திருக்குறள் - ஈன்ற பொழுதினும்
திருக்குறள் போன்ற நூல்களை படிக்கப் படிக்க புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.
பாடல்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
பொருள்
ஈன்ற பொழுதிற் = பிள்ளையை பெற்ற நேரத்தை விட
பெரிதுவக்கும் = மிகவும் மகிழும்
தன்மகனைச் = தன் மகனை
சான்றோன்= சான்றோன்
எனக்கேட்ட தாய் = என கேள்விப் பட்ட தாய்
பிள்ளையை பெற்ற போது மகிழ்ததை விட அவன் சான்றோன் என்று மற்றவர்கள் கேட்ட பொழுது தாய் மிக மகிழுவாள்.
இந்த குறள் பற்றி ஏற்கனவே மிக விரிவாக முன்பு எழுதி இருந்தேன். அதை கீழே தந்திருக்கிறேன். படிக்க விட்டுப் போனாலோ அல்லது படித்தது மறந்து போயிருந்தாலோ இன்னொரு முறை படித்து மகிழலாம்.
இந்த குறளை மீண்டும் எடுத்ததற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.
பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவியிடையே உள்ள உறவு அவ்வளவு சிறப்பாக இருப்பது இல்லை. காரணம் என்ன என்று இருவருக்குமே தெரியாது. அவளுக்கு வேண்டியது எல்லாம் வாங்கித் தருகிறேன், சினிமா, டிராமா என்று கூட்டிப் போகிறேன். போன வருடம் கூட அவளுக்கு ஓர் வைர அட்டிகை வாங்கித் தந்தேன். என்ன செய்தாலும் ஒரு திருப்தியோ சந்தோஷமோ கிடையாது என்பது பெரும்பாலான கணவர்களின் குற்றச் சாட்டு.
பெண்களுக்கும் தெரியும்...கணவன் தனக்காக, இந்த குடும்பத்துக்காக எவ்வளவு பாடு படுகிறான் என்று. இருந்தும் ஏதோ ஒன்று குறை மனதுக்குள் உறுத்திக் கொண்டே இருக்கும். என்ன என்று கேட்டால் சொல்லத் தெரியாது.
வள்ளுவர் சொல்லுகிறார்.
பெண்களுக்கு எதையும் காதால் கேட்டால் தான் திருப்தி.
"சான்றோன் என கேட்ட தாய் " என்கிறார் வள்ளுவர்.
ஏன் ? மகன் சான்றோன் என்று பார்த்தால் தெரியாதா ? தெரியும். இருந்தாலும், அதை நாலு பேர் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவளுக்குத் மகிழ்ச்சி.
மனைவி ஒரு காப்பி போட்டு கொடுத்தால், ஒரு தோசை வாரத்துக்கு கொடுத்தால் , நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். காப்பி போடுவது என்ன பெரிய கம்ப சித்திரமா, அதுக்கு ஒரு பாராட்டா என்று கேட்காமல், "இன்னிக்கு என்ன பண்ண...காப்பி நல்லா இருக்கே " என்று சொல்லிப் பாருங்கள். அவள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை. நல்லா இல்லாட்டிதான் சொல்லுவோம்ல. ஒண்ணும் சொல்லலேன்னா நல்லா இருக்குன்னுதான் அர்த்தம் என்பது ஆண்களின் வாதம். அதை வாயை திறந்து சொன்னால் என்ன என்பது பெண்களின் ஆதங்கம்.
ஒண்ணும் இல்லா விட்டாலும், இந்த சேலையில நீ அழகாத்தாண்டி இருக்க என்று சொல்லி வையுங்கள். வெட்கத்தில் கன்னம் சிவப்பதை காணலாம்.
உன்னை போல அழகி கிடையாது, எனக்கு நீ தான் உலக அழகி, சமையலில் உன் கை பக்குவமே ஒரு ருசி, நீ இரண்டு நாள் இல்லாட்டி வீடு என்னமோ போல இருக்கு என்று சொல்லிப் பாருங்கள், தாம்பத்யம் சிறக்கும்.
