.

பால் புகட்டும் தாய் கண்டதையும் சாப்பிடக் கூடாது. மது, புகை பிடித்தல் போன்றவற்றை தவிர்த்து விடுவது குழந்தைக்கு நலம் பயக்கும். அது போல கற்று அறிந்தவன்  நல்ல விஷயங்களை மட்டும் படிக்க வேண்டும்.  கண்டதையும் படித்து  தன் அறிவையும், மனதையும் குழைப்பிக் கொள்ளக் கூடாது.

தாய் தன் பிள்ளைக்கு வேளா வேளைக்கு பால் தருவாள். ஆனால் குழந்தைக்கு ஜீரணக் கோளாறு இருந்தால், சரியாக மலம் கழிக்கவில்லை என்றால் மேலும் மேலும் பால் புகட்ட மாட்டாள். முதலில் தந்தது உள்ளே சென்று ஜீரணமானதை அறிந்த பின் தான் அடுத்த முறை பால் தருவாள் தாய்.

அது போல , ஒரு மாணவனோ அல்லது கேட்பவனோ ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்த பின்பே அடுத்த விஷயத்தை சொல்ல வேண்டும். நான் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போகிறேன், நீ புரிந்து கொண்டால் சரி, இல்லை என்றால் அது என் பாடு இல்லை என்று இருக்கக் கூடாது.

முலை இரண்டும் இல்லாதாள் காமுறுதல் என்பதற்கு பின்னால் எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.

இன்னும் சிந்தித்தால் மேலும் பல பொருள் விரியும்.

ஒரு குறளின் பின்னால் இவ்வளவு இருக்கும் என்றால், 1330 குறள் இருக்கிறது. ஒரு வாழ்நாள் போதாது.

மூல நூலை படியுங்கள். 

1 comment:

  1. திருக்குறளுக்கு மூலத்துடன் நல்ல விரிவான உரையுடன் கூடிய புத்தகம் பற்றிய தகவலை
    தெரியப்படுத்தவும் .Thanks
    kpartha12@gmail.com

    ReplyDelete