திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும்
தன் மனைவியை வேடன் தான் கொன்றான் என்று வேதியன் குற்றம் சுமத்தி வேடனை அரசன் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். வேடனோ தான் கொலை செய்யவில்லை என்று சாதிக்கிறான். அமைச்சர்களோ , "இது அற நூல்களை படித்து தீர்க்க முடியாது. இறைவன் தான் வழி காட்ட வேண்டும் " என்று கை விரித்து விட்டார்கள்.பாண்டியன் நேரே கோவிலுக்குப் போனான். அங்கிருந்த சிவனிடம் முறையிட்டான்.
அப்போது
"இந்த ஊரின் வெளியில் ஒரு வணிகத் தெரு இருக்கிறது. அந்தத் தெருவில் ஒரு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்தத் திருமண வீட்டுக்கு நீ அந்த மறையவனை அழைத்துக் கொண்டு வா. உன் மனதில் உள்ள குழப்பங்களை எல்லாம் தீர்த்து வைப்போம் "
என்று அசரீரி வானத்தில் இருந்து வந்தது.
பாடல்
திரு நகரின் புறம்பு ஒரு சார் குலவணிகத் தெருவின் கண்
ஒரு மனையின் மணம் உளது அங்கு அந்தணனோடு ஒருங்கு நீ
வருதி உனது உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும் என்று
இரு விசும்பின் அகடு கிழித்து எழுந்தது ஆல் ஒருவாக்கு.
பொருள்
திரு நகரின் = இந்த ஊரின்
புறம்பு = வெளியே
ஒரு சார் = ஒரு பக்கத்தில்
குலவணிகத் = வணிக குலத்தவர்கள் வாழும்
தெருவின் கண் = தெருவில்
ஒரு மனையின் = ஒரு வீட்டில்
மணம் உளது = திருமணம் நடக்க இருக்கிறது
அங்கு = அந்த வீட்டுக்கு
அந்தணனோடு = மறையவனோடு
ஒருங்கு நீ = ஒன்றாக நீ
வருதி = வா
உனது = உன்
உளம் = உள்ளம்
தேறா = தேற்றம் அடையாத
மாற்றம் எலாம் = மாறுதலான என்=எல்லாம்
தேற்றுதும் = தெளிவாக்குவோம்
என்று = என்று
இரு விசும்பின் = பெரிய வானத்தில் இருந்து
அகடு = உள்ளிருந்து
கிழித்து = வெளிப்பட்டு
எழுந்தது = எழுந்தது
ஆல் = அசைச் சொல்
ஒருவாக்கு = ஒரு ஒலி (அசரீரி)
இறைவன் , உடனே இது தான் உண்மை. இப்படிச் செய் என்று சொல்லவில்லை. நீ அந்த கல்யாண வீட்டுக்கு வா. உன் மனதில் உள்ள குழப்பங்களை தீர்க்கிறேன் என்றான் .
ஒரு வேளை இறைவன் , இது தான் உண்மை என்று சொல்லி இருந்தால், வேதியன் நம்பி இருக்க மாட்டான். இந்த அரசன் ஏதோ மாயம் பண்ணி இப்படி செகிறான் என்று சந்தேகம் கொண்டிருப்பான்.
நீ நேரில் அங்கு வா. வரும்போது அந்த அந்தணனையும் அழைத்துக் கொண்டு வா என்று சொல்லி விட்டான்.
அங்கு என்ன நடந்தது என்று அங்கு போனால் தான் தெரியும்.
வாருங்கள் போவோம் .
http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_27.html
No comments:
Post a Comment