Pages

Thursday, August 17, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - அயல் நின்றான் இளைப்பாற

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - அயல் நின்றான் இளைப்பாற


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் , அவனுடைய மனைவி மற்றும் கை குழந்தையோடு மதுரை வரும் வழியில் உள்ள கானகத்தில் , மனைவியின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரும் வேளையில், அவர்கள் இளைப்பாறிய ஆல மரத்தில் முன்பு எப்போதோ சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் அசைந்து கீழே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது.

அதனால் அவள் இறந்து போனாள் . அப்போது , அந்தப் பக்கம் ஒரு வேடன் வந்தான். அவன் நிழலுக்கு அதே ஆல மரத்தின் கீழ் வந்து நின்றான்.

பாடல்

அவ்வாறவ் வணங்கனையா ளுயிரிழந்தா ளவ்வேலைச்
செவ்வாளி யேறிட்ட சிலையுடையா னொருவேடன்
வெவ்வாளி யேறனையான் வெயிற்கொதுங்கு நிழறேடி
அவ்வால நிழலெய்தி யயனின்றா னிளைப்பாற.


சீர் பிரித்த பின்

அவ்வாறு அவ் அணங்கு அனையாள் உயிர் இழந்தாள் உவ் வேலைச் 
செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான் ஒரு வேடன் 
வெவ் வாளி ஏறு அனையான் வெயிற்கு ஒதுங்கும்  நிழல் தேடி 
அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன் இளைப் பாற.

பொருள்

அவ்வாறு = அவ்வாறு

அவ் = அந்த

அணங்கு அனையாள் = தெய்வ மகள் போன்ற பெண்

உயிர் இழந்தாள் = உயிர் இழந்தாள்

உவ் வேலைச் = அந்த நேரத்தில்

செவ் வாளி = செம்மையான, சிவந்த அம்பை

ஏறிட்ட = ஏற்றும்

சிலை = வில்லை

உடையான் = உடைய

ஒரு வேடன் = ஒரு வேடன்

வெவ் வாளி ஏறு = ஆளி என்றால் சிங்கம். கோபம் கொண்ட ஆண் சிங்கம்

அனையான் = போன்றவன்

வெயிற்கு = வெயிலுக்கு

ஒதுங்கும் = ஒதுங்கும்

நிழல் தேடி = நிழல் தேடி

அவ் = அந்த

ஆல = ஆல மரத்தின்

நிழல் எய்தி = நிழலை அடைந்து

அயல் நின்றன் = தள்ளி நின்றான்

இளைப் பாற = இளைப்பாற

வேடன் , அவன் பாட்டுக்கு வந்து நிழலுக்கு ஒதுங்கி நிற்கிறான். அவன் ஒரு புறம் நிற்க, மறு புறம், அந்த வேதியனின் மனைவி அம்பு தைத்து இறந்து கிடக்கிறாள். அவனுக்கு அது தெரியாது.

கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு புறம்  முரட்டு வேடன். மறு புறம் இறந்து கிடக்கும் ஒரு பெண். பக்கத்தில் ஒரு  குழந்தை.  வேதியன் , நீரோடு வருகிறான்.

சினிமா பார்ப்பது போல இருக்கிறது அல்லவா.

அப்படி ஒரு visual description .

செவ்வாளி . செம்மையான அம்பு அல்லது சிவந்த அம்பு.

இராமாயணத்தில், இராமன் எய்த அம்பை வாலி தன் வாலினால் பிடித்து இழுத்து  , அதில் யார் பெயர் எழுதி இருக்கிறது என்று பார்க்க நினைக்கிறான்.

இழுத்தும் விட்டான். அதில் இராமன் என்ற பெயர் எழுதி இருக்கிறது.

இராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரியக் கண்டான் என்பார் கம்பர்.

செம்மை சேர் நாமம் என்றால் செம்மையான நாமம் அல்லது வாலியின் இரத்தம் தோய்ந்த சிவந்த நாமம் என்றும் கொள்ளலாம்.  வாலி வதை என்பது ஒரு முடிவுறா சர்ச்சையாகவே இருந்து வருகிறது. அது சரி என்று சொல்பவர்கள் 'செம்மை நாமம்" என்பதை செம்மையான நாமம் என்றும், அது தவறு என்று சொல்பவர்கள் "செம்மை நாமம்" என்பதை இரத்தம் தோய்ந்த சிவந்த நாமம் என்று பொருள் சொல்வார்கள்.

