Pages

Monday, April 24, 2017

குறுந்தொகை - நல்லை அல்லை

குறுந்தொகை - நல்லை அல்லை 



காதல், அது காலங்களை கடந்து மட்டும் அல்ல, காலங்களுக்கு முன்னாலும் நின்றிருக்கிறது.

குறுந்தொகை காலம்.

இரவு நேரம். நிலவு பால் போல் பொழிகிறது. தலைவி , கானகத்தில் காத்து இருக்கிறாள். தலைவன் வர வேண்டும். வருவான், வருவான் என்று காத்து இருக்கிறாள். நிலவு , பகல் போல் எங்கும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

தலைவன் வரும் வழியில் பெரிய வேங்கை மரங்கள் இருக்கும். அந்த மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடக்கும் . அந்த மரத்தின் அடியில் சில பல பாறைகள் இருக்கும். அந்த பாறைகளின் மேலும் ஒரு சில பூக்கள் உதிர்ந்து இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால், பாறையும், அதன் மேல் இருக்கும் பூக்களும் நிலவொளியில் ஏதோ ஒரு புலிக் குட்டி இருப்பது போலத் தெரியும். தலைவன் அதைக் கண்டு தயங்கலாம் . ஒரு வேளை புலியாக இருக்குமோ என்று நிறுத்தி நிதானித்து வரலாம். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்று நினைக்கிறாள்.

அது மட்டும் அல்ல, இந்த நிலவு இப்படி வெளிச்சம் போட்டு காண்பித்தால்  தங்கள் களவு ஒழுக்கம் வெளிப்பட்டு விடுமே என்று அஞ்சுகிறாள். யாருக்கும் தெரியாமல் , தலைவன் பதுங்கி பதுங்கி வர வேண்டும். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்றும் நினைக்கிறாள்.

நிலவே, நீ ஏன் இப்படி பிரகாசமாக ஒளி வீசுகிறாய். நீ ஒன்றும் நல்லவள் இல்லை என்கிறாள்.

பாடல்

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 
எல்லி வருநர் களவிற்கு 
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 


பொருள்

கருங்கால் = கரிய கால்களைக் கொண்ட மரத்தின் அடி வேர்)

வேங்கை = புலி

வீயுகு = (மலர்கள் ) வீழ்ந்த

துறுகல் =உறு கல் = பெரிய கல்

இரும்புலிக் = கொடிய புலி

குருளையிற் = குட்டியைப் போல

றோன்றுங் = தோன்றும்

காட்டிடை  = காட்டில்

எல்லி = இரவில்

வருநர் = வரும் அவர்

களவிற்கு = களவு ஒழுக்கத்துக்கு

நல்லை யல்லை = நல்லது அல்லை . நல்லவள் அல்லை

நெடு = நீண்ட

வெண் ணிலவே = வெண் நிலவே


அது நிலவுக்குச் சொன்னாலும், தலைவனுக்கும் சொன்னது தான்.

காடு  பயங்கரமான இடம். உண்மையிலேயே புலி இருந்தாலும் இருக்கும். யாரும் பார்த்து விடலாம். காலா காலத்தில் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லாமல்  சொன்னது.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு இந்த பாடலை படிக்கும் போது ஒரு லேசான பதற்றமும், பரிதாப உணர்ச்சியும் வருகிறது.

காட்டில் ஒரு இளம் பெண்ணை வரச் சொல்லி விட்டு , கால தாமதம் செய்யும் தலைவன். நினைத்துப் பார்த்தால் , பதறத்தான் செய்கிறது மனம்.  கள்ளர் பயம், புலி பயம் அந்த பெண்ணுக்கு மட்டும் இருக்காதா ?

அவளுக்கு அவன் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இரவில் வந்து அவனுக்காக காத்திருப்பாள் ?

அது மட்டும் அல்ல, காலம் தாழ்த்தி வரும் அவன் மேல் அவளுக்கு கோபம் இல்லை. நல்லை இல்லை என்று நிலவை சாடுகிறாள்.

எந்தக்  காலத்தில் பெண்ணின் தவிப்பு ஆணுக்கு புரிந்திருக்கிறது ?

சங்க காலம் தொட்டு , இன்று வரை, பெண்ணை புரிந்து கொள்ளாமலே தான் ஆண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




3 comments:

  1. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருந்தால் இல்வாழ்க்கையாய் மாறிவிடும்;
    ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததால் காதலாகி உள்ளது.

    ReplyDelete
  2. தலைவன் நேரம் தாழ்த்தி வருவதால் இந்தப் பெண் மனதில் என்னவெல்லாம் கற்பனைகள், கவலைகள்!

    மேலே திரு பதுமநாபன் இராமசுவாமி எழுதியது வேடிக்கையாக இருக்கிறது. காதலுக்கும் கல்யாணத்துக்கும் இதுதான் வேறுபாடா?!

    ReplyDelete
  3. தெளிய வைக்கிறது ஆண் என்னும் ஆட்டகாரனின் அவல நிலையை.

    ReplyDelete