Pages

Monday, June 19, 2017

கந்தர் அநுபூதி - குறியை குறியாது

கந்தர் அநுபூதி  - குறியை குறியாது 


ஒரு ஊரில் இருந்து , இன்னொரு ஊருக்குப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் செல்லும் ஊர் தாங்கிய பெயர் பலகைகள் இருக்கும். சில சமயம் அந்த பெயருக்கு பக்கத்தில் அந்த ஊர் இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்றும் எழுதி இருக்கும்.

அதை காணும் போது , நாம் சரியான வழியில் தான் செல்கிறோம், வழி தவறி விடவில்லை என்று நமக்குத் தெரிய வரும்.

உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் "கன்னியாகுமாரி" என்று பெயர் பலகை இருக்கும்.

உடனே, "ஓ, இதுதான் கன்யாகுமாரியா " என்று அங்கேயே இறங்கி விடக் கூடாது. அப்படி இறங்கினால் அது எவ்வளவு நகைப்புக்கு உரிய ஒன்றாக இருக்கும். அப்படி இறங்கிய ஒருவரிடம், "இது கன்னியாகுமாரி இல்லை. இது விழுப்புரம். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் " என்று கூறினால், "அப்ப ஏன் கன்னியாகுமாரி என்று இங்கே எழுதி இருக்கிறது " என்று சண்டை பிடித்தால், அந்த ஆளை நாம் என்னவென்று நினைப்போம்.

அவனை பித்தன், பேதை என்று சொல்வதற்கு முன்னால் , சற்று நிதானியுங்கள்.

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்.

இறைவனை அடைய பல குறியீடுகள், இருக்கின்றன. பூஜை செய்வது, கோவிலுக்குப் போவது,  அவன் மேல் உள்ள பாடல்களை படிப்பது, திருநீறு, திருமண்  இட்டுக் கொள்வது, விரதம் இருப்பது என்று பல இருக்கின்றன. இவை ஒரு குறியீடுகள் மட்டுமே. "கன்னியாகுமாரி " என்று பெயர் பலகை இருப்பது போல.

குறியீடுகளை தாண்டி அவற்றின் ஆழ்ந்த அர்த்தங்களை புரிந்து கொண்டு , மேலே செல்ல வேண்டும். கோவில் என்றால் என்ன, சிலைகள் ஏன், பாடல்கள் எதற்கு, சமய சின்னங்கள் எதற்கு என்று அறிந்து, அவை நம்மை எங்கே செலுத்த  முனைகின்றன என்று அறிந்து அங்கே செல்ல வேண்டுமே ஒழிய , குறியீடுகளையே  பற்றிக் கொண்டு இதுதான் முடிவு என்று இருக்கக் கூடாது.

கன்னியாகுமரிக்கு போக வேண்டும் என்றால், அந்த பெயர் பலகை காட்டும் திசையில் செல்ல வேண்டும். அந்த பெயர் பலகையை கட்டிக் கொண்டு அங்கேயே இருந்து விடக் கூடாது.


மருத்துவர் ஒரு மருந்தை சீட்டில் எழுதி, "இதை மூன்று வேளை சாப்பிடுங்கள்" என்றால், அதில் உள்ள மருந்தை மூன்று வேளை சாப்பிட வேண்டும். எழுதிக் கொடுத்த  காகிதத்தை துண்டு துண்டாக்கி மூன்று வேளை சாப்பிடக் கூடாது.  மருந்து சீட்டு ஒரு குறியீடு. மருந்தை உண்டு, நோய் குணமாக வேண்டும் என்பது நோக்கம்.

பல பேர் மருந்து சீட்டை சாப்பிட்டு விட்டு, "டாக்டர்,  நீங்க சொன்னபடி சாப்பிட்டேன், நோய் குணமாகவில்லையே " என்று குறை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

இத்தனை கோவில், உற்சவம், குடமுழுக்கு, பூஜை, புனஸ்காரம், விரதம், என்றெல்லாம் இருந்தும் ஒருவரும் தன்னை உணர்ந்து ஞானியான மாதிரி தெரியவில்லை.

ஏன் ? குறியீடுகளை புரிந்து கொள்ளவில்லை.

இதைத்தான் அருணகிரி நாதர் கூறுகிறார்,

"குறியை குறியாது குறித்து அறியும்" என்று. குறிகளை விட்டு விட வேண்டும். அதை எதை குறிக்கிறதோ அங்கே போக வேண்டும்.

அறிவிப்பு பலகைகள் தேவை தான். அதை பார்த்து விட்டு, மேலே போய் கொண்டே இருக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள் 

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல் 

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு


அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


குறியை குறியாது, அது எதை குறிக்கிறதோ அதை குறித்துக் கொள்ள வேண்டும். 

அது எவ்வாறு நிகழ்ந்தது என்றால் , "வேலினால்" நிகழ்ந்தது என்கிறார். 

அது எப்படி வேல் நிகழ்த்தும் ?

வேல் என்பது ஒரு குறியீடு. 

வேல் என்பது ஞானத்தை குறிக்கும் குறியீடு. 

எப்படி ?

வேல் எப்படி இருக்கிறது = நீண்டு இருக்கிறது, முகப்பு அகன்று இருக்கிறது, நுனி கூர்மையாக இருக்கிறது. அறிவும் அது போல ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாக இருக்க வேண்டும்.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே " என்பார் மணிவாசகர் திருவாசகத்தில். 

அது நிகந்ழ்த பின் என்ன ஆகும் ?

உலகியல் பற்றுகள் நீங்கும். 

அப்புறம் ?

பேச்சும், சிந்தனையும் அற்றுப் போய் விடும். 

