Pages

Wednesday, May 24, 2017

திருக்குறள் - அகர முதல் எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல் எழுத்து எல்லாம் 



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

முதற்றே உலகு என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்து எப்படி பொருள் தந்தது என்று நேற்றைய பிளாகில் பார்த்தோம்.

ஆதி பகவன் என்றால் என்ன என்று இன்று சிந்திப்போம்.

அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.

முதலில் ஒலி வடிவம்.

பின் ஒலியைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள்.

முதலில் எழுத்து.

எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.

சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.

மற்றவற்றை  விடுவோம். சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாவதைப் பற்றி சிந்திப்போம்.

இரண்டு சொற்களை சேர்க்க சில விதி முறைகள், இலக்கணங்கள் உண்டு.

வீடு காட்டும் போது இரண்டு செங்கலை வைத்தால் அவை தானாக ஒட்டிக் கொள்ளாது. அதை சேர்த்து வைக்க சிமெண்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு கலவை வேண்டும். அப்போது தான் அது விழுந்து விடாமல் உறுதியாக இருக்கும்.

அது போல

இரண்டு வார்த்தைகளை சேர்க்கும் சிமென்டுக்கு தொகைமொழி என்று பெயர்.

தொகுக்கும் மொழி தொகை மொழி.

புரிகிறது அல்லவா ?

தமிழிலே ஆறு வகையான தொகை மொழிகள் இருக்கின்றன.

1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை

இதில் நாம் பண்புத் தொகையை மட்டும் பார்ப்போம் .

ஒரு பொருளை அல்லது செயலை மேலும் விளக்கி கூறுவது பண்புத் தொகை.

உதாரணமாக

பச்சை இலை  என்றால் இலையின் நிறம் பச்சை என்று இலையைப் பற்றி மேலும் விலக்கிக் கூறுகிறது.

உயர்ந்த மரம்

கரிய மலை

இவை எல்லாம் பண்புத் தொகைகள்.

இதில் உள்ள பச்சை, உயர்ந்த, கருப்பு என்பவை பண்புப் பெயர்கள்.

சில சமயம் பண்புப் பெயருக்கு பதிலாக இன்னோர் பெயர்ச் சொல் வரும்.

தாமரைப் பூ
தென்னை மரம்
நாகப் பாம்பு

என்பனவற்றில் தாமரை என்ற சொல் பூவைப் பற்றி மேலும் விளக்குகிறது.

வெறும் மரம் என்று சொன்னால் என்ன மரம் என்ற கேள்வி வரும். அதை விளக்குவது தென்னை என்ற சொல். இங்கே தென்னை என்ற சொல் மரத்தின் பண்பை குறிக்கிறது. தென்னை என்பது பண்புப் பெயர் அல்ல. இருந்தும் அது பண்புப் பெயரின் வேலையைச் செய்கிறது அல்லவா.

இதற்கு இரு பெயரொட்டு பண்புத் தொகை என்று பெயர்.

இரண்டு பெயர்கள் சேர்ந்து வந்து, அதில் ஒன்று மற்றொன்றின் பண்பைக் குறிப்பது.

இருபெயரொட்டு பண்புத் தொகையை பிரிக்கக் கூடாது. அவற்றை சேர்த்தே படிக்க வேண்டும்.

சரி, அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?

ஆதி பகவன் என்ற சொல்லில், பகவன் என்றாலே ஆதியில் இருந்து இருப்பவன் தான். ஆதி என்றாலே அது இறைவனைத் தான் குறிக்கும்.

ஆதி மூலமே  என்ற அந்த யானை அழைத்தது நினைவு இருக்கிறது அல்லவா.

ஆதி பகவன் என்பது இரு பெயரொட்டு பண்புத் தொகை.

இரண்டும் ஒன்றையே குறிப்பது.

பகவன் என்றால் வேறு ய யாரையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. பலப் பல சமயங்கள் பின் நாளில் தோன்றலாம். ஒவ்வொரு சமயமும் புதுப் புது கடவுள்களை பற்றிக் கூறலாம்.

அவையெல்லாம் கருத்தில் கொள்ளக் கூடாது.

ஆதி பகவன் எவனோ அவனே உலகுக்கு முதல்.

இரு பெயரொட்டு பண்புத் தொகை பற்றி அறிந்தால் இந்த குறளை மேலும் நாம் இரசிக்க முடியும்.

இலக்கியத்தை ஆழ்ந்து அறிய இலக்கணம் அவசியம். 

3 comments:

  1. அற்புதமாக இருந்தது உங்கள் விளக்கம். முதற்கண் இலக்கணம் படிக்க மிக்க அவா.

    ReplyDelete
  2. இந்தக் குறளைப் பற்றிய மூன்று blog-களுமே நன்றாக இருந்தன. இப்படி ஆழமாக இதுவரை புரிது படித்ததில்லை.நன்றி.

    ReplyDelete
  3. பகம். பகவன். பகவதி. பகவான்.
    வியாசர் எழுதிய புராணங்களில் இதை விளக்கி உள்ளார்.
    உங்கள் பதில் வந்த பின் மேல் கொண்டு பகிரலாம்...

    ReplyDelete