திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 3
* மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*
"மதி நிறைந்த நன்னாளால்"
நமக்கு நல்ல காரியங்கள் செய்ய பெரிய பட்டியலே இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் நேரம் இருக்காது. பிள்ளைகள் படிப்பு, அவர்கள் வேலை, அவர்கள் திருமணம், பேரன் பேத்தியை பார்த்துக் கொள்ள வேண்டும், வயதான பெற்றோரை பார்க்க வேண்டும், மாமனார் மாமியாரைப் பார்க்க வேண்டும் என்று அந்த நல்ல காரியத்தை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம்.
ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் கூட , அதற்கு முன் ஆயிரம் வேலைகள் இருக்கும் அதையெல்லாம் முடிந்து பின் தான் செய்ய முடியும் என்று அலுத்துக் கொள்வோம்.
எங்க நேரம் இருக்கு? செய்யணும்னுதான் நினைக்கிறேன். நேரம் வாச்சால்ல செய்ய என்று எல்லா நல்ல காரியங்களையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம்.
வள்ளலார் சொல்கிறார்
தாய்தடை என்றேன் பின்னர்த்
தாரமே தடைஎன் றேன்நான்
சேய்தடை என்றேன் இந்தச்
சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
தோய்தடைச் சிறியேன் இன்னுந்
துறந்திலேன் எனைத் தடுக்க
ஏய்தடை யாதோ எந்தாய்
என்செய்கேன் என்செய் கேனே.
முதலில் தாய் தடை என்றேன். வயதான அம்மா அப்பாவை விட்டு விட்டு எங்கே போவது என்று ஒரு தடை.
பின் தாரமே தடை என்றேன். பெண்ட்டாட்டியை விட்டு விட்டு எப்படி சன்யாசம் போக முடியும். அவள் பாவம் அல்லவா.
சேய் தடை என்றேன். பிள்ளைகளை படிக்க வேண்டும், அவர்களுக்கு வேலை, திருமணம், அவர்களின் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்
என்று இப்படி ஒவ்வொரு தடையாக வந்தால், இவற்றை எல்லாம் தாண்ட நான் என்ன செய்யப் போகிறேன் என்று வருந்துகிறார்.
அவருக்கே இப்படி என்றால், நமக்கு எவ்வளவு இருக்கும்?
ஒரு காலும் நம்மால் நல்ல காரியங்கள் செய்ய முடியாது.
நல்ல காரியம் செய்ய எல்லா நாளும் நல்ல நாள் தான் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். கண்ணனை பார்க்கப் போகிறோம், எனவே இந்த நாள் நல்ல நாள் தான் என்று ஆண்டாள் முடிவு செய்கிறாள். இது நல்ல நாள், எனவே நாம் கண்ணனை பார்க்கப் போகலாம் என்று சொல்ல வில்லை.
"நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"
அகம் தூய்மையாக வேண்டும் என்றால், புறம் தூய்மையாக வேண்டும்.
நம்மிடம் நிறைய சாவிகள் இருக்கின்றன. ஆனால், அவை எந்த பூட்டை திறக்கும் என்று நமக்குத் தெரியவில்லைல். ஒரு காலத்தில், கையில் சாவியை கொடுத்து "திறந்து விட்டு வா " என்றால் அவர்களுக்குத் தெரிந்திருந்தது அந்த சாவி எந்த பூட்டை திறக்கும் என்று.
இப்போது நம் கையில் சாவி இருக்கிறது. பூட்டு எது என்று தெரியவில்லை.
காலையில் நீராடி இறைவனை காண வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.
ஏன் நீராட வேண்டும் ? நீராடினால் என்ன ஆகும். நீராடாமல் போனால் என்ன ஆகும்? தெரியாது. எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்கிறோம்.
நீராடுதல் என்பது ஒரு சாவி. அது எந்த பூட்டை திறக்கும் என்று தெரியாது. ஆண்டாளுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்குத் தெரியாது.
உன்னிப்ப்பாக கவனித்துப் பாருங்கள். குளிக்கும் முன் உங்கள் மனம் எப்படி இருக்கிறது, குளித்த பின் எப்படி இருக்கிறது என்று. நிச்சயம் மாறுதல் இருக்கும்.
உடல் குளிரும். இரத்த சூடு கொஞ்சம் குறையும். மூளை குளிரும். சாத்வீகம் இன்னும் மேம்படும்.
அதி காலையில் குளித்துப் பாருங்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும்.
"கூர்வேல் கொடுந் தொழிலன் "
கண்ணனின் வளர்ப்பு தந்தையான நந்தகோபனை பற்றி கூற வந்தவள், கூர்மையான வேலை கொண்ட கொடுமையான தொழில் புரிபவன் என்று கூறுகிறாள்.
அதற்கு ஏதேதோ வியாக்கியானம் சொல்கிறார்கள்.
ஒரு கொடுங்கோலனுக்கு பிள்ளையாய் இருப்பவனே என்று ஆண்டாள் சொல்வாளா ? அவன் கொடுமையான தொழில் புரிபவனாகவே இருந்தாலும் , அதை வேலை மெனெக்கெட்டு சொல்லுவானேன்? சொல்லாமல் விட்டு விட்டு போயிருக்கலாமே. ஏன் வலிந்து அதை சொல்கிறாள் ?
http://interestingtamilpoems.blogspot.in/2018/02/3.html
தமிழ் தொடர் கதையில் வருவதுடன் போல கடைசியில் ஒரு சுவாரசியமான வினாவை எழுப்பி அதற்கு பதிலை அடுத்த பதிவிர்க்கு தள்ளி போட்டு விடுகிறீர்களே!
ReplyDelete