பெண்களுக்கு கணவன் மேல் ஒரு சின்ன சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆண் என்னத்தான் நேரத்துக்கு வீட்டுக்கு வந்தாலும், அந்த சந்தேகம் போகாது. சந்தேகம் எப்ப போகும் என்றால், அவளை பத்தி நாலு வார்த்தை சொல்ல வேண்டும்.
ஆண்களுக்கு கேட்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் பார்த்தே அறிந்து கொள்வார்கள். பெண்களுக்கு எதையும் கேட்க வேண்டும்.
இலட்சம் ரூபாய்க்கு வைர அட்டிகை வாங்கித் தருவதை விட, நாலு வார்த்தை பாராட்டி சொன்னால் அவர்கள் மனம் மகிழும்.
"நான் சம்பாதிக்கிறது எல்லாம் என் பெண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் தானே...இதுக்கு மேல நான் என்ன செய்யணும்னு எதிர் பார்குறா " என்று சலித்து கொள்ளும் ஆண்களுக்கு வள்ளுவர் தரும் அறிவுரை, பெண்களுக்கு வேண்டியது பணம் அல்ல. ஏழை வீட்டு பெண்கள் சந்தோஷமாக இல்லையா ? அவர்களுக்கு வேண்டியது அன்பான, ஆதரவான, வார்த்தைகள், நாலு பாராட்டு வார்த்தைகள்.
"பாவம் நீ உழைச்சு ஓடா தேயுற...என்ன கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்ட " என்று சொல்லிப் பாருங்கள்....அவள் மனம் உருகும்.
இராமன் கானகம் போன போது சீதையும் கிளம்பி விட்டாள் . அவளுக்கு வேண்டியது செல்வம், பணம், அரசு, ஆள், அதிகாரம் அல்ல. கணவனின் பாராட்டு, அன்பான வார்த்தை. அதற்காக ஆயிரம் துன்பங்களை அவள் சுமப்பாள் , மகிழ்ச்சியோடு.
அவளோடு பேசுங்கள். டீவியை அணைத்து விட்டு அவளோடு பேசுங்கள். அவளுக்கு கேட்க வேண்டும். அவ்வளவுதான்.
செய்து பாருங்கள்.
வள்ளுவர் எந்த அளவுக்கு பெண்ணை புரிந்து வைத்திருக்கிறார் என்று தெரியும்.
பெரிய மனோதத்துவ இரகசியம் சொல்லித் தருகிறார்.
இது சரிதானா என்று இதை வாசிக்கும் பெண் வாசகிகள் சொன்னால் நன்றாக இருக்கும்.
======================================================================
இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ? இது எல்லோருக்கும் தெரிந்தது தான். தன் பிள்ளை பெரிய ஆளாகி விட்டான் என்றால் எல்லா தாயும் மகிழ்ச்சி கொள்வது இயற்கை தானே. இதைச் சொல்ல ஒரு வள்ளுவர் வேண்டுமா ? என்று நாம் நினைப்போம்.
சிந்திப்போம். ஒவ்வொரு வார்த்தையாக சிந்திப்போம்.
ஈன்ற - ஏன் ஈன்ற என்ற சொல்லை போட்டார் ? பெற்ற பொழுதின் என்று சொல்லி இருக்கலாம் தானே ? ஈதல் என்றால் கொடுத்தல். பெறுதல் என்றால் பெற்றுக் கொள்ளுதல். ஒரு தாய் மகனை தருகிறாள். யாருக்குத் தருகிறாள் ? அவளுடைய குடும்பத்துக்கு, அவன் வாழும் சமுதாயத்துக்கு, அவன் வாழும் நாட்டுக்குத் தருகிறாள். தருகிறாள் என்றால் ஏதோ விலைக்கு தருவது இல்லை. ஈதல் என்றால் கொடையாகத் தருதல் என்று பொருள். பெரிய செல்வந்தர்கள் தங்கள் சொத்தில் கொஞ்சத்தை நன்கொடையாக தருவது ஈதல்.