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தெரியக்  கண்டான்.


அடுத்தது,

"உவ் வேலைச்  செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான்"

அது என்ன உவ் வேலை .

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம்.


தமிழில் ஒரு பொருளை சுட்டிக் காட்டும் சொல்லுக்கு சுட்டு பெயர் என்று பெயர்.

அருகில் உள்ள பொருளை சுட்டிக் காட்டினால் அது அண்மைச் சுட்டு என்றும்.

தொலைவில் உள்ள பொருளை சுட்டிக் காட்டினால் அது சேய்மை சுட்டு என்றும் பெயர் பெரும்.

அண்மை சுட்டு இகரத்தில் தொடங்கும்.

இது, இவை, இவர், இவள் என்று.

சேய்மைச் சுட்டு என்பது அகரத்தில் தொடங்கும்.

அது, அவை, அவர், அவள் என்று.

இரண்டுக்கும் நடுவில் இருப்பதை சுட்ட உகரத்தை பயன் படுத்தினார்கள்.

உது, உவை , உவர், உவள் என்று.

ஆனால், அது இப்போது நடை முறையில் இல்லை.


திருஞான சம்பந்தர், மூன்று வயது பிள்ளையாக இருக்கும் போது , அவருடைய தந்தையாருடன் கோவிலுக்குச் சென்றார். கோவிலுக்குப் போவதற்கு முன் , தந்தையார் அங்குள்ள திருக்குளத்தில் நீராடச் சென்றார். அவர் நீரில் மூழ்கியதும், தந்தையை காணமால் குழந்தையாக இருந்த ஞான சம்பந்தர் அழுதார். அவரின் அழு குரலை கேட்ட பார்வதி வந்து ஞானப் பாலை தந்தார்.

குளத்தில் மூழ்கி எழுந்து வந்த தந்தையார் ,  குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டு  , "யார் தந்தது " என்று கேட்டார்.

தோடுடைய செவியன் என்ற பாடலைப் பாடினார்.


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


அதில், இறுதியில் "பெம்மான் இவன் அன்றே" என்று சொல்லி முடிக்கிறார்.

இவன் என்றால் அண்மைச் சுட்டு. இறைவன் எங்கோ இல்லை. இதோ, இங்கே இருக்கிறான். அவனைத் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று கூறுகிறார்.

"அவன் அன்றே " என்று சொல்லி இருந்தால் , இறைவன் எங்கோ தொலைவில் இருக்கிறான் என்று பொருள் படும்.

அண்மைச் சுட்டின் ஆழம் புரிகிறதா ?


"அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன்"


முரட்டு வேடன்.  அழகான பெண் தனித்து நிற்கிறாள். அருகில் யாரும் இல்லை.

அவன் , அவள் அருகில் கூட போகவில்லை. "அயல் நின்றான்".

அது வேடனின் பண்பாடு என்றால் மற்றவர்களின் பண்பாடு எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசித்துக் கொள்ளலாம்.


கதை சொல்லும் பாங்கு. கவி நயம். தத்துவம். கலாச்சாரம் என்று அனைத்தையும்  அள்ளித் தருவது திருவிளையாடற் புராணம்.

மேலும் படிப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_17.html

1 comment:

  1. தன் மனைவி வேடனால் கொல்லப் பட்டு இருக்கலாம் என வேதியனால் சந்தேக படக்கூடிய சூழ்நிலை. அவன் அம்பும் செம்மையாக இருக்கிறது. இந்த இக்கட்டான சந்தர்ப்பதிலிருந்து எப்படி தன மீது பழி வராமல் வேடன் விடுபடுவான் என்பதை கூறாமல் நிறுத்தி விட்டீர்களே.
    சுவாரஸ்யமாக உள்ளது
    செம்மைக்கு விளக்கம் ,சற்று இலக்கணம் எல்லாம் அமர்க்களமாக இருந்தது.

    ReplyDelete