திருக்குறள் - மருந்தே வேண்டாம்
இன்று எந்த கடைத் தெருவுக்குப் போனாலும், பல மருந்துக் கடைகளை காண முடிகிறது. மருத்துவர்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துக் கடைகள், மருத்துவ மனைகள் என்று எங்கு பார்த்தாலும் நோயும், மருந்துமாக இருக்கிறது.
இதற்கு காரணம் என்ன. ஏன் நோய் இவ்வளவு மலிந்து கிடக்கிறது ?
நோய் வருவதற்கு சாப்பாடு ஒரு காரணம் என்று பார்த்தோம்.
எதை உண்பது, எவ்வளவு உண்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது.
அந்த டயட், இந்த டயட் என்று குழப்புகிறார்கள்.
அதைச் சாப்பிட்டால் எடை கூடும், இதைச் சாப்பிட்டால் கேன்சர் வரும், அது நெஞ்செரிச்சல் தரும் என்று ஏகத்துக்கு குழப்புகிறார்கள்.
இதற்கிடையில் மாமிசம் சாப்பிடலாமா கூடாதா என்று காலம் காலமாய் வரும் ஒரு வாதம்.
ஆகக் கூடி குழப்பம் தான் மிஞ்சுகிறது.
வள்ளுவர் அதைத் தெளிவாக்குகிறார்.
பாடல்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
பொருள்
மருந்தென = மருந்து என்ற ஒன்று
வேண்டாவாம் = தேவையில்லை
யாக்கைக்கு = உடலுக்கு
அருந்தியது = உண்டது
அற்றது = காலியான பின்
போற்றி = அறிந்து
உணின் = உண்டால்
இந்த உடம்புக்கு மருந்தே வேண்டாம் ,எப்போது என்றால், முன்பு உண்டது செரிமானமாகி விட்டதா என்று அறிந்து உண்டால்.
கொஞ்சம் விரித்துப் பொருள் காண்போம்.
மருந்தென வேண்டாவாம் = மருந்து என்ற ஒன்றே வேண்டாம். மருந்து யார் தருவார். மருத்துவர் தருவார். மருந்து வேண்டாம் என்றால், மருத்துவரும் வேண்டாம். மருத்துவர் வேண்டாம் என்றால் அவர் செய்யும் சிகிச்சையும் வேண்டாம். மருத்துவமனை பக்கமே போக வேண்டாம்.
எப்போது ?
அருந்தியது அற்றது போற்றி உணின்:
ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்து எடுத்துக் போட்டிருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
அருந்தியது = உண்டது என்று சொல்லாமல் அருந்தியது என்கிறார். ஏன் ? உணவை வாயில் வைத்து நன்றாக பல்லால் கடித்து, உமிழ் நீரால் கரைத்து அருந்த வேண்டும்.
அவசரம் அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு போகக் கூடாது.
இன்னும் பலர் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டே உணவு உட்கொள்வார்கள். சிலர் புத்தகம் படித்துக் கொண்டே. சிலர் செய்தித் தாள் வாசித்துக் கொண்டே. மற்றும் சிலர் பேசிக் கொண்டே உணவு உண்பார்கள்.
இவை அனைத்துமே தவிர்க்க வேண்டியவை.
உணவை கண்ணால் காண வேண்டும். கையால் அதை ஸ்பரிசிக்க வேண்டும். தொட்டு உணர வேண்டும். அதை வாயின் அருகில் கொண்டு செல்லும் போது அதில் இருந்து வரும் மணம் மூக்கில் ஏற வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து வாயில் உமிழ் நீரை சுரக்கச் செய்யும். அப்போது உணவை நன்றாக அரைத்துத் தின்றால், அது கிட்டத்தட்ட ஒரு கட்டியான திரவ வடிவில் ஆகி விடும். அதை அருந்த வேண்டும்.
மேலும், நாம் உண்ணும் போது, வயிறு நிறைந்து விட்டது என்று மூளை உணர்வதற்கு சில ஹார்மோன்கள் சுரக்க வேண்டும். அந்த ஹார்மோன்கள் சுரக்க கிட்டத்தட்ட வயிறு நிறைந்த பின் 20 நிமிடம் ஆகும் என்கிறார்கள்.
அதாவது, வயிறு நிறைந்த பின்னும் நாம் சாப்பிட்டுக் கொண்டே இருப்போம்,வேகா வேகமாக சாப்பிட்டால். மெல்ல சாப்பிட்டால், வயிறு நிறைந்தவுடன் உடனே நிறுத்த முடியும். எனவே தான் வாயில் வைத்து நன்றாக அரைத்து நிதானமாக சாப்பிட வேண்டும்.
