Pages

Thursday, April 6, 2017

இராமாயணம் - முடிய நோக்கினான்

இராமாயணம் - முடிய நோக்கினான் 


கானகத்தில் இராமனைக் காண பரதன் வந்திருக்கிறான். இராமனிடம் அரசைத் திருப்பி தர வேண்டும் என்பது பரதனின் எண்ணம். அப்படி வந்த பரதனை இராமன் காண்கிறான்.

"பரதன் இராமனை நோக்கி வருகிறான். இரண்டு கைகைளையும் உயர தூக்கி வணங்கியபடி, வாடிய உடல், அழுது அழுது சோர்ந்த கண்கள், துன்பம் என்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்த பரதனை , அனைத்தும் உணர்ந்த இராமன் கண்டான் "

பாடல்


தொழுது உயர் கையினன்,
    துவண்ட மேனியன்,
அழுது அழி கண்ணினன்,
    ‘அவலம் ஈது ‘என
எழுதிய படிவம் ஒத்து,
    எய்துவான் தனை,
முழுது உணர் சிந்தையான்
    முடிய நோக்கினான்.

பொருள்

தொழுது = வணங்கிய

உயர் கையினன் = தலைக்கு மேல் உயர்ந்த கைகளோடு

துவண்ட மேனியன் = சோர்ந்த உடலோடு

அழுது அழி கண்ணினன் = அழுததனால் அழகு அழிந்த கண்களோடு

‘அவலம் ஈது ‘என = துன்பம் என்றால் இது என்று

எழுதிய படிவம் ஒத்து = வரைந்த ஒரு ஓவியம் போல

எய்துவான் தனை = வந்தவன் தன்னை

முழுது உணர் சிந்தையான் = அனைத்தும் உணர்ந்த  அறிவைக் கொண்ட இராமன்

முடிய நோக்கினான் = தீர்க்கமாக பார்த்தான்.

துன்பத்தின் மொத்த உருவமாக பரதன் வந்து நின்றான்.

பரதனுக்கு அப்படி என்ன துன்பம் வந்து விட்டது ?

பெரிய அரசு கிடைத்து இருக்கிறது. சக்கரவர்த்தி ஆகிவிட்டான். இது ஒரு துன்பமா ? அதுக்கு போய் யாராவது அழுவார்களா ? வேண்டாம் என்றால் இராமனிடம்  திருப்பி கொடுத்து விட வேண்டியது தானே. அதற்குத்தான் வந்திருக்கிறான்.

பின் எதற்கு இந்த துன்பக் கோலம் ?

அறமல்லாத வழியில் வந்த செல்வத்தால் வந்த துன்பம். நமக்கு சொந்தமில்லாத ஒன்று நம்மிடம் வந்து விட்டால், அதை உரியவர்களிடம் சேர்ப்பிக்கும் வரை  துன்பப் பட வேண்டும்.  வந்து கேட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று  இருக்கக் கூடாது. இருக்கின்ற வேலை எல்லாம் போட்டு விட்டு , இராமனைத் தேடி காடு வந்தான் பரதன். அரசை அவனிடம் ஒப்படைக்க. ஒழுக்கத்தின் உச்சம் தொட்டு நிற்கிறான் பரதன்.

இரண்டாவது, இப்படி ஒரு அரசை பரதன் ஏற்றுக் கொண்டானே என்று உலகம் பழிக்கும் என்ற வருத்தம். தவறான காரியத்தை செய்தால் உலகம் பழிக்கும். சான்றோர் பழிப்பர் என்று பழிக்கு அஞ்சிய துயரம் அது.

மூன்றாவது, தன்னால் , உடன் பிறந்த இராமனும், இலக்குவனும் அவர்களோடு சேர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் சீதையும் துன்பப் படுகிறார்களே என்று  நினைத்து வந்த துன்பம் பரதனுக்கு. நம்மால் மற்றவர்களுக்கு துன்பம் என்றால் அது எவ்வ்ளவு பெரிய துக்ககரமான செயல்.

நான்காவது, இராமன் மேல் கொண்ட பாசம். அரசு வேறு யாருக்கோ சொந்தம் என்றால் இவ்வளவு துக்கம் இருக்காது. அண்ணன் இராமன் மேல் தீரா காதல்  கொண்டவன் பரதன். அவனுக்கு சேர வேண்டிய அரசை அல்லவா தான் ஏற்கும் படி வந்து விட்டது என்று மனம் நெகிழ்ந்த சோகத்தில் வந்தது அந்த துக்கம்.

பிறர் பொருளுக்கு ஆசைப் படக் கூடாது. அது முறையான வழியில் வந்தால் கூட. நமக்கு அது உரிமையானது இல்லை என்றால் அதைத் தீண்டக் கூடாது.

அண்ணன் தம்பி பாசம் விட்டுக் கொடுத்து ஒருவர் சந்தோஷத்தில் மற்றவர் இன்பம் காண வேண்டும்.

அறத்தையும் அன்பையும் காட்டி நிற்கும் பாத்திரம் பரதன்.

பரதனிடம் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.





3 comments:

  1. அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இந்த blog-இல், பரதனைப் பற்றிப் படிக்கப் படிக்க, அவன் இராமனை விடச் சிறந்தவன் என்ற எண்ணம் வருகிறது. என்ன அருமையாகக் கம்பர் எழுதியிருக்கிறார்!

    மிக அருமையான விளக்கத்துக்கு நன்றி.

    ReplyDelete