திருக்குறள் - உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
உருவத்தைப் பார்த்து ஒருவரை கேலி செய்யக் கூடாது. உருண்டு வரும் பெரிய தேருக்கு அச்சாணி போல உள்ளவர்களை உடையது உலகு
அவ்வளவுதானே. எளிமையான குறள் தானே . கடினமான சொல் எதுவும் இல்லையே. இதுக்கு எதுக்கு விளக்கம் என்று நினைப்போம்.
ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க குறளின் ஆழம் புரியும்.
வாருங்கள், சிந்திப்போம்.
அச்சாணி = அச்சாணி என்ன செய்கிறது ? தேரின் சக்கரம் கழண்டு விழாமல் தடுத்து நிறுத்துகிறது. அதை , எப்படி செய்கிறது ? பெரிய புத்திசாலித்தனம் கிடையாது, சிக்கலான வடிவம் கிடையாது. பின் எப்படி செய்கிறது என்றால், உறுதியாக , என்ன வந்தாலும் சரி, எவ்வளவு பாரம் வந்தாலும் சரி, எவ்வளவு அழுத்தம் வந்தாலும் சரி , இந்த சக்கரம் கழண்டு விழ விடுவதில்லை என்று உறுதியோடு இருக்கிறது. அத்தனை பாரத்தையும் தாங்கிக் கொண்டு, தேரை நல்லபடி கொண்டு செல்ல உதவுகிறது. அது போல, ஒரு வீட்டை, நாட்டை, நிறுவனத்தை நல்லபடி கொண்டு செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை, கடமை இருக்கும். அதை, விடாப் பிடியாக , உறுதியாக செய்ய வேண்டும். அப்போதத்தான், அந்த வீடோ, நிறுவனமோ, நாடோ தடுமாறி விழாமல் செல்லும்.
இரண்டாவது, "உருள் பெரும் தேர்". தேர் என்றால் வெறும் தேர் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். வீடு, நாடு, நிறுவனம், அனைத்துக்கும் அது ஒரு உவமை.
மூன்றாவது, தேரில் சப்பரம் தெரியும், வடம் தெரியும், அதில் உள்ள சாமி சிலை தெரியும், கும்பம் தெரியும், பூ வேலைப்பாடு தெரியும், சக்கரம் கூட தெரியும். ஆனால், இந்த அச்சாணி தெரியாது. "இந்த தேர் விழாமல் இருக்க நான் தான் காரணம். என்னை யாரும் கண்டு கொள்வதில்லை" என்று அச்சாணி நினைத்து , கழண்டு முன்னால் வந்து நின்றால் , என்ன ஆகும் ? அச்சாணி அங்கு தான் இருக்க வேண்டும். அது போல, வீட்டை, நாட்டை கொண்டு செல்லும் சிலர் இருப்பார்கள். அவர்கள் வெளியே தெரிவது இல்லை. அதற்காக அவர்களை உதாசீனப் படுத்தக் கூடாது.
நான்காவது, அச்சாணி எவ்வளவு பெரிய வேலை செய்கிறது. அதற்காக அதை தங்கத்தால் செய்து போட முடியுமா ? அது இரும்பில் தான் செய்யப் பட வேண்டும். சாதாரண இரும்புதானே, இது என்ன பெரிய மதிப்பு உள்ளதா என்று கேலி செய்யக் கூடாது.
ஐந்தாவது, "நான் இந்த வீட்டுக்கு எவ்வளவு செய்து இருக்கிறேன். ஒரு நன்றி இல்லை. அவனுக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கிறேன், கடைசியில் இப்படி செய்து விட்டானே..." என்றெல்லாம் பேசக் கேட்டு இருக்கிறோம். ஒரு அச்சாணி தேய்து போய் விட்டால் என்ன செய்வார்கள். ? அடடா , எவ்வளவு உதவி செய்தது இத்தனை நாள் என்று அதை யாரும் தூக்கி தேரில் வைப்பது இல்லை. தேய்ந்து போய் விட்டால் , வேறு அச்சாணி போடுவார்கள். பழையதை தூக்கி போட்டு விடுவார்கள். அதற்காக அந்த அச்சாணி நொந்து பயனில்லை. அது போல, நாம் நமது வீட்டுக்கோ, நாட்டுக்கோ, நிறுவனத்துக்கோ எவ்வளவு செய்து இருப்போம். நமது தேவை தீர்ந்து போனால், அடுத்தவரை நாடுவார்கள். நாம் அதை நினைத்து நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை. உலகம் அப்படித்தான் இருக்கும்.
ஆறாவது, "அன்னார் உடைத்து" : இந்த நன்றி கெட்ட உலகில், நான் எதுக்கு அச்சாணி போல கிடந்து உழல வேண்டும் ? ஒரு மதிப்பும் இல்லை, காரியம் முடிந்தவுடன் தூக்கி எறிந்து விடுகிறார்கள். எனக்கு அச்சாணியாக இருக்க விருப்பமில்லை என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். அப்படி சொல்கிறவர் மத்தியில் , அச்சாணியாக இருந்து, சுயநலம் இன்றி நாட்டையும், வீட்டையும், நிறுவனத்தையும் கொண்டு செல்லும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உடையது உலகம் என்கிறார். சில பேர் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். அவரக்ளை இந்த உலகம் "பிழைக்கத் தெரியாதவன்", "அப்பாவி", " பாவம் " என்றெல்லலாம் கேலி பேசும். கேலி பேசக் கூடாது என்கிறார். அவர்களால் தான் இந்த உலகம் என்ற தேர் உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
ஏழாவது, "எள்ளாமை வேண்டும் " தேரின் அளவைப் பார்த்தால் , அச்சாணியின் அளவு மிக மிக சிறியதுதான். தேரின் மதிப்பைப் பார்த்தால், அச்சாணியின் மதிப்பு ஒன்றும் இல்லைதான். அதற்காக அதை கேலி பேசக் கூடாது.
எட்டாவது, நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பெரிய சாதனைகளை புரிந்து இருப்போம். பெரிய பதவி, அதிகாரம், செல்வம், செல்வாக்கு என்று எல்லாம் வந்திருக்கும். நாம் இந்த இடத்தை அடைய நமக்கு பலர் உதவி செய்து இருப்பார்கள். குறிப்பாக நமது ஆசிரியர்கள், நண்பர்கள், உடன் பிறப்புகள் என்று பலர் பலவித சோதனைகளை தாங்கிக் கொண்டு நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள். இப்போது திரும்பிப் பார்த்தால், அவர்கள் அற்பமாக தெரியலாம். "ஹா, அவர் இல்லாவிட்டால் நான் உயர்ந்திருக்க மாட்டேனா " என்று எள்ளாமை வேண்டும்.
சிந்தித்துப் பாருங்கள்.
எவ்வளவு அர்த்தம் விரியும் என்று.
புதையல். தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கும்.
http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_23.html
மிக ஆழமாக யோசித்து எழுதியிருப்பது இரசிக்கத் தக்கது. நன்றி.
ReplyDelete👍
ReplyDeleteஉண்மை
ReplyDeleteஎனுக்கு கிடைத்து தங்கம் இன்றைக்கு.
ReplyDeleteSuper
ReplyDeleteRepeat same statements
ReplyDelete