தாய் ஒரு மகனைப் பெறுவது சுயநலத்தால் அல்ல. அவனால் வீடும், நாடும் சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தால். அவள் அவ்வளவு துன்பத்தையும் தாங்கிக் கொண்டு , இந்த நாடும், மனித குலமும் சிறக்க ஒரு மகனைப் பெற்றுத் தருகிறார்கள்.
உலகத்தில் உள்ள அத்தனை பெரியோர்களையும் பெற்றுத் தந்தது ஒரு தாய் தானே ?
ஒரு இராம கிருஷ்ண பரம ஹம்சரை, ஒரு நியூட்டனை, ஒரு வள்ளுவரை, ஒரு கம்பரை, ஒரு தாமஸ் ஆல்வா எடிசனை, காந்தியை , மாணிக்க வாசகரை என்று அத்தனை பெரியவர்களையும் பெற்றுத் தந்தது ஒரு தாய் தானே. அவள் தந்த கொடை தானே. அவள் வலி பொறுக்காமல் இருந்திருந்தால், நமக்கு அவர்கள் கிடைத்து இருப்பார்களா ?
எனவே "ஈன்ற" என்ற சொல்லை போடுகிறார் வள்ளுவர். ஒவ்வொரு தாயும் இந்த உலகுக்கு ஒரு கொடையாளி தான்.
பிள்ளை பெற்றாள் என்று சொல்லக் கூடாது. பிள்ளை ஈன்றாள் என்று சொல்ல வேண்டும்.
பொழுது - ஒரு பிள்ளை பிறந்து, தவழ்ந்து, பேசி, பள்ளிக்கூடம் போய் , இப்படி அவன் செய்யும் ஒவ்வொவரு செயலும் தாய்க்கு மகிழ்ச்சி தருவது தான் . இருந்தாலும், ஏன், அந்த ஈன்ற பொழுதை மட்டும் வள்ளுவர் குறிப்பாகச் சொல்கிறார் ? மற்றைய பொழுதுகள் சிறந்தவை இல்லையா ?
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
பிள்ளை பிறக்கும் அந்த கணம் வரை அவள் தாய் அல்ல. அவள் மகளாக, காதலியாக, சகோதரியாக, மனைவியாக இருக்கலாம். தாய் என்ற நிலை பிள்ளை பெறும் அந்த கணத்தில் நிகழ்வது. அது மட்டும் அல்ல, மற்ற அனைத்து நிலைகளும் அவளால் நிகழ்ந்தவை அல்ல. அவள் யாருக்கோ மகளாகப் பிறந்தாள், சகோதரியாக ஆனால், வாழ்க்கைப் பட்டு மனைவியானாள். அவளுடைய செயல் இதில் மிகக் குறைவு.
ஆனால் , தாய் என்ற ஒரு நிலைக்கு வர, முழுக்க முழுக்க அவள் செய்த அர்பணிப்புகள் ஏராளம்.
தூக்கம் போகும், பசி போகும், உணவை கண்டால் குமட்டும், சாம்பல், மாங்காய் போன்ற சுவை அற்ற உணவு பிடிக்கும், தலை சுத்தும், வாந்தி வரும்...இப்படி எத்தனையோ துன்பங்களை தாங்கி அவள் குழந்தையை பெற்று எடுக்கிறாள். ஈனுகிறாள்.
அது மட்டும் அல்ல, நமக்கு ஒரு தலைவலி, பல் வலி, கண் வலி என்றால் அந்த அவயம் மட்டுமே வலிக்கும். பிள்ளை பேறு என்றால் உடம்பில் அத்தனை அவயங்களும் வலிக்கும்.
"அங்கமெல்லாம் நொந்து" என்பார் பட்டினத்தார். அத்தனை அங்கமும் வலிக்கும்.
எனவே, அந்த ஒரு கணம் பிள்ளை மட்டும் தோன்றவில்லை. ஒரு தாயும் தோன்றுகிறாள். மனைவி என்று இருந்தவள், தாயாக மாறும் தருணம் அந்த பொழுது. எனவே அதை சிறப்பித்துக் கூறுகிறார்.
