திருக்குறள் - பயனில சொல்லாமை
நல்ல பேர் வாங்குவது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் மிக கடினமான செயல்.
ரொம்ப உழைக்க வேண்டும். கடுமையாக உழைத்தால்தான் நல்ல பெயரும், புகழும், செல்வமும் கிடைக்கும். அதுவும் ஏதோ ஒரு சில நாளிலோ அல்லது மாதத்திலோ வந்து விடாது. ஆண்டு பல ஆகும்.
அப்படி சேர்த்த பெயரையும்,புகழையும் கட்டி காப்பது அதை விட கடினம்.
ஒரு நொடியில் புகழ் போய்விடும், ஒரு தவறான முடிவில் செல்வம் போய் விடும்.
நல்லவர்கள், பண்புள்ளவர்கள், இனியவர்கள் தாங்கள் சிரமப் பட்டு சேர்த்த பேரையும் , செல்வத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று நிச்சயமாக செய்யக் கூடாது
அது என்ன ?
பயன் இல்லாத சொற்களை ஒரு போதும் பேசக் கூடாது
பயனில்லாத சொற்களை பேசினால் சீர்மையும் சிறப்பும் போய் விடும் என்கிறார் வள்ளுவர் ...
பாடல்
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்
பொருள்
சீர்மை = புகழ், நல்ல பெயர்
சிறப்பொடு = பெற்ற சிறப்புகள் (பட்டம், பதவி, செல்வம், )
நீங்கும் = ஒருவனை விட்டு நீங்கும்
பயன்இல = பயன் இல்லாத
நீர்மை = நீர் போல
உடையார் = உயர்ந்த குணம் உடையவர்கள்
சொலின் = சொன்னால்
எனவே, நீங்க சேர்த்து வைத்த நல்ல பெயர், புகழ், செல்வம் , பட்டம் , பதவி , செல்வாக்கு இவற்றை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால், பயன் இல்லாத சொற்களை சொல்லாமல் இருங்கள்.
பயன் இல்லாத சொல் என்றால் என்ன ?
மற்றவர்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத சொல் என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர்.
நாம் எதையாவது சொல்ல வேண்டும் என்றால், அது கேட்பவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன் உள்ளதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது.
யோசித்துப் பார்ப்போம்.
நாம் பேசுவதில் எத்தனை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது என்று ?
அரட்டை, chat , "சும்மா தான் கூப்பிட்டேன்", whatsapp , facebook comments இதெல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை பயக்கிறது என்று சிந்திப்போம்.
அதே போல, மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது , இந்த பேச்சை கேட்பதால் நமக்கு என்ன பலன் என்று யோசிக்க வேண்டும்.
டிவி சீரியல்கள், விவாத மேடைகள், பட்டி மன்றங்கள், போன்றவற்றை கேட்கும் போது , சிந்திக்க வேண்டும் இதனால் பயன் உண்டா என்று.
பயனுள்ளவற்றை பேச வேண்டும் என்றால் அப்படிப்பட்ட விஷயங்களை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா ? அதற்கு நிறைய படிக்க வேண்டும், படித்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவற்றை நம் அனுபவத்தோடு சேர்த்து பார்க்க வேண்டும்.
அப்போது நமது அறிவின் எல்லை விரியும். விரிந்த அறிவு பயன் உள்ள சொற்களை தரும்.
பேச்சை குறைப்போம்.
தேவை இல்லாதவற்றை கேட்பதை தவிர்ப்போம்.
நல்லதை படிப்போம், கேட்போம்.
நல்லவற்றை பேசுவோம்.
இது நண்பர்கள் மத்தியில் மட்டும் அல்ல. வீட்டில், மற்ற உறவுகளின் மத்தியில், அலுவலகத்தில், எல்லா இடத்திலும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று.
ஏழு வார்த்தையில் எவ்வளவு விஷயம்.
சிந்திப்போம்.
http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_18.html
உயர்ந்தவர்கள் பயனில்லாத சொற்களை சொல்லக் கூடாது என்பதற்கு அருமையா குறள் . நன்றி.
ReplyDelete