Pages

Tuesday, March 6, 2018

கம்ப இராமாயணம் - நிலமும் மனிதர்களும்

கம்ப இராமாயணம் - நிலமும் மனிதர்களும் 


மனித மனத்தை அவன் வாழும் நிலம் பெருமளவு பாதிக்கிறது. மனிதன் அதை நேரடியாக உணர்வதில்லை. நிலம் , நம் வாழ்வோடு  பின்னி பிணைந்து கிடக்கிறது. தமிழரின் வாழ்வை சொல்ல வந்த நம் இலக்கியம் வாழ்வை அகம் புறம் என பிரித்ததோடு நில்லாமல், அவர்கள் வாழ்ந்த இடத்தையும் குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்தது.

வாழும் நிலம் எப்படி இருக்கிறதோ , மனித மனமும் அப்படியே இருக்கிறது. மண்ணின் வளம், அங்குள்ள நீர் ஆதாரம், விளையும் பொருள்கள் அனைத்தும் மனித மனதை வெகுவாக பாதிக்கிறது.

இராமயாயனம் போன்ற பெரும் காப்பியம் எழுத முனைந்த புலவனுக்கு நில வருணனை செய்ய பல சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. கம்பனும் விடவில்லை. அனைத்து சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தி நில வருணனையை தருகிறான்.

என்ன நில வருணனை தானே, அதில் என்ன இருந்து விடப் போகிறது, மனிதர்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை...இந்த நில வருணனையில் என்ன இருக்கிறது என்று பெரும்பாலான சமயங்களில் அவற்றை நாம் தள்ளிவிட்டு கதைக்குள் போய் விடுகிறோம்.

அது தவறென்று படுகிறது. நில வருணனையில் ஆயிரம் செய்தி இருக்கிறது.

என்னவென்று பார்ப்போம்.


அயோத்தி !

இராமன் பிறப்பதற்கு முன்னால்.

கம்பன் அங்கே போய் விடுகிறான்.

இராமன் பிறக்கப் போகிற பூமி. அது எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

எங்கிருந்து ஆரம்பிப்பது ?

ஊரை பார்த்துக் கொண்டே வந்த கம்பன், ஊர் எல்லைக்கே வந்து விட்டான்.

ஊர் எல்லையில் ஆறு ஓடி வருகிறது.

சரி, ஆற்றில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறான்.

சரி, ஆறு எங்கே ஆரம்பிக்கிறது என்று சிந்திக்கிறான்....ஆறு மலையில் உதிக்கிறது.

சரி, மலையில் இருந்து ஆரம்பிப்போம் என்று நினைக்கிறான்.

இல்லையே, ஆறு மலையில் இருந்து தொடங்கவில்லை, அது மேகத்தில் இருந்து தொடங்குகிறது என்று நினைக்கிறான்.

சரி, மேகத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்று நினைக்கிறான்.

பின், சிந்திக்கிறான், இல்லையே, ஆறு மேகத்தில் இருந்து தொடங்கவில்லை, கடலில் இருந்து  தொடங்குகிறது என்று நினைக்கிறான்...

அவன் நினைவுகள் இப்படியே பின்னோக்கி போய் கொண்டே இருக்கிறது.

என்னதான் செய்தான் ?

ஆற்றைப் பற்றி கூறுகிறேன் என்று ஆரம்பிக்கிறான்....



பாடல்

ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.


பொருள்


ஆசு = குற்றம்

அலம் புரி = துன்பம் புரிகின்ற

ஐம்பொறி = ஐந்து புலன்கள் என்ற

வாளியும் = அம்பும்

காசு அலம்பு = காசு என்பது ஒரு வித ஆபரணம். அது மேனியில் ஆடுகின்ற

முலையவர் = மார்புகளை கொண்ட பெண்களின்

கண் எனும் = கண் என்ற

பூசல் அம்பும் = போர் தொழில் செய்கின்ற அம்பும்

நெறியின் புறம் செலாக் = நல்ல நெறியை விட்டு வெளியே செல்லாத

கோசலம் = கோசல நாடு

புனை = அணிந்து இருக்கும்

ஆற்று அணி கூறுவாம் =ஆற்றின் (சரயு நதியின்) அழகை கூறுவாம்


நில வருணனைதான், இருந்தும் கம்பன் எங்கெல்லாம் தொட்டுச் செல்கிறான்.

