Pages

Sunday, May 7, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எது துணை

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எது துணை 


கானகம் சென்ற இராமனை கண்டு அவனிடம் அரசை மீண்டும் தர வந்தான் பரதன். வந்த இடத்தில் தயரதன் இறந்த செய்தியை சொல்கிறான் பரதன். அதை கேட்ட இராமன் மயங்கி விழுகிறான். அவனை மயக்கம் தெளிவித்து அவனுக்கு எல்லோரும் தேறுதல் கூறுகிறார்கள்.

மரணத்தின் தன்மை பற்றி வசிட்டன் கூறத் தொடங்குகிறான். ஆழ்ந்த கருத்து உடைய ஏழு பாடல்கள்.

அதில் முதல் பாடல்.

"மறை நூல்களின் எல்லை கண்ட நீ (இராமா), இறப்பும் பிறப்பும் உயிர்களுக்கு இயற்கையானது என்பதை எப்படி மறந்தாய் ? மனிதனுக்கு இல்லறம் , துறவறம் தவிர வேறு ஒரு துணையும் இல்லை "

என்றான்.

பாடல்

துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்
     வரம்பு கண்ட நீ?


பொருள்


துறத்தலும் = துறவறமும்

நல் அறத் துறையும் = நல்ல அறத்தின் துறையும்

அல்லது = அல்லாமல்

புறத்து = வெளியே

ஒரு துணை இலை = ஒரு துணையும் இல்லை

பொருந்தும் = பொருந்திய

மன்னுயிர்க்கு =நிலைத்த உயிர்களுக்கு

“இறத்தலும் = இறப்பதும்

பிறத்தலும் = பிறப்பதும்

இயற்கை” என்பதை =இயற்கையானது என்பதை

மறத்தியோ, = மறந்து விட்டாயா ?

மறைகளின் = மறை நூல்களின்

வரம்பு கண்ட நீ? = எல்லையை கண்ட நீ


இறப்பதும் பிறப்பதும் இயற்கைதான். நாம் தினமும் காண்கிறோம். இருந்தும் நெருங்கிய ஒருவர் இறந்து போனால் துக்கம் வருகிறது. ஆனானப்பட்ட இராமனே மயங்கி  விழுகிறான். புலம்புகிறான்.

மறைகளின் எல்லை கண்டவனுக்கே அப்படி என்றால் நாம் எம்மாத்திரம் ?

துன்பம் ஏன் வருகிறது ? பற்றினால் துன்பம் வருகிறது.

அப்படி என்றால் பற்று இல்லாமல் இருக்க முடியுமா ? பற்றற்று இருக்க நாம் எல்லாம் என்ன துறவிகளா ? சாமியார்களா ? எல்லோரும் துறவியாக முடியுமா ?

வசிட்டன் சொல்லவந்தது அது அல்ல.

நாம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துகிறோம். அப்படி யார் மேல் அன்பு செலுத்துகிறோமோ அவர்கள் இறந்து போனால் நமக்கு துன்பம் வருகிறது.

சற்று யோசிப்போமா ?

நாம் அன்பு செலுத்துபவர் இறந்து போனால் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்த முடியாதா ? ஏன் அந்த ஒருவர் மேல் மட்டும் அன்பு செலுத்த வேண்டும் ? மற்றவர்கள் மேல் அன்பு செலுத்த முடியாதா ?

உண்மை என்ன என்றால் , நாம் அன்பு செலுத்துவதில் இல்லை சிக்கல். அன்பை பெறுவதில். யார் இறந்து போனாரரோ அவரிடம் இருந்து அன்பு நமக்கு கிடைக்காது. அவர் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் நமக்கு துணையாக இருந்து இருக்கிறார். அந்த துணை இப்போது போய் விட்டது.

நாம் அன்பு செலுத்தவும், நாம் அன்பை பெறவும், வேறு ஏதோ ஒரு விதத்திலும் அவர் நமக்கு துணையாக இருந்திருக்கிறார். அந்த துணை போய் விட்டதால் துக்கம்.

வசிட்டர் சொல்கிறார், மனிதனுக்கு இரண்டே துணைகள்தான் உண்டு.

ஒன்று , அற வழியில் செல்லுதல். பின்னால் துறவறம் என்று சொல்லுவதால், முதலில் உள்ள அறத்தை இல்லறம் என்று கொள்ளலாம். 

இன்னொன்று, துறவறம்.

இல்லறம், துறவறம் இது இரண்டும்தான் துணை.

இல்லறம் என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள் இது தானே. அப்படி என்றால் அவர்கள் துணை தானே. அவர்கள் இல்லாமல் போனால் துன்பம் வராதா ?

இல்லறம் என்றால் இல்லம் + அறம். இல்லத்தில் இருந்து செய்யும் அறம்.

அதையும் காலத்தில் விட்டு விட்டு துறவறம் மேற் கொள்ள வேண்டும். துறவு + அறம்.

அறம் ஒன்றுதான் துணை. வேறு எதுவும் துணை இல்லை.



"துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது"

அது என்ன "நல் அறத் துறை"

ஆறு போய் கொண்டே இருக்கும். அங்கங்கே படிகள் அமைத்து மக்கள் ஆற்றில் இறங்கி நீராடுவார்கள். அதற்கு படித்துறை என்று பெயர்.

அறம் என்ற ஆறு ஓடிக் கொண்டே இருக்குறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இறங்கி அந்த அறத்தை அறிகிறார்கள். படித்துறை போல அது அறத்துறை.

அது மதமாக இருக்கலாம், கொள்கையாக இருக்கலாம், அவரவர் விரும்பும் தர்மமாக இருக்கலாம், செய்யும் வேலையாக இருக்கலாம்...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அறத்தின் ஏதோ ஒரு கூறு. (துறை என்றால் department என்று இப்போது வைத்து இருக்கிறார்கள்.)

சைவத் துறை விளங்க என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

வேத நெறி தழைத்து ஓங்க, மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.

சைவம் ஒரு துறை. வைணவம் ஒரு துறை. கிறித்துவம் ஒரு துறை.

அறத்தின் ஏதோ ஒரு துறையைப் பற்றிக் கொள்ள வேண்டும். அது தான் நமக்குத் துணை.

நாம் எதை துணை என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். 

1 comment:

  1. இந்த விளக்கத்தில் "இறந்தவர்மேல் நாம் அன்பு செலுத்துவதால் வருந்துவதில்லை; அவரிடம் ஒருந்து கிடைத்து வந்த ஒன்று கிடைக்காமல் போகிறதே என்பதால் வருந்துகிறோம்" என்பது அருமையான நுட்பமான செய்தி.

    ஆனால், இந்தப் பாடலில், முதலில் சொன்ன அறம் இல்லறம் என்று கொள்ளத் தேவை இல்லை. இறப்புக்கும் பிறப்புக்கும் முன்னால், அறவழியில் நிற்பதுவும், கடைசியில் எல்லாம் துறப்பதுவுமே நமக்குத் துணை என்பதே போதுமான பொருத்தமான பொருள் என்று எண்ணுகிறேன்.

    என்ன பொருள் செறிந்த பாடல்! விளக்கியதற்கு நன்றி. இந்த BLOG இல்லாவிட்டால் நாம் இந்தப் பாடல்களை எங்கே படிக்கப்போகிறோம்?! நன்றி. வாழ்க.

    ReplyDelete