இன் : ஈன்ற பொழு தின் என்று ஒரு "இன்' என்ற வார்த்தையைப் போடுகிறார். போடாவிட்டால் குறள் எப்படி இருக்கும் ?
ஈன்ற பொழுது பெரிது உனக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்
என்று அமையும்.
அதாவது, மகன் சான்றோன் என்று ஆகி விட்டால், அவன் பிறந்த அந்த நேரத்தை எண்ணி பெரிதும் மகிழுவாள் என்று அர்த்தம் ஆகும். அப்படி என்றால், வேறு எந்த நேரத்தை நினைத்தும் மகிழ மாட்டாள் என்று ஆகும்.
இன் அந்த வார்த்தையால், பொழுதினும் என்று அமைகிறது. மற்ற பொழுதும் மகிழ்தாள் . மற்ற எல்லா நேரங்களை விடவும் ஈன்ற பொழுதில் மகிழ்ந்தாள். ஆனால், சான்றோன் எனக் கேட்ட போது , ஈன்ற பொழுதை விட மிக மகிழ்ந்தாள் என்று ஆகிறது. இன் என்ற ஒரு வார்த்தை செய்யும் மாயம்.
பெரிது - என்ற இந்த வார்த்தை இல்லாவிட்டால் என்ன ஆகும் ? ஈன்ற பொழுதின் உவக்கும் என்று இருக்கும். அப்படி என்றால் மகனின் வாழ்வில் இரண்டே இரண்டு மகிழ்ச்சியான தருணங்கள் தான் இருக்க முடியும். பிறந்த பொழுது, சான்றோன் என்று கேட்ட பொழுது. பெரிது என்ற வார்த்தையால், மற்ற நிகழ்வுகளும் உண்டு, அதை விட பெரிய நிகழ்வு ஈன்ற பொழுது என்று ஆகும்.
உவக்கும் - உவக்கும் என்ற சொல்லுக்கு அளவற்ற மகிழ்ச்சி என்று பொருள்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
என்பார் தொல்காப்பியர்.
கட்டற்ற மகிழ்ச்சி. அன்பு கலந்த மகிழ்ச்சி.
தன் மகனை - அது என்ன தன் மகனை ? வெறுமனே மகனை என்று சொல்லி இருந்தால் போதாதா ?
அவன் சான்றோனாகும் போதுதான் அவனை தன் மகன் என்று ஒரு தாய் நினைப்பாள். பெருமை படுவாள். ஒருவன் களவாணியாக, காமுகனாக, பித்தலாட்டம் செய்பவனாக, தீவிர வாதியாக இருந்தால், அவனை தன்னுடைய மகன் என்று சொல்ல ஒரு தாய் வெட்கப் படுவாள். சொல்லாமல் இருப்பதே நலம் என்று நினைப்பாள். தன்னால், தான் பெட்ற மகனால் இப்படி ஒரு கேடு வந்து விட்டதே என்று நினைத்து வருந்துவாள் . இப்படி ஒரு பிள்ளையை பெறாமலேயே இருந்திருக்கலாம் என்று நினைப்பாள் அல்லவா ? தான் ஒரு மலடியாகவே இருந்து விட்டுப் போய் இருக்கலாம், இப்படி ஒரு பிள்ளையை பெற்றதை விட என்று ஒரு தாய் நினைப்பது இயல்பு தானே.
எனவே தான், "தன் மகனை " என்றார்.
"மகனை" - அது என்ன மகனுக்கு மட்டும் தான் சிறப்பா ? மகள் என்றால் இல்லையா ? மகள் என்பவள் அவளுடைய இளமையான வயதில் திருமணம் முடித்து இன்னொரு வீட்டுக்குப் போய் விடுவாள். அதற்குப் பின் , அவளுடைய சாதனைகள் புகுந்த வீட்டைப் பொறுத்தே அமையும் . அவள் பிறந்த வீட்டார் பங்கு அதில் அதிகம் இருக்காது. ஆனால், மகன் என்பவன் தாயின் இறுதிக் காலம் வரை அவளுடனேயே இருப்பவன். எனவே, மகன் என்றார்.