"அற்றது" : அற்றது என்றால் அற்றுப் போய் விட வேண்டும். அதாவது, உண்ட உணவு செரிமானமாகி வெளியேற வேண்டும். உணவு வெளியேறுமுன் மேலும் மேலும் உள்ளே தள்ளிக் கொண்டே இருந்தால், கழிவுகளோடு நல்ல உணவும் சேரும். அது நல்லதல்ல.
எதை வேண்டுமானாலும் சாப்பிடு. சர்க்கரையா, கொழுப்பா, எண்ணையா கவலை இல்லை. சாப்பிட்டபின் நன்கு வேலை செய்ய வேண்டும். உண்ட உணவில் உள்ள அனைத்து சத்துகளும் உடலில் சேர்ந்த பின், சக்கை வெளியேறும் வரை காத்திருக்க வேண்டும். பின் அடுத்த உணவை உண்ண வேண்டும்.
சில உணவு வகைகள் சீக்கிரம் செரித்து விடும். சில உணவு வகைகள் நீண்ட நேரம் பிடிக்கும் செரிமானம் ஆக. அவசரப் படக்கூடாது. என்ன சாப்பிட்டாலும், நேரத்துக்கு சாப்பிடுவது என்பதை தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக, பிட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை இரவில் உண்டால், மறு நாள் காலை செரிமானம் ஆகி வெளியேறாது. மதியம் அல்லது மாலை ஆகும். அது வரை காத்திருக்கத் தான் வேண்டும். அது வெளியேறும் முன்பே மேலும் மேலும் உள்ளே தள்ளக் கூடாது.
நமக்கு அனைத்து விதமான உணவும் வேண்டும். உப்பும் வேண்டும், சர்க்கரையும் வேண்டும், காரமும் வேண்டும், புளிப்பும் வேண்டும். அது நல்லது, இது கெட்டது என்று இல்லை. எதை சாப்பிட்டாலும், அது நன்றாக செரிமானம் ஆகும் வரை காத்திருந்து, நன்றாக பசி எடுத்த பின் அடுத்த உணவை உண்ண வேண்டும்.
உணவு எப்படி சீரணம் ஆகும் ? வேலை செய்ய வேண்டும். சும்மா சாப்பிட்டு விட்டு படுத்து கிடந்தால் சீரணம் ஆகாது. உடல் உழைப்பு வேண்டும்.
அப்படி இருந்தால், மருந்தே வேண்டாம்.
இந்த உணவு செரிமானம் ஆகி வெளியேறுவது எவ்வளவு நல்லது என்று வள்ளுவர் கூறுகிறார் தெரியுமா ?
கூடல் இனிதுதான். அதை விட இனிது எது தெரியுமா, மனைவி ஊடல் கொள்வது. அது எப்படி என்றால், சாப்பிடுவது இனிமையானது தான், அதை விட இனிமையானது உண்டது செரித்து வெளியேறுவது என்கிறார்.
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது
அடுத்தது,
"போற்றி உணின்": உணவை போற்ற வேண்டும். உணவு உயிரைத் தருகிறது. அறிவைத் தருகிறது. உலகில் உள்ள இன்பங்களை எல்லாம் அனுபவிக்க வழி வகுக்கிறது. அந்த உணவை போற்ற வேண்டும். "என்னது எப்ப பார்த்தாலும் இதே உணவா, இதில் அது சரியில்ல, அதில் இது சரியில்லை " என்று அலுத்துக் கொள்ளாமல், உணவை போற்றி உண்ண வேண்டும்.
அப்படியெல்லாம் செய்தால், மருந்தே வேண்டாம்.
இல்லை என்றால், மருந்து தான், மருத்துவமனை தான், மருத்துவர் தான்...துன்பம்தான்.
வள்ளுவர் இவ்வளவு கஷ்டப் பட்டு சொன்னதை, அந்தக் கிழவி இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டு போய் விட்டாள்
பசித்துப் புசி
என்று.
என்னத்தச் சொல்ல ?
http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_14.html
கடைசியில் கிழவியின் இரண்டு வார்த்தை ஒரு மெலிதான புனமுறுவலை கொண்டுவந்தது. பெரும்பாலும் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சாப்பாட என மணியை பாரத்து சாப்பிடுகிறோம். வெளியேறுவதறகாக காத்து கொண்டிருப்பதில்லை.நடை முறைக்கு ஒத்துவராத்தால்.
ReplyDeleteமிக தேவையா பதிவு. வாழ்த்துக்கள்
ReplyDelete