இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - சீதையின் துயரம்
தயரதன் இறந்த செய்தியை பரதன் சொல்லக் கேட்ட இராமன் துக்கத்தால் மயங்கி விழுகிறான். பின் மயக்கம் தெளிந்து எழுகிறான். அவனைத் தேற்றி, அவனுக்குப் பல அற உரைகள் கூறுகிறார் வசிட்டர். பின், தயாராதனுக்கு நீர் கடன் செய்கிறான் இராமன்.
பின், பர்ண சாலையை அடைந்து சீதையிடம் தயரதன் இறந்ததைப் பற்றி கூறுகிறான். அதைக் கேட்ட சீதை துக்கம் அடைகிறாள். கண்ணீர் விடுகிறாள்.
பாடல்
துண்ணெனும் நெஞ்சினாள் ; துளங்கினாள்; துணைக்
கண் எனும் கடல் நெடுங் கலுழி கான்றிட,
மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள்,
பண் எனும் கிளவியால் பன்னி, ஏங்கினாள்.
பொருள்
துண்ணெனும் நெஞ்சினாள் = மனதில் துணுக்குற்று
துளங்கினாள் = துவண்டாள்
துணைக் = துணை உடைய (இரண்டு)
கண் =கண்கள்
எனும் = என்ற
கடல் = கடல்
நெடுங் =பெரிய
கலுழி = கலங்கிய நீர்
கான்றிட = அருவி போல் பொழிந்திட
மண் எனும் = மண் என்ற
செவிலிமேல் = செவிலித் தாய் மேல்
வைத்த கையினாள் = கையை வைத்து , தன்னைத்தானே தாங்கிக் கொண்டு
பண் எனும் கிளவியால் = இனிய குரலில்
பன்னி,= புலம்பி
ஏங்கினாள் = ஏங்கினாள்
மாமனார் இறந்த செய்தியைக் கேட்ட மருமகள் வருந்தினாள். இதுதான் செய்தி.
இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். இதைப் போய் பெரிய செய்தி என்று கம்பன் வேலை மெனக்கெட்டு ஒரு பாடல் போடுகிறானே என்று நாம் நினைக்கக் கூடும்.
காரணம் இருக்கிறது.
சீதை அரச குமாரி. செல்லமாக வளர்ந்தவள். காடு என்றால் என்ன என்று கூடத் தெரியாது.
வந்த இடத்தில் ஏதோ குடும்பப் பிரச்சனை. கைகேயி ஏதோ வரம் கேட்டாள். இராமனுக்கு வர வேண்டிய அரசு போனது. அவனை காட்டுக்கும் அனுப்பி விட்டாள் . இராமன் கூடவே சீதையும் கிளம்பி வந்து விட்டாள் .
ஒரு நிமிடம் சீதையின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
அரச வாழ்வை துறந்து, மர உரி உடுத்து கானகம் வந்தவளின் மன நிலை எப்படி இருக்கும் ? தயரதன் மேலும், கைகேயி மேலும், பரதன் மேலும் கோபம் வருமா வராதா ? எல்லோரும் சேர்ந்து தன்னையும் தன் கணவனான இராமனையும் இப்படி செய்து விட்டார்களே என்று தோன்றுமா இல்லையா ?
கோபம் இல்லாவிட்டால் கூட, "எனக்கு செய்த துன்பங்களுக்கு ஆண்டவன் தயரதனுக்கு தண்டனை கொடுத்தான் " என்று மனதுக்குள் நினைக்கலாம் அல்லவா ?
ஒரு சாதாரண பெண் என்றால் அப்படித்தான் நினைத்து இருப்பாள். நினைத்தால் அதை தவறு என்று சொல்ல முடியாது.
திருமணம், பண்டிகை போன்ற நாட்களில் வீட்டில் சில பெண்கள் இருந்தால், ஒருத்திக்கு கொஞ்சம் உயர்ந்த விலையில் ஒரு பட்டுச் சேலையும் இன்னொரு பெண்ணுக்கு கொஞ்சம் விலை குறைந்த பட்டுச் சேலையும் எடுத்தால் , விலை குறைந்த சேலை பெற்ற பெண்ணின் மனம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும்.
பட்டுச் சேலை தான். கொஞ்சம் விலை வித்தியாசம் அவ்வளவுதான். இருந்தும் மனம் அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
ஆனால், சீதை அப்படி நினைக்கக் கூட இல்லை. பண்பின் உச்சம் தொடுகிறாள்.
இறந்து போன தயரதனுக்காக வருந்தி அழுகிறாள்.
குடும்பத்தில் பிரச்சனைகள் வரும்.
ஒருவருக்கு கூட வரும். இன்னொருவருக்கு குறைச்சல் வரும். பெண்கள் அனுசரித்துப் போக வேண்டும். வித்தியாசங்களை ஊதி ஊதி பெரிசாக்கி குடும்பத்தில் பிளவை உண்டு பண்ணி விடக் கூடாது.
இராமனுக்கு வர வேண்டிய அரசை பரதனுக்கு கொடுத்தான் தயரதன். இராமன் அதை ஏற்றுக் கொண்டான். இராமன் ஏற்றுக் கொண்டதால் சீதையும் அதை முழு மான்தோடு ஏற்றுக் கொண்டாள்.
கணவன் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதற்கு துணை போக வேண்டும். "நீ வேணும்னா காட்டுக்குப் போ, என்னால் வந்து அங்கு கஷ்டப் பட முடியாது " என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.
தயரதன் இறந்த செய்தி கேட்டு , அப்பாடா சிக்கல் தீர்ந்தது. பரதன் அரசை தர வந்திருக்கிறான் என்று நினைத்து இராமனை தனியாக அழைத்து "பேசாமல் அரசை ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் அயோத்தி போகலாம் ..." என்று சொல்லவில்லை.
இறந்த தயராதனுக்காக அழுகிறாள்.
பெண்களுக்கு பாடம் சொல்லித் தருகிறான் கம்பன். குடும்பத்தை எப்படி மேலே எடுத்துச் செல்ல வேண்டும் என்று.
பெண்கள் மனது வைக்காமல் குடும்பம் ஒரு அடி கூட மேலே போக முடியாது. மாமியார் கொடுமைக் காரியாக இருக்கலாம். கைகேயி போல. மாமியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாமனார் ஆடலாம். தயரதன் போல. அப்பா அம்மா சொல்லை கேட்டு, மறு பேச்சு கேட்காமல் கணவன் இருக்கலாம். இராமனைப் போல.
மனைவி என்ன செய்ய வேண்டும் என்று சீதையின் வாயிலாக கம்பன் காட்டுகிறான்.
பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.
சீதை மட்டும் கொஞ்சம் முரண்டி இருந்தால் , இராமனுக்கு ஒரு துளி பெருமையும் வந்திருக்காது.
அது இராமாயணம் அல்ல. சீதாயணம் என்பதே பொருத்தமான பெயர்.
No comments:
Post a Comment