திருக்குறள் - மனத்தாலும் தீமை செய்யக் கூடாது
பாடல்
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
பொருள்
எனைத்தானும் = எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும்
எஞ்ஞான்றும் = எப்போதும்
யார்க்கும் = ஒருவருக்கும்
மனத்தானாம் = மனதாலும்
மாணா = தீங்கு
செய்யாமை = செய்யாமல் இருந்தல்
தலை = தலை சிறந்த அறம்
அவ்வளவுதான் குறள். இதில் என்ன பெரிய கருத்து. யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்பதைச் சொல்ல ஒரு வள்ளுவர் வேண்டுமா ?
சிந்திப்போம்.
துன்பம் என்பது வாய் வார்த்தையாலோ , அல்லது செய்கையாலோ உண்டாக்குவது மட்டும் அல்ல. அவன் நாசாமாகப் போக வேண்டும் என்று மனதாலும் துன்பம் நினைக்கக் கூடாது என்கிறார்.
ஒருவன் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டால், அவன் மேல் மற்றவர்களுக்கு பொறாமை வருவது இயற்கை. அந்தப் பொறாமையில், "என்னமோ அதிஷ்டம் அடித்து விட்டது. எத்தனை நாள் இந்த ஆடம்பரம் என்று பார்க்கலாம். கீழே வராமலா போய் விடுவான் " என்று மனதால் நினைப்பதும் தீங்கு என்கிறார்.
நம்மை விட ஒருவன் கீழாக இருந்தால், அவனுக்கு நாம் தீங்கு செய்து விட முடியும். உதாரணமாக , வீட்டில் வேலை செய்யும் பெண்ணை, நம்மால் எளிதாக திட்ட முடியும், ஏளனம் செய்ய முடியும், உதாசீனப் படுத்த முடியும்.
நம்மை விட உயர்ந்த நிலையில் உள்ள ஒருவரை அப்படி செய்ய முடியாது. அவன் நமக்கு துன்பம் செய்தால், மனதளவில் அவனை சபிப்போம்.
மற்றவன் நம்மை விட உயர்ந்தவனாக இருந்தாலும் சரி, தாழ்ந்தவனாக இருந்தாலும் சரி, யாருக்கும் துன்பம் நினைக்கக் கூடாது.
எனவே தான் "யார்க்கும்" என்றார்.
எளியவர், வலியவர், செல்வர், ஏழை, படித்தவன், படிக்காதவன் என்று யாராக இருந்தாலும் அவர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது.
வாக்கினாலும், உடலினாலும் மட்டும் அல்ல மனதாலும் மற்றவர்களுக்கு துன்பம் நினைக்கக் கூடாது என்று சொல்ல வந்த
"மனத்தானாம்"
என்றார்.
மனதால் நினைக்கக் கூடாது என்று சொல்லி இருந்தால், வாக்கால், உடலால் செய்யலாமா என்ற கேள்வி வரும். மனதாலு'ம்' என்று ஒரு 'ம்' சேர்த்ததன் மூலம், மற்றவற்றாலும் தீங்கு நினைக்கக் கூடாது என்று கூறுகிறார்.
எஞ்ஞான்றும் ..நாம் நம் நண்பர்களுக்கு, நெருங்கிய உறவுகளுக்கு தீங்கு நினைக்க மாட்டோம். மாறாக, எதிரிக்கு, மாற்றானுக்கு, நமக்கு பிடிக்காதவர்களு தீங்கு வர வேண்டும் என்று நினைப்போம். இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை எதிரியாக மாறலாம். அதே போல் இன்று எதிர் அணியில் இருப்பவர்கள் நாளை நம்மோடு சேரலாம். எனவே, எப்போதும் , யாருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது.
வாழ்க்கை யாரை, யாரோடு எப்போது , எப்படி சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, "எப்போதும்" யாருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது.
யாருக்கும், எப்போதும், மனதாலும்/வாக்காலும்/உடலாலும் தீங்கு செய்யக் கூடாது.
சரி, எல்லா தீங்கும் ஒன்றாகுமா ? கொலை செய்வதும், மற்றவனுக்கு ஒரு தீங்கு வர வேண்டும் என்று மனதில் நினைப்பதும் ஒன்றா ?
ஒன்றுதான் என்கிறார் வள்ளுவர்.
"எனைத்தானும்"
என்றால், எவ்வளவு சிறியதாக இருந்தாலும். தீங்கு என்று வந்து விட்டால், அது பெரிதா சிறிதா என்று பாகுபாடு கிடையாது.
ஒருவரை ஏளனம் செய்வது, மட்டம் தட்டுவது, நாலு பேர் முன்னால் கீழ்மையாகப் பேசுவது, மரியாதை குறைவாகப் பேசுவது இதெல்லாம் கூட பெரிய தீங்கு தான்.
எவ்வளவு சிறியதாக இருந்தாலும் , அதை நினைக்கக் கூடாது என்கிறார்.
நமக்கு வேண்டுமானால் அது சிறியதாக இருக்கலாம். மற்றவருக்கு அது பெரிய வேதனையைத் தரலாம். எனவே, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கவோ செய்யவோ கூடாது.
மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருக்கக் கூடாது .
யாராக இருந்தாலும்,
எப்போதும்
எவ்வளவு சிறியதாக இருந்தாலும்
மன வாகு காயங்களால்
துன்பம் நினைக்கக் கூடாது.
ஒண்ணே முக்கால் அடிக்குள் இவ்வளவு அர்த்தச் செறிவு.
இன்னும் கூட இருக்கலாம்.
அப்படிப்படட நல்லவரும் இருக்கிறார்களா?!
ReplyDelete