அப்புறம் ?

அறிவும், அறியாமையும் அற்றுப் போய் விடும். 

அறிவும் , அறியாமையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. 


செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

என்று கூறுகிறார்.

இங்கே கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 

'உம்' என்ற இடைச் சொல்லுக்கு பல வேலைகள் இருக்கிறது. 



" உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்."


எதிர்மறை 
சிறப்பு 
ஐயம் 
எச்சம் 
முற்றும் 
எண்ணும் 
தெரிநிலை 
ஆக்கம் 

என்ற எட்டு பொருளைத் தரும்.

உதாரணம் தந்தால் நன்கு விளங்கும். 

ஈன்றாள் பசி காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்பது குறள்.

பெற்ற தாய் பசித்து இருப்பதைக் கண்டால் கூட, ஒருவன் சான்றோர் பழிக்கும் செயல்களை செய்யக் கூடாது. 

இங்கே, குறளை ஊன்றி கவனியுங்கள் 


காண்பானாயினும் என்று ஒரு உம் மை சேர்க்கிறார். 


ஈன்றாள் பசி காண்பாயின்  செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்று சொல்லி இருக்கலாம்.

காண்பானாயினும் என்று சொல்வதன் மூலம், அப்போது கூட செய்யக் கூடாது என்ற எதிர் மறை பொருளைத் தருகிறது 


களவு செய்யினும் கொலை செய்யற்க என்று கூறும் போது , களவும் செய்யக் கூடாது என்ற பொருள் வரும். 

இங்கு உம்மை எதிர் மறை பொருளில் வந்தது. 

பாரதனைப் பற்றி இராமனிடம் கூறும் போது கோசலை கூறுவாள், 

"நின்னினும் நல்லன்"  என்று. 

நின்னின் நல்லன் என்று சொன்னாலும் அதே பொருள் தான். 

நின்னிலும் என்று சொல்லும் போது , "இராமா, நீ நல்லவன். பரதன் உன்னை விட நல்லவன் " என்ற பொருள் வரும்.

உயர்வு சிறப்பு உம்மை.

அடுத்தது ஐயம்.

இறுதிப் போட்டியில், இந்தியா வென்றாலும் வெல்லும் என்று சொல்லும் போது , வெல்லுமா, வெல்லாதா என்ற சந்தேகம் வருகிறது அல்லவா. இதில் உள்ள "உம் " மை நீக்கி விட்டுப் படித்துப் பாருங்கள். இந்த சந்தேகம் வராது. எனவே இது ஐயத்தை கொண்டு வரும் உம்மை.

அடுத்தது, எச்சம்.

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்று கூறும் போது , மற்ற ஆசிரியர்கள் வந்திருந்தார்கள் என்பது தானாகவே புலப்படும். 

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் வந்திருந்தார் என்று சொன்னால் , மற்றவர்கள் வந்தார்களா இல்லையா என்று தெரியாது. 

தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்றால் மற்றவர்களும் வந்தார்கள் என்று புலப்படும். 

மற்றவர்கள் இங்கே எச்சம். மீதி. 

எனவே இது எச்ச உம்மை. 

அடுத்தது முற்றும்மை. 

இராமனும் பரதனும் வீட்டுக்கு வந்திருந்தார்கள் என்று கூறினால், வேறு யாரும் வரவில்லை, அவர்கள் இருவர் மட்டும் தான் வந்திருந்தார்கள் என்று ஒரு புரியும். வேறு யாரும் இல்லை. அவர்கள் மட்டும் தான் . முழு பட்டியலும் வந்து விட்டது என்பதால் இது முற்றும்மை.

ஐந்து புலன்களை அடக்க வேண்டும். 

ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும். 

இதில் , முதலாவதில், நிறைய புலன்கள் இருக்கிறது, அதில் ஐந்து புலன்களை அடக்க வேண்டும் என்று  சொல்லப்பட்டது போல தோன்றும். 

இரண்டாவதில், மொத்தமே ஐந்து புலன்கள் தான். அந்த ஐந்தையும் அடக்க வேண்டும் என்பது பெறப்படும். 

எனவே இது முற்றும்மை.

இங்கே அருணகிரி சொல்கிறார் 


"செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே."

உலகப் பற்று, சொல், சிந்தனை இந்த மூன்று தான் மொத்தமும். இதற்கு வெளியில் ஒன்றும் இல்லை. உலகியலில் பற்று விட்டாலும், உள்ளுக்குள் சொல் ஓடிக் கொண்டே இருக்கும். விட்டது சரிதானா, ஒரு வேளை சரி இல்லையோ என்ற வாதம் உள்ளுக்குள் நடந்து கொண்டே இருக்கும். அது நின்றாலும், வார்த்தை இல்லாமல் சிந்தனை மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்.


சிந்தையும் அற்று என்று ஒரு முற்றும்மையை போடுவதின் மூலம் எல்லாம் அற்றது என்று தெரிய வருகிறது.

குறியை குறியாது, குறித்து அறிந்தால் அந்த ஞானத்தின் மூலம் உலகப் பற்று, சொல் மற்றும் சிந்தனை நிற்கும்.

அப்படி நிற்கும் போது அறிவும், அறியாமையும் அற்றுப் போய்விடும்.

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

மிக ஆழ்ந்த பொருள் செறிவு கொண்ட பாடல்.

மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

2 comments:

  1. நல்ல பாடல். அதை விட சுவாரஸ்யமாக இருந்தது இலக்கண குறிப்பு!

    ReplyDelete
  2. மருத்துவர் கொடுத்த சீட்டை சாப்பிடுவது என்ன வாய் விட்டு சிரிக்க வைத்தது.

    ReplyDelete