கருவூர்த் தேவர் திருவிசைப்பா - கேடிலா மெய்ந்நூல் கெழுமியும்
பலர் நிறைய நல்ல புத்தகங்களை வாசிப்பார்கள். வாசிப்பது புரியவும் செய்யும். அதில் உள்ளவை நல்லது என்று அவர்கள் மனம் சொல்லும். இருந்தாலும், நல்லவற்றை வாழ்க்கையில் கடை படிக்க மாட்டார்கள். "நல்லதுதான்...இருந்தாலும் இது எல்லாம் நமக்கு ஒத்து வராது ...நடை முறைக்கு சரி வராது ... இதெல்லலம் சாமியார்களுக்குத் தான் சரி " என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு, அடுத்த புத்தகத்தை வாசிக்கப் போய் விடுவார்கள்.
என்னவென்று சொல்வது அவர்களின் அறிவீனத்தை.
கருவூர் தேவர் சொல்கிறார், தக்கை எவ்வளவு காலம் நீரில் மிதந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட அதன் உள்ளே போகாது. தண்ணீரிலேயே கிடக்கும். சுற்றிலும் தண்ணீர். இருந்தும் ஒரு சொட்டு கூட உள்ளே போகாது. அது போல சிலர். நிறைய படிப்பார்கள். நிறைய கேட்பார்கள். படித்தவர்களோடு பழுகுவார்கள். இருந்தாலும், ஒண்ணும் உள்ளே போகாது.
நான் அப்படி இருக்கிறேன். இருந்தும் நீ எப்படியோ என் நெஞ்சில் புகுந்து விட்டாய் , என்று இறைவனை குறித்து வியக்கிறார் கருவூர் தேவர்.
பாடல்
கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க்
கிடையனா ருடையஎன் னெஞ்சிற்
பாடிலா மணியே மணியுமிழ்ந் தொளிரும்
பரமனே பன்னகா பரணா
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே
.
பொருள்
கேடிலா = கேடு இல்லாத
மெய்ந்நூல் = உண்மையான நூல்கள்
கெழுமியுஞ் = பழகியும்
செழுநீர்க் = செழுமையான அல்லது நிறைந்த நீருக்கு
இடையான உடைய = இடையில் இருக்கும் தக்கை போல
என் னெஞ்சிற் = என் மனதில்
பாடிலா = குற்றமற்ற
மணியே = மணியே
மணியுமிழ்ந் தொளிரும் = மணி உமிழ்ந்து ஒளிரும்
பரமனே = பரமனே
பன்னகா = பாம்பை
பரணா = அணிந்த பரணா
மேடெலாஞ் = மேடு எல்லாம்
செந்நெற் = செம்மையான நெல்
பசுங்கதிர் விளைந்து = பசுமையான கதிரை விளைத்து
மிகத்திகழ் = சிறந்து விளங்கும்
முகத்தலை = முகத்தலை என்ற
மூதூர் = பழமையான ஊரில்
நீடினா யெனினும் = இருந்தாய் என்றாலும்
உள்புகுந் தடியேன் = உள் புகுந்து அடியேன்
நெஞ்செலாம் = நெஞ்சமெல்லாம்
நிறைந்துநின் றாயே = நிறைந்து நின்றாயே
மெய்ந்நூல் கெழுமியுஞ் : நண்பர்களோடு பழகுவோம். காதலன்/காதலியோடு பழகுவோம். நிதம் சென்று பார்ப்போம் . அவர்களோடு இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. எவ்வளவு நேரம் செலவழித்தாலும், இன்னும் கொஞ்ச நேரம் என்று மனம் ஏங்கும். அவர்கள் பக்கத்தில் இல்லாவிட்டால் கூட, அவர்கள் நினைவு கூடவே இருக்கும். அவர்களை நினைக்கும் போது மனம் மகிழ்ச்சி கொள்ளும்.
அது போல நல்ல நூல்களோடு பழக வேண்டுமாம். அடிக்கடி அவற்றைப் படிக்க வேண்டும். நினைத்து மகிழ வேண்டும். கனவிலும் அந்த நூல்கள் வர வேண்டும்.
நூலை வாசித்தால் போதாது. அவற்றோடு பழக வேண்டும்.
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து: நீர் பள்ளம் நோக்கி பாயும். அங்கே நெல் விளையும். ஆனால் இந்த ஊரில் மேட்டில் நெல் விளைகிறதாம். என்ன அர்த்தம் ?
அவ்வளவு நீர் வளம். பள்ளம் நிரம்பி, மேட்டுக்கும் நீர் வருகிறது. அங்கே நெல் விளைகிறது.
அது ஒரு அர்த்தம்.
இறைவன் கருணை அவனை அன்போடு விரும்பும் பக்தர்களுக்கு கிடைக்கும். நான் அங்கு இல்லை. எனக்கு எப்படி கிடைத்தது ? மேட்டில் இருக்கும் நெல்லுக்கு நீர் கிடைத்தது போல, இறைவன் கருணை அவ்வளவு நிறைந்தது என்று சொல்லாமல் சொல்கிறார்.
நீரில் கிடந்தாலும், நீரை உள்ளே விடாத தக்கை போல் இல்லாமல், நல்ல விஷயங்களை உள்ளே அனுமதியுங்கள். அவை உங்களை மேன் மேலும் சிறந்தவர்களாக ஆக்கும்.
அருமை .நன்றி.
ReplyDelete