Pages

Monday, April 9, 2018

திருவாசகம் - வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

திருவாசகம் - வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

பாடல்

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

"வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க"


அது என்ன வேகம் கெடுத்தல்? எதன் வேகத்தை கெடுத்தார் ?

எது வேகாமாகச் செல்கிறதோ, அதன் வேகத்தை குறைக்க வேண்டும். அவ்வளவுதான்.

எது மிக வேகமாகச் செல்லும் ?

அனுமனின் வேகத்திற்கு ஒரு உதாரணம் தேடினார் கம்பர். மின்னல் போல் வேகம் என்று சொல்லலாமா  என்று யோசித்தார். அதுதான் எல்லோரும் சொல்கிறார்களே. அதை விட வேகமான ஒன்றை உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

மனம் தான் மிகுந்த வேகத்தோடு செல்வது. நினைத்த மாத்திரத்தில் சந்திரனுக்கு சென்று விடலாம். ஒரு நொடி கூட ஆகாது. அந்த மனதின் வேகத்தை விட வேகமாகச் சென்றான் என்பார் கம்பர்.

"தன் மனதின் முன் செல்வான் " என்பது கம்பர் வாக்கு.

முந்துஅரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில்வாச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம்பலகடந்து, தன்மனத்தின்முன் செல்வான்
இந்திரன் சிறைஇருந்த வாயிலின் கடை எதிர்ந்தான்.

நமது மனம்தான். மனோ வேகம் என்று சொல்லுவார்கள். இங்கே இருந்து கொண்டே வைகுண்டம் என்று சொன்னால் போதும் வைகுண்டம் போய்  விடும். பாற்கடல், ஆதி சேஷன், பெருமாள், இலக்குமி என்று அங்கே போய் சேர்ந்து விடும்.

கைலாயம் என்று சொன்னால் போதும். உடனே மனம் அங்கே போய் விடும். குளிர்ந்த  மலை உச்சி, சிவன், பார்வதி, காளை வாகனம் என்று.

எந்நேரமும் ஒரு இடத்தில் நிற்காது. இங்கிருக்கும் போது அங்கே ஓடும். அங்கே இருக்கும் போது இங்கே தாவும். அங்கே பிள்ளை என்ன செய்கிறானோ என்று பிள்ளை இருக்கும் இடத்துக்குப் போகும். அங்கே அவர்  என்ன செய்கிறாரோ என்று கணவன் இருக்கும் இடம் ஓடும். அவ இப்ப என்ன செய்து கொண்டு இருப்பாள் என்று காதலி இருக்கும் இடம்  நாடும். "அந்தக் காலத்தில் " என்று பின்னோக்கி ஓடும். எனக்கு மட்டும் அது கிடைத்தால் என்று எதிர் காலம் நோக்கி ஓடும்.

ஒரு நாள் அமைதியாகி இருந்து கவனித்துப் பாருங்கள். உங்கள் மனம் என்ன ஓட்டம் ஓடுகிறது என்று தெரியும். இடம் விட்டு இடம் மட்டும் அல்ல, காலம் விட்டு காலமும் ஓடும். கற்பனையான இடங்களுக்குப் போகும்.

அதை கொஞ்சம் வேகத்தை நிறுத்தி, ஒரு நிலையில் வைக்க முடியுமா ?

மிக மிக கடினம்.

அருணகிரிநாதர் , முருகன் அருள் கிடைக்க வில்லை என்று கோவில் கோபுரத்தில் ஏறி  கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். குதித்தும் விட்டார். பாதி வழியில், முருகன் கையில் ஏந்திக்  கொண்டான். அருணகிரிக்கு இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் உபதேசம் செய்தான் முருகன். "சும்மா இரு". உடல் சும்மா இருந்து விடும். மனம் சும்மா இருக்குமா ?

மனதை கட்டுப் படுத்த நினைத்தால் அது இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு ஓடும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமது அன்றாட வாழ்க்கையைப் பார்ப்போம். எவ்வளவு பரபரப்பு. ஓட்டம். படபடப்பு.

மனைவியோடு அன்பாக இருந்து பேச நேரம் இல்லை.

பிள்ளைகளை கொஞ்ச நேரம் இல்லை.

மழையில் நனைய, நல்ல கவிதை வாசிக்க, புல் தரையின் இதம் உணர, மென்மையான இசை கேட்க, உணவை இரசித்து உண்ண , கணவன் தலை கோத , மனைவியின் விரல் பற்றி நடக்க .....எதற்காவது நேரம் இருக்கிறதா ?