"சான்றோன்" ஒருவரை புகழ வேண்டும் என்றால் , அவரை சான்றோன் என்று சொன்னால் போதும். அதற்கு மேல் ஒரு உயர்ந்த வார்த்தை கிடையாது. சான்றோன் என்பவன் யார் என்று வள்ளுவர் கூறுகிறார்.
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை
என்ற இந்த ஐந்து குணங்களும் நிறைந்தவனே சான்றோன் ஆவான். அதிலும், முதலில் அன்பைச் சொன்னார் வள்ளுவர்.
"கேட்ட தாய்" ...தன் மகன் பெரிய ஆள் என்று எல்லா தாய்க்கும் ஒரு அபிப்ராயம் உண்டு. அப்படி மற்ற தாய்மார்களும் நினைப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். எனவே, அவன் உண்மையிலேயே சான்றோன் தானா , அல்லது தனது தாய்மை என்ற அன்பினால் அப்படி தோன்றுகிறதா என்ற அவளுக்குத் தெரியாது. எனவே, மற்றவர்கள் உன் மகன் சான்றோன் என்று சொல்லக் கேட்ட தாய் மகிழ்வாள் என்றார்.
அது மட்டும் அல்ல, ஒரு மகன் எவ்வளவு பெரிய ஆளாக ஆனாலும், தாய்க்கு அவன் சின்ன பிள்ளை தான்...நல்லா சாப்பிடு, பார்த்து சாலையை கட என்று அவனுக்கு சின்ன பிள்ளைக்கு சொல்லுவதைப் போல சொல்லுவாள். அது தாய்மையின் குணம். அவன் பெரிய ஆள் என்பதெல்லாம் ஊருக்கு. அவளை பொறுத்தவரை அவன் சிறு பிள்ளை தான். எனவே, மற்றவர்கள் சொல்லும்போது அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.
மேலும், ஒரு மகன் தானே சான்றோன் ஆகி விட முடியாது. "அவையத்து முந்தி இருப்பச் செயல்" தந்தையின் கடமை. எனவே, மகன் சான்றோன் என்றால், கணவன் தன் கடமையை சரி வர செய்திருக்கிறான் என்று பொருள். அவன் அப்படி செய்ய வாழ்க்கை துணைவியான தானும் உறுதுணையாக இருந்திருக்கோம் என்று அவள் நினைப்பாள். ஒரு பெற்றோராக தங்களது கடைமையை தாங்கள் ஒழுங்காக செய்து விட்டோம் என்று மகிழ்வாள்.
ஒரு குறளுக்கு இவ்வளவு அர்த்தம், ஆழம். இப்படி 1330 குறள்.
சிந்திக்க சிந்திக்க ஊற்றெடுக்கும் அர்த்தம்.
நம் முன்னவர்கள் நமக்காக தேடி சேர்த்து வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. படிக்க படிக்க தெவிட்டாத இன்பம் தருகின்றது .இத்தனை சிறிய ரெண்டு வரிகளில் எத்தனை ஆழ்ந்த சிந்தனைகளை திணித்து வைத்திருக்கிறார் வள்ளுவர் என்பதை காணும்போது ஒரு பிரமிப்பையே உண்டாக்கிறது.ஆனால் உங்களுடைய கருத்தை படித்த பிறகுதான் இவ்வளவு விஷயம் இருக்கு என புரிந்தது.
ReplyDelete'எனக்கேட்ட தாய்' வார்த்தைகளில் உள்ள கேட்ட என்ற வார்த்தையில் இவ்வளவு கருத்து செரிவா? நானும் குறளை படிக்கிறேன் மேலெழுந்தவாரியாக ஒரு பயனும் இல்லாமல் அதில் பொதிந்து இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்..அது தவறு .
உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்