இராமாயணம் - மாரீசன் அறிவுரை - தன்னையே கொல்லும் சினம்
நாம் மற்றவர்கள் மேல் சினம் கொண்டால், அது மற்றவர்களை அழிக்கிறதோ இல்லையோ, நம்மை கட்டாயம் அழிக்கும்.
தன்னை தான் காக்க, சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
என்பார் வள்ளுவர். சினம், தன்னை கொண்டவனை அழிக்கும். அவனை மட்டும் அல்ல, அவன் குலத்தையே அழிக்கும். சந்தேகம் இல்லை.
கோபம் கொண்டவன் என்ன செய்கிறோம் என்ற அறிவை இழக்கிறான். அவன் படித்த புத்தகங்கள், கேட்ட அறிவுரைகள், அறவுரைகள் எல்லாம் காற்றில் போகும். மூர்க்கத்தனமாக எதையேனும் செய்து தனக்கும், தன் குடும்பத்துக்கும், குலத்துக்கும் நாசம் தேடிக் கொள்வான்.
மாரீசன் எவ்வளவோ தடுத்து பார்க்கிறான். இராவணன் கேட்டான் இல்லை. மாரீசனிடம் கோபம் கொள்கிறான்.
இராவணனின் கோபம் கண்டு மாரீசன் பயம் கொள்ளவில்லை. மாறாக , மேலும் அறிவுரை கூறுகிறான்.
"நீ என் மேல் கோபம் கொள்ளவில்லை. உன் மேல் கோபம் கொண்டாய். உன் குலத்தின் மேல் கோபம் கொண்டாய்"
என்று மேலும் சொல்லத் தலைப்படுகிறான்.
பாடல்
தன்னை முனிவுற்ற
தறுகண் தகவிலோனை,
பின்னை முனிவுற்றிடும் எனத்
தவிர்தல் பேணான்
'உன்னை முனிவுற்று உன்
குலத்தை முனிவுற்றாய்;
என்னை முனிவுற்றிலை; இது
என்?' என இசைத்தான்.
பொருள்
தன்னை முனிவுற்ற = தன் மேல் (மாரீசன் மேல்) கோபம் கொண்ட
தறுகண் = வீரம் நிறைந்த
தகவிலோனை = பெருமை இல்லாதவனை
பின்னை = பின்னால்
முனிவுற்றிடும் = கோபம் கொள்ளுவான்
எனத் = என்று
தவிர்தல் = அவனை தவிர்த்து விட்டு போக
பேணான் = நினைக்க மாட்டான்
'உன்னை முனிவுற்று = உன்னுடனேயே நீ சினம் கொண்டு
உன் குலத்தை முனிவுற்றாய் = உன் குலத்தின் மேல் கோபம் கொண்டாய்
என்னை முனிவுற்றிலை = நீ என் மேல் கோபம் கொள்ளவில்லை
இது என்?' = இது எப்படி
என இசைத்தான். = என்று நினைத்தான்
நம் பிள்ளைகளோ, நண்பர்களோ, கணவனோ/மனைவியோ ஒரு தவறு செய்தால், செய்ய முற்பட்டால், நாம் தடுத்துக் கூறுவோம். கேட்க்காவிட்டால் , "நான் சொல்றதை சொல்லிட்டேன்...அப்புறம் உன் இஷ்டம் " என்று விட்டு விடுவோம்.
அப்படி விடக் கூடாது. அவர்கள் செய்ய நினைப்பது தவறு என்றால் , இறுதிவரை போராட வேண்டும்.
"ஆமா...ரொம்ப சொன்னா அவளுக்கு (அவருக்கு) கோபம் வரும். மூணு நாளா மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருப்பா (இருப்பார்) ..எக்கேடும் கெட்டு போகட்டும் "
என்று விடக் கூடாது.
இராவணன் தன் மேல் கோபம் கொள்வான் என்று மாரீசனுக்குத் தெரியும்.
இருந்தும் சொல்கிறான்.
நமக்கு யார் மேலாவது கோபம் வந்தால், நாம் யார் மேல் கோபம் கொண்டோமோ அவர்களுக்கு ஒரு பாதிப்பு இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்களுக்கு நாம் அவர்கள் மேல் கோபமாய் இருக்கிறோம் என்று கூடத் தெரியாது. ஆனால், கோபம் கொண்டவனின் இரத்த அழுத்தம் ஏறும், படபப்பு வரும்.
எனவே, கோபம் நமக்குத்தான் அதிகம் தீங்கு செய்யும்.
கோபம் கொண்டவன், மற்றவர்கள் மேல் கோபம் கொள்வது இல்லை. தன் மேலும் தன் குலத்தின் மேலும் கோபம் கொள்ளுகிறான்.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்
என்பார் வள்ளுவர்.
கோபத்தின் மூலம் நமக்கு நாமே அழிவைத் தேடிகே கொள்கிறோம்.
அதை தவிர்த்தல் நலம்.
http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_7.html
இந்தப் பாடலில் இருந்து இரண்டு அருமையான செய்திகள் வருகின்றன... 1. கோபத்தின் அழிவுத் தன்மை, 2. தவறு செய்பவரைத் திருத்த அவர்தம் உற்றாரின் கடமை.
ReplyDeleteஉன் உரையில் இந்த இரண்டுமே தெளிவாக விளங்குகின்றன.
நன்றி.
கோபம் கொண்டால் அறிவு மழுங்கிறது.எதையும் அலசி பார்க்கின்ற தன்மையை இழந்து விடுகிறோம்.இன்னும் கோபம் அதிகரிக்கிறது.ஆனால் அக்கறை கொண்டோர் லேசில் விட்டுவிடுவதில்லை.முடிந்தவரை சொல்லி பார்க்கிறார்கள்.
ReplyDeleteகோபத்தில் இருப்பவன் திருந்துவது மிக குறைவு.மாரீசனின் நற் குணம் நன்றாக தெரிகிறது.
அருமையான விளக்கம்.