ஒரே ஓட்டம் தான்.

வாழ்க்கையே புரியாத போது, இறை எங்கே புரியப் போகிறது?

ஓடும் மனதின் வேகத்தைக் குறைத்து, அதை அலை பாய விடாமல் நிறுத்தி என்னை ஆண்டு கொண்ட தலைவன் அடி வாழ்க.

இதைத்தான் பதஞ்சலியும் தன் யோக சாத்திரத்தில் கூறுவார்

"சித்த விருத்தி நிரோதம்" என்று. யோக சூத்தரத்தின் முதல் சூத்திரம் அது.  ஓடும் மனதை நிலை நிறுத்த வேண்டும்.

அடுத்த வரிக்குப் போவோமா ?

"பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க"

வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் தெரியும். சில சமயம் அவசரத்தில் ஈரத் தலையோடு முடியை அவசரமாக முடிந்து கொண்டு போவார்கள். மறு நாள் பார்த்தால், ஒரே சிக்காக இருக்கும். "ஈரத்தோட தலையை முடிந்தால் இப்படித் தான் பிசுக்குப் பிடித்து சிக்கலாக இருக்கும் " என்று அம்மாவிடம் பாட்டு வாங்குவார்கள். அந்த ஈரப் பிசுக்குத் தான் "பிஞ்சு" என்று ஆனது.

சிவன் தலையில் எந்நேரமும் நீர். கங்கை. அதோடு கூட முடி போட்டால் சிக்கல் ஆகி பிசுக்கு பிடிக்காமல் என்ன செய்யும் ?

எனவே "பிஞ்சகன்"

பிறப்பறுக்கும் பிஞ்சகன்.

மரணம் இல்லாமல் வாழ வழி இருக்கிறது. அதற்கு ஒரே வழி பிறக்காமல் இருப்பதுதான். பிறந்தது எல்லாம் இறந்தே தீரும். இறக்காமல் இருக்க வேண்டும் என்றால், பிறக்காமல் இருக்க வேண்டும்.

"பிரபு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்" என்பார் அபிராமி பட்டர்.

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே

என்பது அபிராமி அந்தாதி.

நாம் மறுபடி மறுபடி பிறப்பதால் நமக்கு மட்டுமா துன்பம் ? நம்மை பெறுவதற்கு ஒரு தாய் வேண்டும். அவளுக்கு எவ்வளவு துன்பம்? பிரசவ வேதனை என்றால் சாதாரணமா?  நோய் என்றால் , அடி  கிடி பட்டு விட்டால்  உடம்பில்  ஏதோ ஓரிரண்டு இடத்தில் தான் வலிக்கும். பிள்ளை பெறுவது என்றால் உடம்பு அத்தனையும் வலிக்கும். "அங்கமெல்லாம் நொந்து பெற்றாள் " என்பார் பட்டினத்தார்.  அது அம்மாவுக்கு உண்டான வலி. இந்த பிரம்மன் இருக்கிறானே, நாம் ஒவ்வொரு முறை பிறக்கும் போதும் நமக்கு தலை எழுத்தை எழுத வேண்டும். அவனுக்கு கை வலிக்காதா? எத்தனை தடவைதான் எழுதுவான்?

"இன்னும் ஓர் கருப்பையிலே வாராமல் கா " என்று வேண்டுகிறார் பட்டினத்தடிகள்.


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’

இந்த பிறவிப் பிணியில்  இருந்து விடுதலை தருபவன் ஈசன்.

பிறப்பறுக்கும் பிஞ்சகன் தன் பெய் கழல்கள் வெல்க


மேலும் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_9.html

5 comments:

  1. எது வேகம் என ஆரம்பித்து மனோ வேகத்துக்கு வந்து, அதை ஒடுக்க வழி தேடி’ சும்மா இரு’வில் வந்து மனதை இறைபால் நிறுத்து என மிக அழகாக முடித்தீர். அருமையாக இருந்தது. நன்றி

    ReplyDelete
  2. வேகம் என்ற சொல்லுக்கு கம்பராமாயணத்தையும், "சும்மா இரு" என்ற அருணகிரியாருக்கு உபதேசத்தையும் இணைத்து அருமையான உரை தந்ததற்கு நன்றி.

    பிஞ்ஞகன் என்ற சொல்லின் பொருள் இப்போதுதான் அறிந்தேன். அதற்கும் நன்றி.

    ReplyDelete
  3. விளக்கம் அற்புதம். மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  4. அழகான விளக்கம்

    ReplyDelete