Pages

Friday, April 13, 2018

திருக்குறள் - நல்லவை கேட்க

திருக்குறள் - நல்லவை கேட்க 


பாடல்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.

பொருள்

எனைத்தானும் = எவ்வளவு ஆயினும்

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க

அனைத்தானும் = அந்த அளவுக்கு

ஆன்ற = சிறந்த, மாட்சிமை பட்ட,  நிறைந்த

பெருமை தரும் = பெருமை தரும்


நல்லது கேட்டால் நமக்கு நல்லது வரும் என்று சொல்வதற்கு வள்ளுவர் வேண்டுமா? நமக்கே தெரியுமே. இந்த மேலோட்டமான அர்த்தம் தவிர இதில் ஆழ்ந்த கருத்துகள் ஏதாவது இருக்குமா?

எனைத்தானும் என்றால் என்ன?

காலம் மற்றும் பொருளால் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார்.

எவ்வளவு நேரம் கேட்கிறோம் என்று அல்ல கணக்கு. ஒரு நாளில் ஒரு சில நிமிடங்கள் கூட போதும். "அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கிறது" என்று அங்கலாய்ப்பதை விட்டு விட்டு, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அது எவ்வளவு சிறிய காலமாக இருந்தாலும், நல்லவற்றை கேட்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, நல்லது என்றால் ஏதோ மிகப் பெரிய விஷயமாக இருக்க வேண்டும் என்று அல்ல. சின்ன விஷயம் கூட போதும். நல்லவற்றில் பெரியது சின்னது  என்று விலக்கத் தேவை இல்லை.

அனைத்தானும், அந்த அளவுக்கு பெரிய பெருமை தரும். கேட்டா நிறைய கேக்கணும், இல்லாட்டி கேக்கவே கூடாது என்று நினைக்கக் கூடாது. எவ்வளவு கொஞ்சம் கேட்டாலும், அது நல்லது.

அது மட்டும் அல்ல.

கொஞ்சமாக கேட்டால் , கொஞ்சம் பெருமை. நிறைய கேட்டால் நிறைய பெருமை என்று நாம் நினைக்கலாம். எனவே, நிறைய கேட்க வேண்டும் என்று நாம் முடிவும் எடுக்கலாம்.

ஆனால், வள்ளுவர் சொல்லுகிறார், "ஆன்ற பெருமை தரும்" என்று.

கொஞ்சமாகக் கேட்டாலும், சிறந்த பெருமையைத் தரும் என்கிறார். 

சரி. நாம் எவ்வளவோ நல்ல விஷயங்களை கேட்கிறோம். படிக்கிறோம். ஆனால், அப்படி ஒன்றும் ஆன்ற பெருமை வந்து சேர்ந்த மாதிரி தெரியவில்லையே.

நிறைய பேர் தினம் தோறும் விடாமல் டிவி யில் பல பெரியவர்கள் சொல்லும் கருத்துகளை கேட்பார்கள். எத்தனை நாள் கேட்டாலும், பெரிய பெருமை ஒன்றும் வந்த சேர்ந்த மாதிரி இல்லையே.

ஒரு வேளை வள்ளுவர் தவறாகச் சொல்லி இருப்பாரோ ? இல்லை, இருக்கட்டும் என்று கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்லி இருப்பாரோ ?


நல்லவை கேட்டால் பெருமை வரும்.

நல்லவை அல்லாததை கேட்டால் ?

சிறுமை வரும் தானே ?

தீயதை, வேண்டாததை, தவறானதை எவ்வளவு குறைந்த நேரம் கேட்டாலும், எவ்வளவு  குறைவாக கேட்டாலும், பெரிய தீமை வந்து சேரும் என்பது நாம் சிந்தித்து உணர வேண்டிய கருத்து.

எனைத்தானும் அல்லவை கேட்க
அனைத்தானும் ஆன்ற சிறுமை தரும்

என்பது பெறப்பட்ட குறள் .

நாம் எவ்வளவு வேண்டாதவற்றை கேட்கிறோம் ? அளவு இருக்கிறதா ?

டிவி யில், வாட்சப்பிஸ் , மெயிலில் , தொலைபேசியில், வெட்டி அரட்டை அடிப்பதில், எவ்வளவு தீயவற்றை கேட்கிறோம்.

தீயவை என்றால் ஏதோ கொலை, கொள்ளை செய்ய திட்டம்  தீட்டுவது பற்றிய செய்தி அல்ல.

பயனற்றவை எல்லாமே நல்லவை அல்லாதவை தான்.

இம்மைக்கும், மறுமைக்கும் பயனுள்ளவை நல்லவை.

அது அல்லாதவை, தீயவை.

அப்படி என்றால், நாம் கேட்கும் தீயனவற்றிற்கு எவ்வளவு தீமை வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

நமது நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் சில பேர், நம் தன்னம்பிக்கை தளரும் படி பேசுவார்கள். "உன்னால் முடியாது, அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது " என்று சொல்லுவார்கள். அதை கேட்டு, நம் நம்பிக்கை தளரும்.

பொறாமை கொண்டவர்கள், தன்னம்பிக்கை அற்றவர்கள், புறம் கூறுபவர்கள், பயனற்ற வெற்றுச் சொற்களை பேசுபவர்கள், வதந்திகளை பரப்புவார்கள் என்று நிறைய பேர் இருக்கலாம். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு  நாம் தீய வழியில் செல்ல நேரிடலாம். அல்லது, நாம் செய்யக் கூடியவற்றை செய்யாமல் விடலாம்.

நல்லது அல்லாததை கேட்பதில்லை என்று முடிவு எடுங்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு நல்லது அல்லாதவற்றை கேட்பதை குறைக்கிறீர்களோ, உங்களுக்கு பெரிய நன்மை வந்து சேரும்.

வெட்டிப் பேச்சை கேட்பதை குறையுங்கள்.

எனவே, அப்படி பேசுவதையும் குறையுங்கள். நீங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுத் தானே ஆக வேண்டும்.

எனவே நல்லதை கேட்பது எவ்வளவு நல்லதோ, அதே அளவுக்கு நல்லது , நல்லது  அல்லாததை கேட்காமல் இருப்பது.

வெளியில் உள்ள குப்பையை அள்ளிக் கொண்டு வந்து வீட்டுக்குள் யாராவது போடுவார்களா ?

குப்பைகளை ஏன் மண்டைக்குள் திணிக்க வேண்டும் ?

பட்டியல் போடுங்கள். யார் யார் சொல்வதை எல்லாம் கேட்கப் போவதில்லை என்று. எதையெல்லாம் தவிர்க்கப் போகிறீர்கள் என்று (டிவி சீரியல், வாட்சப் அரட்டை...).

இரண்டையும் செய்தால், இரட்டிப்பு நன்மை.

செய்து பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_13.html

1 comment:

  1. நிறைய தவிர்க்க வேண்டியது உள்ளது. எடுத்து உரைத்தற்கு நன்றி

    ReplyDelete