திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - திறல் நோக்கி மகிழ் வேந்தன்
வாழ்க்கைக்கு சுவை சேர்ப்பது கலை.
கலை என்று சொல்லும் போது இயல்,இசை, நாடகம், இலக்கியம் என்று அனைத்தும் அதில் அடங்கும்.
கலை இல்லாத வாழ்க்கை மிகவும் சோகமானது.
வாழ்க்கை என்பது என்ன ?
ஏதோ ஒன்றை நோக்கி பயணப் படுவது, அதை அடைவது, அடைந்த பின் சிறிது நாள் மகிழ்வாக இருப்பது, பின் அது சலித்துப் போய் விடும், பின் வேறொன்றை நாடுவது.
திருப்தி என்ற ஒன்றை அடையவே முடியாது. ஒன்றில் திருப்தி அடைந்தால் , இன்னொன்று வந்து நிற்கும்.
இப்படி நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், கொஞ்சம் சுவை சேர்ப்பது இசை, இலக்கியம் போன்றவை.
இலக்கியங்கள் மனதை வருடிக் கொடுப்பவை, தலை கோதி விடுபவை, தாலாட்டி தூங்க வைப்பவை, அழுந்திக் கிடக்கும் உணர்ச்சிகளை யாரையும் காயப் படுத்தாமல் வெளிக் கொண்டு வந்து மனதுக்கு அமைதி தருபவை .....
நல்ல இலக்கியம் , மனதோடு ஒட்டிக் கொள்ளும். எப்படி வாசனை திரவியத்தை மேலே பூசிக் கொண்டால் நாளெல்லாம் மணம் தந்து கொண்டே இருக்குமோ, அது போல , நல்ல பாடல்களை படித்தால், அந்த நாளெல்லாம் அந்த சுக உணர்வு வந்து கொண்டே இருக்கும்.
அப்படி ஒரு பாடல்
பாண்டிய மன்னனின் குமாரன் , படித்துக் கொண்டிருக்கிறான்.
பாடல்
கலை பயின்று பரி நெடும் தேர் கரி பயின்று பல கைவாள்
சிலை பயின்று வருகுமரர் திறல் நோக்கி மகிழ் வேந்தன்
அலை பயின்ற கடலாடை நில மகளை அடல் அணி தோள்
மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்.
பொருள்
கலை பயின்று = ஆடல், பாடல், இசை என்ற பல்வேறு கலைகளை பயின்று
பரி = குதிரை
நெடும் தேர் = நீண்ட தூரம் செல்லும் தேர்
கரி = யானை
பயின்று = என்று குதிரை ஏற்றம், யானை ஏற்றம், தேர் ஓட்டம் போன்றவற்றை பயின்று
பல = பல் வேறுவிதமான
கைவாள் = வாள் வித்தை
சிலை பயின்று = வில் மற்றும் அம்பு செலுத்த பயின்று
வருகுமரர் = வளர்ந்து வரும் குமாரன்
திறல் நோக்கி = திறமையை பார்த்து
மகிழ் வேந்தன் = மகிழ்ந்திருக்கும் வேந்தன்
அலை பயின்ற = அலை வீசும்
கடலாடை = கடலை ஆடையாக கொண்ட
நில மகளை = நில மகளை
அடல் = போர்
அணி தோள் = அணிந்த தோள் (வெற்றி வாகை சூடிய தோள்கள்)
மலை பயின்று = மலையின் மேல் நடை பயின்று
குளிர் தூங்க = குளிர்ந்த தென்றல் தூங்க வைக்க
மகிழ்வித்து வாழும் நாள் =அந்த நில மகளை மகிழ்வித்து வாழ்கின்ற அந்த நாளில்
ஒரு பெண் சேலை உடுத்தி இருந்தாள் , சேலையின் முந்தானை, சேலையின் ஓரங்கள் காற்றில் லேசாக அசைவதை காணலாம்.
நில மகள், கடலை சேலையாக உடுத்தி இருக்கிறாள். கடலின் அலைகள் அந்த சேலையின் முந்தானை, ஓரம் (பல்லு ). அலை அடிப்பது சேலையின் ஓரங்கள் அசைவதைப் போல இருக்கிறது.
ஒரு ஆணின் ஆண்மை எங்கே இருக்கிறது என்றால் , மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்வதில்.
இங்கே நிலமகளை அடைந்த அந்த பாண்டிய மன்னன், அவளை நன்றாக வைத்துக் கொள்கிறான். அவன் சுகமாக உறங்குகிறாள்.
"மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்"
தூக்கத்தில் கூட மகிழ்ந்து தூங்குகிறாள்.
மனைவி அவ்வளவு சந்தோஷமாக இருந்தால் , அந்த வீடு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
சொர்கம் தேடி வேறு எங்கும் போக வேண்டாம்.
http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_11.html
தென்றல் வீசுவது போலத்தான் இருக்கிறது இந்தப் பாடலைப் படிக்கும் போது!
ReplyDeleteதிறமையுள்ள மகன், சந்தோஷமான மனைவி, மகிழ்வுடன் இருக்கும் வேந்தன் வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்?
ReplyDeleteநல்ல பாடல், அருமையான விளக்கம்.