கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஏத்த அரும் பெருங் குணத்து இராமன்
தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் நாட்டுக்கு வந்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி பரதன் வேண்ட, அதை இராமன் மறுக்க, வசிட்டனும் பரதன் சொன்னதை சொல்ல, அதற்கும் இராமன் மறுக்க...யார் வேண்டுமானாலும் நாட்டை ஆண்டு கொள்ளுங்கள், நான் காட்டிலேயே இருக்கப் போகிறேன் என்று பரதன் இருந்து விடுகிறான்.
இக்கட்டான சூழ்நிலை.
அப்போது தேவர்கள் அங்கே வருகிறார்கள்.
வந்தவர்கள் ....
"போற்றுதலுக்குரிய பெரிய குணங்களை உடைய இராமன் அவனுடைய தந்தையின் சொல் கேட்டு நடக்கவும், பரதா நீ அந்த நாட்டை 14 ஆண்டுகள் ஆளவும், இது உங்கள் இருவரது கடமையும் ஆகும் "
என்றனர்.
பாடல்
ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப்
போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்;
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம்
காத்தல் உன் கடன்; இவை கடமை’ என்றனர்.
பொருள்
ஏத்த = போற்றுதலுக்குரிய
அரும் = அருமையான
பெருங் = பெருமை நிறைந்த
குணத்து = குணங்களை கொண்ட
இராமன் = இராமன்
இவ் வழிப் = இந்த வழி
போத்து = போய்
அரும் = அரிய அல்லது அருமையான
தாதை சொல் = தந்தையின் சொல்லை
புரக்கும் = காக்கும்
பூட்சியான் = மேற்கொண்டுள்ளான் ;
ஆத்த = அந்த
ஆண்டு = ஆண்டுகள்
ஏழினொடு ஏழும் = பதினான்கு ஆண்டுகளும்
அந் நிலம் = அயோத்தியை
காத்தல் உன் கடன்; = காப்பது உன் கடைமை
இவை கடமை’ = இவை உங்களது கடமைகள்
என்றனர் = என்றனர்.
இவை எல்லாம் கடமைகள்.
பெற்றோரின் சொல்லை கேட்பது என்பது பிள்ளைகளின் வசதிப்படி அல்ல. கேட்க வேண்டியது கடமை.
அது மட்டும் அல்ல, பெற்றோரின் பேச்சை ஒரு பிள்ளை கேட்டால், மற்ற உடன் பிறப்புகள் அவனுக்கு உதவ வேண்டும் என்பதும் கடமை.
இலக்குவனை கானகம் போ என்று யாரும் சொல்லவில்லை. அவன் தானே கிளம்பி விட்டான்.
பரதன் கொஞ்சம் முரண்பட்டான்.
தேவர்கள் வந்து அவனுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.
இராமன் , தந்தையின் சொல்லை கேட்டு கானகம் போவதால், நீ நாட்டை ஆள வேண்டும் என்பது உன் கடமை என்று பரதனிடம் கூறுகிறார்கள்.
பெற்றோர் சொல்லை கேட்டு பிள்ளைகள் வாழ வேண்டும் என்று பாரம்பரியம் இருந்தது இந்த நாட்டில்.
இந்த தேவர்கள் ஏன் வருகிறார்கள், அதற்குப் பின் என்ன அர்த்தம் என்று இந்த படலத்தின் முடிவில் சிந்திக்க இருக்கிறோம். அது மட்டும் அல்ல, ஏன் திருமால் இப்படி அவதாரம் எடுத்து சங்கடப் படவேண்டும். பேசாமல், நேரடியாகவே வந்து இராவணனிடம் சண்டையிட்டு ஒரு நொடியில் வேலையை தீர்த்து இருக்கலாம் அல்லவா ? இது என்ன கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அதை பிடிப்பது போல உள்ளது ?
இதற்கெல்லாம் என்ன காரணம் ?
இதற்கெல்லாம் என்ன காரணம் ?
எவற்றையும் இந்த படல முடிவில் சிந்திப்போம்.
http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_12.html
http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_12.html
"பெற்றோரின் சொல்லை கேட்பது என்பது பிள்ளைகளின் வசதிப்படி அல்ல. கேட்க வேண்டியது கடமை."... இது சும்மா உளறல். அது பெற்றோர் செல்வதை பொருத்து.
ReplyDeleteஎப் பொருள் யார் யார் வாய்...