கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு என் இனிச் செய்ய வகை ?
தந்தை சொல் கேட்டு இராமன் கானகம் வந்து விட்டான். அவனைத் தொடர்ந்து வந்த பரதன், இராமனிடம், அரசை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். அப்போது இடை மறித்து , வசிட்டன் "இராமா நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் , இது என் ஆணை " என்று ஆணையிட்டு விடுகிறான்.
குருவின் ஆணையை மீற முடியாது. இராமன் மீறினால், பின்னால் வரும் சந்ததி ஒன்றும் ஆசிரியர் பேச்சை கேட்கமாட்டார்கள். இராமனே கேட்கவில்லை, நான் ஏன் கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்கள்.
இராமன் இந்த தர்ம சங்கடத்தை மிகத் திறமையாக கையாளுகிறான்.
ஆணையிட்ட வசிட்டனை நோக்கி இராமன் கேட்கிறான்
"முன்னால் சொன்ன தாய் தந்தையரின் கட்டளையை ஏற்று, நான் இங்கு வந்திருக்கிறேன். இப்போது நீ ஆணையிடுகிறாய். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீயே சொல் " என்று.
பாடல்
முன் உறப் பணித்தவர்
மொழியை யான் என
சென்னியில், கொண்டு, “அது
செய்வேன்” என்றதன்
பின்னுறப் பணித்தனை;
பெருமையோய்! எனக்கு
என் இனிச் செய்வகை?
உரைசெய் ஈங்கு’ என்றான்
பொருள்
முன் உறப் = முன்பு தெளிவாக
பணித்தவர் = என்னை கானகம் போகும் படி பணித்தவர்கள் (என் தாய் தந்தையர்)
மொழியை = சொன்ன சொல்லை
யான் = நான்
என்எ = என்னுடைய
சென்னியில் கொண்டு, = தலைமேல் கொண்டு
“அது செய்வேன்” = அதை செய்து முடிப்பேன்
என்றதன் = என்ற அந்த வாக்குக்குப்
பின்னுறப் பணித்தனை; = பின்னால் நீ என்னை பணிக்கிறாய்
பெருமையோய்! = பெருமை உடையவனே
எனக்கு = எனக்கு
என் இனிச் செய்வகை? = இனி எந்த வகையில் காரியம் செய்ய வேண்டும்
உரைசெய் ஈங்கு’ என்றான் = இங்கு நீ உரைப்பாய் என்றான்
நான் உன் மாணவன். நீ எனக்கு ஆசிரியன். என் தாய் தந்தையரின் சொல் கேட்டு நான் இங்கு வந்திருக்கிறேன். நீ திரும்பி நாட்டுக்கு வா என்கிறாய். நான் என்ன செய்யட்டும் என்று கேட்கிறான்.
இப்போது வசிட்டன் பாடு திண்டாட்டம்.
பெற்றோர் வார்த்தையை கேட்காதே என்று வசிட்டன் சொல்ல முடியாது.
இராமன் நினைத்து இருந்தால் , வசிட்டன் சொல் கேட்டு மீண்டும் அரசை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
இராமனின் நோக்கம் அது அல்ல. பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு தர வேண்டும் என்று வாழ்ந்து காட்டுவது அவன் நோக்கம்.
எனவே,கேள்வியை வசிட்டன் பால் திரும்புகிறான்.
வசிட்டன் என்ன செய்தான் என்பதை நாளை பார்ப்போம்.
http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_7.html
நல்ல உத்தி. வசிட்டனிடமே எது தர்மம் என கூற சொன்னது. முதலில் பணித்த தந்தை சொல்லா அல்லது பின்னர் வழங்கிய குருவின் ஆணையா?
ReplyDelete