தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 1
நமக்கு ஆயிரம் வேலை. ஒன்றா இரண்டா ? ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று வேலைகள் வரிசையாக நிற்கின்றன. இதற்கு நடுவில் இறைவனைத் தேடுவது, ஞானத்தை தேடுவது என்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது.
போகிற அவசரத்தில், சாமி படத்துக்கு இரண்டு பூவைப் போட்டு, கற்பூரம் காட்டிவிட்டு , வாயில் இரண்டு பாடல்களை முணுமுணுத்து விட்டுப் போகத்தான் நேரம் இருக்கிறது.
எப்போவாவது நேரம் கிடைத்தால் கோவிலுக்குப் போகிறோம்.
இறைவனுக்கு அப்படி அல்ல. அவனுக்கு என்ன வேலை. சும்மா உட்கார்ந்து இருக்கிறான்.
அவனுக்கும் போர் அடிக்காதா ? யாருடா வருவா என்று எதிர்பார்த்து காத்திருப்பானாம். யாராவது வந்தால், "அப்பாடா, இப்பவாவது வந்தியே. வா வா ...எப்ப வந்த, எப்படி இருக்க " என்று விசாரிப்பானாம். ..என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.
பாடல்
ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.
சீர் பிரித்த பின்
ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே
பொருள்
ஒன்றி இருந்து = மனமும் செயலும் வாக்கும் ஒன்றாக இருந்து
நினைமின்கள் = மனதில் நினையுங்கள்
உம் தமக்கு = உங்களுக்கு
ஊனமில்லை = ஒரு குறையுமில்லை
கன்றிய = மிகுந்த கோபம் உள்ள
காலனை = எமனை
காலால் கடிந்தவன் = காலால் உதைத்தவன்
அடியவற்காக = தன்னுடைய அடியவனான மார்கண்டேயருக்காக
சென்று தொழுமின்கள் = சென்று தொழுங்கள்
தில்லையுள் = சிதம்பரத்தில்
சிற்றம்பலத்து = சிறிய அம்பலத்தில்
நட்டம் = நடனம் புரியும் அவன்
என்று வந்தாய் = எப்ப வந்தாய்
என்னும் = என்று கேட்பது போல தோன்றும்
எம் பெருமான் = என்னுடைய பெருமான்
தன் திருகுறிப்பே = அவனுடைய குறிப்பே
இறைவன் நடனமாடுவது , "எப்பப்பா வந்தாய் " என்று கேட்பது போல இருக்கிறதாம்.
மேலோட்டமாய் பார்த்தால் , இந்த பாட்டில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று தோன்றும். மார்கண்டேயருக்காக , காலனை காலால் உதைத்தார். சரி, அதுதான் நமக்குத் தெரியுமே.
தில்லையில், சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகிறார்....அதுவும் தெரியும்.
போய் பார்த்தால், எப்போது வந்தாய் என்று கேட்பது போல இருக்கும் என்கிறார். சரி , இருந்து விட்டு போகட்டும்.
இதையெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது ? இதை போய் வேலை மெனக்கெட்டு ஏன் எழுதி இருக்கிறார். அதை இத்தனை காலம் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன. இதை விட சில சினிமா பாடல்கள் அர்த்தம் நிறைந்ததாகவும், இனிமையாகவும் இருக்கும் போல் இருக்கே.
வைரம் கூட பார்ப்பதற்கு கூழாங்கல் மாதிரித்தான் இருக்கும். சில சமயம் கூழாங்கற்கள் வைரத்தை விட அழகாகக் கூடத் தோன்றும்.
பட்டை தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும். கூழாங்கல் கரைந்து மண்ணாகிப் போய் விடும்.
சரி, பாடலுக்கு வருவோம்.
தொழுமின்கள் : பிற மதங்களில் தொழுகை உண்டு. மற்ற மதங்கள் தான் தொழுகையை கண்டு பிடித்தன என்று நினைக்கக் கூடாது. தொழுகை என்பது சைவ மற்றும் வைணவ மதத்தின் அடிப்படை கோட்பாடு.
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
தொழுது எழு என் மனமே என்பது பிரபந்தம்.
தொழுவார்க்கு ஒரு தீங்கிலையே என்பது அபிராமி அந்தாதி.
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே
தொழுவார்க்கு இரங்கி அருள் செய் , என்பார் அப்பர்.
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!
கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம் .
தொழுதல் என்பது செயப்படு பொருள் குன்றா ஏற்கும் வினைப்.
இது என்ன புதுசா இருக்கே. அப்படி என்றால் என்ன ?
வினைச் சொற்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். செயப்படு பொருளை ஏற்கும் வினைச் சொல், செயப்படு பொருளை ஏற்காத வினைச்சொல் என்று.
யாரை அல்லது எதை என்ற கேள்விக்கு விடை தரும் என்றால் அது செயப்படு பொருள் குன்றா வினைச் சொல்.
உதாரணம்.
தந்தான் - எதைத் தந்தான் ? அறிவை, செல்வத்தை, பொருளை
உண்டான் - எதை உண்டான் ? உணவை உண்டான்
எனவே இவை செயப்படு பொருள் குன்றா வினை.
செயப்படு பொருள் குன்றிய வினை என்றால் என்ன ?
எதை அல்லது யாரை என்று கேள்வி கேட்க முடியாது.
உதாரணம்.
படுத்தான் = எதைப் படுத்தான் ? யாரைப் படுத்தான் என்ற கேள்வி அபத்தமாக இருக்கும்.
தொழுதான் என்ற வினைச்சொல் எதை அல்லது யாரை என்ற கேள்விக்கு விடை தரும். செயப்படு பொருள் குன்றா வினை அது.
http://interestingtamilpoems.blogspot.in/2018/01/1.html
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல அமைந்தது.
ReplyDeleteபடித்த உடனேயே கோவிலுக்கு சென்று பகவானை தொழ வேண்டுமென்கிறஉந்துதல் ஏற்பட்டது.எங்கேயோ படித்தேன்.கோவிலுக்கு போனால் நாம் இறைவனை ஆழ்ந்த பக்தியோடு பார்க்கிறோமோ இல்லையோ
தெரியாது.நிச்சயமாக இறைவன் நம்மை பார்த்து விடுகிறானாமாம்.
உங்கள் பதிவை படித்தால் மறந்து போன இலக்கணமும் சற்று தெரிய வருகிறது!