திருக்குறள் - துன்பத்துள் இன்பம்
துன்பத்தையே இன்பமாக கருதி விட்டால், பகைவரும் போற்றும் சிறப்பு உண்டாகும் என்கிறார் வள்ளுவர்.
அது எப்படி துன்பத்தையே , இன்பமாக கருதுவது ? அப்புறம் துன்பத்துக்கும் இன்பத்துக்கும் என்ன வேறுபாடு. இந்த வள்ளுவர் எதையாவது சொல்கிறார். இதெல்லாம் நடை முறைக்கு சரிப் படாது என்று வழக்கம் போல நினைப்போம்.
சிந்திப்போம்.
ஒரு மாணவன் படிக்கிறான். படிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஊர் சுத்தலாம். நண்பர்களோடு விளையாடலாம். அரட்டை அடிக்கலாம். சினிமாவுக்குப் போகலாம். இப்படி எவ்வளவோ சந்தோஷமான காரியங்களை விட்டு விட்டு, படிப்பது என்பது கடினமான செயல் தான். முதுகு வலிக்கும். கழுத்து வலிக்கும். தூக்கம் போகும். உடல் சோர்ந்து போகும். துன்பம் தரக் கூடியதுதான்.
ஆனால்,
அந்த படிப்பையே, "ஆஹா, எவ்வளவு பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. இதை எல்லாம் அறிந்து கொண்டால் எவ்வளவு நல்லது, மார்க் வருவது ஒரு புறம் இருக்கட்டும், இது எவ்வளவு பயனுள்ளது, எப்படியாவது இதை படித்து இதில் சிறந்து விளங்க வேண்டும்" என்று ஆர்வத்தோடு படிப்பது இன்னொரு வகை.
அந்த துன்பத்தில் உள்ள இன்பத்தை அறிந்து கொண்டால், சந்தோஷப் பட்டால், அவனுக்கு எவ்வளவு பெரிய சிறப்பு உண்டாகும் ?
கண்ணில் பட்டதை எல்லாம் சுவைத்துப் பார்ப்பது சுகம் தான். இனிமை தான். அதை விடுத்து, நேரத்துக்கு சாப்பிடுவது, நல்லதை மட்டும் சாப்பிடுவது. தேவையான அளவு சாப்பிடுவது என்று வரை முறை வைத்துக் கொண்டு சாப்பிட்டால் அது துன்பம் தான். ஆனால், அப்படி வரை முறையோடு உண்ணும் போது "இதனால் நான் எடை கூட மாட்டேன், மெலிந்து அழகாக இருப்பேன். ஆரோக்கியமாக இருப்பேன். சுறு சுறுப்பாக இருப்பேன். இப்படி சாப்பாட்டில் கட்டுப் பாடோடு இருப்பது எவ்வளவு நல்லது தெரியுமா " என்று அதையே சந்தோஷமாக செய்யப் பழகி விட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
அலுவலகத்தில் ரொம்பவும் எதிர் பார்த்த பதவி உயர்வு வரவில்லை. ஏமாற்றம் தான். வருத்தம் தான். துன்பம் தான். அதையே துன்பமாக நினைக்காமல் "சரி, இந்த முறை தப்பி விட்டது. அடுத்த முறை விட மாட்டேன். நான் இன்னனது சாதிக்கப் போகிறேன். அதற்கப்புறம் எப்படி எனக்கு பதவி உயர்வு தர மாட்டேன் என்று சொல்லுவார்கள் என்று பார்ப்போம் " என்று முனைந்து பல செயல்களை ஆர்வத்தோடு செய்தால் பதவி உயர்வு தானே வந்துவிட்டுப் போகிறது.
துன்பம் வரும் போது, அதை எதிர் கொள்ளும் வினைகளை எவன் ஒருவன் ஆர்வத்தோடு செய்கிறானோ, அவன் பகைவர்களும் போற்றும் பெருமையை அடைவான்.
ஒவ்வொரு துன்பமும் , பெரிய செயல்களை செய்ய நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று நினைத்து சந்தோஷமாக , வந்த துன்பத்தை முறியடிக்கும் செயல்களை செய்ய வேண்டும்.
அப்படி செய்தால், பெரும் புகழ் கிடைக்கும்.
பாடல்
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு
பொருள்
இன்னாமை = துன்பம்
இன்பம் எனக்கொளின் = இன்பம் என்று கொண்டால்
ஆகும் = ஆகும்
தன் = தன்னுடைய
ஒன்னார் = பகைவர்
விழையும் = மிக விரும்பும் அல்லது பாராட்டும்
சிறப்பு = சிறப்பு
நமக்கு நெருங்கியவர்கள் நம்மை பாராட்டுவது பெரிய விஷயம் அல்ல. நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் கூட நம்மை பாராட்டுவார்கள் என்கிறார் வள்ளுவர்.
உங்கள் துன்பம் என்ன இப்போது ?
http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_4.html
நல்ல குறள். அருமையான விளக்கம்.நன்றி
ReplyDeleteஇப்படி எல்லாம் குறள் இருப்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். நன்றி.
ReplyDelete