ஆசு என்றால் குற்றம் என்று பார்த்தோம்.

வள்ளுவர் கூறுவார்,

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

எவ்வளவு அரிய நூல்களை குற்றமில்லாமல் கற்றாலும், ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது குற்றம் இருக்கும்.

குற்றம் அற்றவர்களே இந்த உலகில் இல்லை என்கிறார் வள்ளுவர். 

இராமாயணத்துக்கு வருவோம். 

ஆடவர்களுக்கு ஐம்புலனும் நெறியல்லா வழியில் செல்லாது. பெண்களின் கண்கள் நெறியல்லா வழியில் செல்லாது என்கிறார். 

ஏன் குறிப்பாக பெண்களின் கண்ணை மற்றும் சொல்கிறார்?

பின்னாளில், காப்பிய போக்கை மாற்றவும், பேரழிவுக்கும் காரணமாய் இருக்கப் போவது ஒரு பெண்ணின் கண்ணசைவு. 

சூர்ப்பனகை என்ற பெண்ணின் கண்ணசைவினால் அரக்க குலமே வேரோடு சாய்ந்தது. 

முக்கோடி தேவர்கள் செய்ய முடியாதை, மும்மூர்த்திகள் செய்ய முடியாததை, சூர்ப்பனகையின் கண்ணசைவு செய்தது. அரக்கர் குலத்தை வேரறுத்தது.

அதற்கு கட்டியம் கூறுவது போல , கோசல நாட்டின் பெண்களின் கண்கள் நெறியல்லா வழியில் செல்லாது என்கிறார் கம்பர். 

அது மட்டும் அல்ல, ஒரு நாட்டிலோ, வீட்டிலோ அறம் நிலைக்க வேண்டும் என்றால் அது பெண்ணால் தான் முடியும். பெண் ஒரு இழை தவறினாலும் , அறம் தவறும். இது ஒரு ஆணாதிக்க சிந்தனை அல்ல. பெண்ணுக்குத் தரும் உச்சபட்ச மரியாதை. 


வீட்டுக்கு ஒரு விருந்தினர் வந்திருக்கிறார். அந்த வீட்டின் பெண் மனது வைத்தால்தான் விருந்து சிறக்கும். ஒன்றும் வேண்டாம், வந்தவருக்கு தண்ணீர் தருகிறேன் என்று அந்த தண்ணீர் குவளையை நங் என்று வைத்தால் வந்த விருந்தினர் சொல்லிக் கொள்ளாமல் ஓடி விடுவார். விருந்து என்ற அறம் சிறக்க வேண்டும் என்றால் பெண்ணின் தயவு இல்லாமல் முடியாது. 

அறம் சிறக்க அன்பும், கருணையும் வேண்டும். அந்த அன்பும் கருணையும் மனதில் இருந்தால் அது கண் வழியே வெளிப்படும். 

பெண்களுக்கு நெற்றி சுருங்கி இருக்குமாம் ஏன் என்றால் அருளையும் கருணையையும் வெளிப்படுத்தும் கண்கள் விரிந்து இருப்பதால். 

அவள் பெயர் விசாலாட்சி. விசாலமான கண்களை உடையவள். 

கோசல நாட்டின் பெண்களின் கண்கள் நெறி தவறாது என்று சொன்னால், அந்த நாட்டில் அறம் சிறந்து விளங்குகிறது என்று பொருள். 

பெண் சரியாக இருக்கிறாள் என்றால் நாடும் வீடும் சரியாக இருக்கிறது என்று பொருள். 

பெண் சோகமாக இருக்கிறாள், கோபமாக இருக்கிறாள் என்றால் அந்த நாடும் வீடும்  சரி இல்லை என்று பொருள். 

நாட்டு வருணனையில் எவ்வளவு நுட்பமான பொருளை வைக்கிறான் கம்பன். 

நாட்டையும், வீட்டையும் சரியாக கொண்டு செல்ல வேண்டுமா ? பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். மற்றதெல்லாம் தானாகவே சரியாகும்.

மேலும் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post.html

2 comments:

  1. ஐம்புலன்களும், பெண்களின் கண்ணசைவும் மனிதர்களின நல்லொழுக்கத்திலிருந்து எளிதில் தவறு பண்ணச்செய்யும். அவைகளே சரயு நதி பாயும் கோசல நாட்டின் நற் பண்பை பற்றி கூறுகிறதாம்

    ReplyDelete