இராமாயணம் - ஆசிரியன் ஆணை
நாட்டை ஏற்றுக் கொள் என்று பரதன் பல விதங்களில் கெஞ்சிப் பார்க்கிறான் இராமனிடம். இராமன் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. "இப்போது இது இராஜ்யம். இதை நான் உனக்குத் தருகிறேன். யார் என்ன சொல்வது. ஏற்றுக் கொள் " என்கிறான்.
இராமனோ மறுத்து, "அப்படியே நான் ஏற்றுக் கொண்டாலும், 14 வருடம் கானகம் போவதாக என் தந்தைக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். அதை நிறைவேற்ற வேண்டும் . எனவே நீயே ஆள் " என்கிறான்.
இவர்களுக்குள் இப்படி வாதம் நடந்து கொண்டிருந்த போது , அருகில் இருந்த குல குருவான வசிட்டன் இடைப்பட்டு , "நான் உனக்கு அறம் சொல்லித் தந்த குரு. நான் ஆணையிடுகிறேன். போய் அரசை ஏற்றுக் கொள் " என்று ஆணையிட்டு கூறுகிறான்.
பாடல்
என்றலால், யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்,
“அன்று” எனாது, இன்று எனது ஆணை; ஐய! நீ
நன்று போந்து அளி, உனக்கு உரிய நாடு’ என்றான்.
பொருள்
என்றலால் = என்று கூறுவதால். (பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர் தலைவர்கள் என்று கூறுவதால்)
யான் = நான்
உனை எடுத்து = வளர்த்து எடுத்து
விஞ்சைகள் = வித்தைகள்
ஒன்று அலாதன பல = ஒன்று அல்ல , பல விதமான வித்தைகளை
உதவிற்று = கற்றுத்தந்தது
உண்மையால் = உண்மையானனால்
“அன்று” எனாது = சரி அல்ல என்று மறுக்காமல்
இன்று எனது ஆணை; = இன்று எனது ஆணை
ஐய! = ஐயனே
நீ = நீ
நன்று போந்து அளி = போய் நன்றாக நாட்டை காப்பாற்று
உனக்கு உரிய நாடு’ என்றான் = அது உனக்கு உரிய நாடு என்றான்
மிகப் பெரிய சிக்கல்.
ஒரு புறம் தான் படித்த அறங்கள். இன்னொரு புறம் தந்தைக்கு வாக்கு. மறு புறம் அரசை ஏற்க மறுக்கும் பரதன். இப்போது, இன்னொரு சிக்கல், குல குருவான வசிட்டனின் ஆணை.
இராமன் என்ன செய்யப் போகிறான் ?
என்ன செய்தாலும் தவறாகப் போக வாய்ப்பு உள்ளது.
நாட்டை ஏற்றுக் கொண்டால் , கொடுத்த வாக்கில் இருந்து தவறியாக ஆகும்.
நாட்டை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , ஆசிரியனின் ஆணையை மீறியதாகும்.
இராமன் எப்படி இந்த சிக்கலை விடுவிக்கிறான் ?
No comments:
Post a Comment