இராமாயணம் - இசைந்த ஆண்டு எலாம் இன்றோடு ஏறுமோ ?
கானகத்தில் இராமனைக் கண்டு, "நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று பரதன் வேண்டுகிறான்.
"இராமா, தயரதன் அரசை என்னிடம் கொடுத்தான். நான் ஏற்றுக் கொண்டதாகவே வைத்துக் கொள் . இப்போது இந்த அரசு என்னுடையது. என் அரசை உன்னிடம் தருகிறேன். நீ ஏற்றுக் கொள் " என்று கூறியதை முந்தைய பிளாகில் பார்த்தோம்.
அப்படி சொன்ன பரதனை, இராமன் மடக்குகிறான்.
"பரதா , நீ சொல்லியபடி நான் இந்த அரசை ஏற்றுக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தயரதன் , அரசை உனக்குக் கொடுத்தான். நீ அதை எனக்குத் தருகிறாய். அது எல்லாம் சரி தான். ஆனால்,பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல வேண்டும் என்பது தயரதனின் ஆணை. அந்த பதினான்கு ஆண்டுகள் இன்றோடு முடிந்து விடுமா ? " என்று கிண்டலாக கேட்கிறான்.
பாடல்
‘பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு
அசைந்த எந்தையார் அருள, அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ?
பொருள்
‘பசைந்த சிந்தை = அன்பு கொண்ட மனத்தை உடைய
நீ = பரதனாகிய நீ
பரிவின் = என் மேல் கொண்ட பரிவினால் , அன்பினால்
வையம் = உலகை
என் வசம் செய்தால் = என்னிடம் தந்தால்
அது முறைமையோ? = அது முறையாகுமா ?
வசைக்கு = பழிக்கு
அசைந்த = பயந்த
எந்தையார் = என் தந்தையான தயரதன்
அருள = கைகேயிக்கு கொடுத்த வரத்தினால்
அன்று நான் = அன்று நான்
இசைந்த = ஏற்றுக் கொண்ட
ஆண்டு எலாம் = பதினான்கு ஆண்டுகள் எல்லாம்
இன்றொடு ஏறுமோ? = இன்றோடு முடிந்து விடுமா ?
பதினான்கு ஆண்டுகள் கானகம் போவதாய் நான் ஏற்றுக் கொண்டு வந்து இருக்கிறேன். இப்போது நான் அரசை ஏற்றுக் கொண்டால் அது தயரதனின் சொல்லை மீறிய செயலாகும். தயரதன் , கைகேயிக்கு வரம் கொடுத்து இருக்கிறான். என் தந்தையான அவரின் வாக்கை காப்பாற்ற வேண்டியது என் கடமை. நான் அரசை ஏற்றுக் கொண்டால், அது தயரதன் வாக்கு தவறியதாக ஆகும். அவர் பழிக்கு அஞ்சியவர். எனவே நான் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.
எவ்வளவு தான் துன்பமாக இருந்தாலும், தந்தையின் வார்த்தையை காப்பது மகனின் கடமை. அது மட்டும் அல்ல, நான் கானகம் போவதாக வாக்கு கொடுத்து விட்டேன். என் வாக்கையும் காக்க வேண்டும். எனவே, நான் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.
உயர்ந்த கொள்கைகளுக்காக வாழ்ந்த பாத்திரங்களை காட்டுகிறார் கம்பர். எப்படி வாழ வேண்டும் என்று பாடம் நடத்துகிறார். எப்படியும் வாழலாம் என்று உலகம் நினைக்கும் போது , இல்லை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று கோடு கிழித்து காட்டுகிறார்.
நம் வார்த்தையை மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர்களின் வார்த்தைகளையும் நாம் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment