திருக்குறள் - அமிழ்தின் இயன்றன தோள்
வெயில் காலத்தில் செடிகள் எல்லாம் வாடி நிற்பதை பார்க்கலாம். மாலை நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால் அவை சிலிர்த்து கொண்டு தள தள என்று பச்சை பசேல் என்று ஒரு புத்துணர்ச்சியோடு சிரிப்பது போல இருக்கும். செடிக்கு நீர் வார்த்தவர்களுக்குத் தெரியும் அது.
கணவன் எப்போதெல்லாம் தளர்ந்து, சோர்ந்து போய் இருக்கிறானோ, அப்போது அவன் புத்துணர்ச்சி பெற அவனுடைய மனைவியின் தோள்களே அமிழ்தம் போன்றது என்கிறார் வள்ளுவர்.
பாடல்
உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான், பேதைக்கு
அமிழ்தின் இயன்றன, தோள்.
பொருள்
உறுதோறு = உறு + தோறும் = சேரும் போது எல்லாம்
உயிர் = உயிரானது
தளிர்ப்பத் = தளிர்க, துளிர்க்க
தீண்டலான் = தீண்டுவதால்
பேதைக்கு = எங்கே பெண்ணுக்கு , மனைவிக்கு
அமிழ்தின் = அமிழ்தில்
இயன்றன = செய்யப்பட்ட
தோள் = தோள்
காமத்துப் பால் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை சொல்ல வந்த பகுதி. ஒரு எல்லைக்கு மேல் விவரித்தால் விரசத்தின் எல்லைக்குள் போய் விடும். அதற்காக சொல்லாமலும் விட முடியாது. கத்தி மேல் நடப்பது போன்ற காரியம்.
வள்ளுவரின் காமத்துப் பாலை ஒரு தந்தையும் மகளும் ஒன்றாகப் படிக்கலாம். தாயும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்லித் தரலாம்.
படிக்கும் போது இன்பம் தரும். ஆனால், விரசம் என்பது ஒரு துளியும் இருக்காது.
"தளிர்ப்ப" என்ற ஒரு சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தங்களை வைக்கிறார் வள்ளுவர் என்று பார்ப்போம்.
செடி வாடும். நீர் வார்த்தால் தளிர்க்கும். அதற்காக இருக்கிற நீரை எல்லாம் ஒரே நாளில் ஊற்றி விட்டு, நீ பார்த்து வளர்ந்து கொள் என்று சொல்ல முடியாது. நிதமும் கொஞ்சம் கொஞ்சம் நீர் வார்க்க வேண்டும். மனைவியின் அன்பும் அப்படித்தான். ஏதோ ஒரு நாள் சந்தோஷமாக இருந்தால் போதாது. நாளும் நீர் வார்ப்பது போல அது எப்போதும் வேண்டும்.
தளிர்த்தல் என்றால் புத்துணர்ச்சி பெறுதல் மட்டும் அல்ல. நீர் வார்த்தால், வேரின் மூலம் சத்துகளை உறிஞ்சி அந்த செடியை உரம் கொள்ளச் செய்யும். வலிமை கொள்ளச் செய்யும். செடி வளர்ந்து , மரமாகி, நிழல் தரும், காய் கனிகளை தரும். அது போல, மனைவியின் அன்பானது கணவன் வலிமை பெற உதவும். அவன் உயர்ந்து வீட்டையும், நாட்டையும் காக்க பயன் படுவான்.
நீரை வேருக்கு மட்டும் ஊற்றினால் போதும். ஆனால், செடியின் இலையின் மேல் தெளித்தால் அது சிலிர்த்து புத்துணர்ச்சி பெரும். அது போல அன்பு என்பது ஏதோ கடைமைக்கு இருக்கக் கூடாது. செலுத்தும் அன்பினால் கணவன் முகம் மலர வேண்டும்.
உறு தோறும் என்கிறார் வள்ளுவர். ஒவ்வொரு முறை அணைக்கும் போதும் புத்துணர்ச்சி தருமாம். தவிர்க்க வைக்குமாம்.
மனைவி என்பவை அமுதுக்கு ஒப்பானவள் என்று கணவன் நினைக்க வேண்டும்.
அமுதம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க மனைவியும் முயற்சி செய்ய வேண்டும். அமிலம் போல, சுடு நீர் போல இருக்கக் கூடாது. சுடு நீரில் செடி தளைக்குமா ?
அமிழ்து என்பது உயிரையும் உடலையும் இணைப்பது. எப்போதும் இளமையோடு வைப்பது. மனைவியின் தோள்கள் அமுதத்தால் செய்யப்பட்டது என்கிறார் வள்ளுவர்.
சரி, அது என்ன "தோள் " என்று சொல்கிறார். தோள்கள் என்றல்லவா இருந்திருக்க வேண்டும். ஒரு தோள் மட்டும் எப்படி அமுதில் செய்யப்பட்டதாக இருக்கும் ?
இங்கு கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.
பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று தமிழ் இலக்கணத்தில் ஒன்று உண்டு.
என்ன இது ஏதோ வேற்று மொழிப் பெயர் மாதிரி இருக்கிறதா ?
தமிழில் பெயர் சொற்களை உயர் திணை , அஃறிணை என்று இரண்டாக பிரிப்பார்கள்.
பெயர் சொல்லின் இறுதி (விகுதி) பொதுவாக பால் எது என்று காட்டும்.
அவன் என்றால் அதில் உள்ள இறுதிச் சொல் 'ன்' அது அது ஆண் பால் ஒருமை என்று காட்டும்.
அவள் என்றால் பெண்பால் ஒருமை
ஒருமையா பன்மையா, ஆண்பாலா பெண்பாலா எ ன்று உயர் திணையில் அறிய வாய்ப்பு உள்ளது.
ஆனால், அஃறிணையில் அப்படி இல்லை.
அஃறிணை சொற்கள் பால் எது என்று காட்டாது.
பாலை பகராத சொற்கள் அவை.
உதாரணமாக
ஆடு வந்தது என்றால் ஒருமை
ஆடு வந்தன என்றால் பன்மை
அது ஆடு என்றால் ஒருமை
அவை ஆடு என்றால் பன்மை
வினை மற்றும் அதற்கு தொடர்புடைய சொல்லால் அவற்றின் பாலை (ஒன்றன் பாலா, பலவின் பாலா ) என்று அறிந்து கொள்ள முடியும்.
அது போல, தோள் என்பது பால் பகா அஃறிணை சொல். ஒரு தோளை மட்டும் அணைக்க முடியாது அல்லவா, அதனால் அவை தோள்கள் என்று அறியப் படும்.
அருமையான, பசுமையான எண்ணங்களைத் தூண்டும் குறள்!
ReplyDeleteமனைவி மனம் வாடி இருந்தால், கணவனின் செய்கையின் தன்மை என்ன என்பதற்கு ஏதாவது குறள் இருக்கிறதா?
இன்னொரு சந்தேகம். "ஆடு" என்பதும் "ஆடுகள்" என்பதும் ஒன்றானால், "ஆடுகள்" என்பதன் அவசியம் என்ன? எப்போதுமே "ஆடு" என்று சொல்லி விடலாமே?