Pages

Monday, July 30, 2018

குறுந்தொகை - நீரோரன்ன சாயல்

குறுந்தொகை - நீரோரன்ன சாயல்


ஆண் எப்போதுமே கொஞ்சம் முரடு தான். ஒரு மென்மை , நளினம் கிடையாது. ஆக்கிரமிக்கும் மனம், தான் தான் பெரியவன் என்ற ஆளுமை, எதையும் வலிமையால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, போர், போட்டி, வெற்றி, தோல்வி என்று ஒரு போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது ஒரு ஆணின் வாழ்க்கை.

களங்கள் மாறி விட்டன. யுத்த களம் போய் , விளையாட்டு, வணிகம், பணம் சேர்ப்பது, பெரிய வீடு, பெரிய கார் என்று நாடு பிடிக்கும் ஆசை வேறு விதங்களில் பரிணமிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆணின் இந்த முரட்டுத் தனத்தை மென்மை படுத்துபவள் பெண்.

முரடு, கடினம், சூடு, வெப்பம் இவற்றை மாற்றி பூ போன்ற மென்மை , நீர் போன்ற குளிர்ச்சி என்று தருபவள் பெண்.

குறுந்தொகையில் ஒரு காட்சி.

அவன் பெரிய வீரன். சண்டியர். முரடன். அவனின் காதலியோ மென்மையானவள். அவன் சொல்கிறான்

"நீர் போன்ற அந்த சின்னப் பெண் என் வலிமையை எல்லாம் மாற்றி என்னையும் மென்மையாக மாற்றி விட்டாளே " என்று.

பாடல்


மால் வரை இழி தரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்,
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்,
நீரோரன்ன சாயல்,
தீயோரன்ன என் உரன் வித்தன்றே.


பொருள்


மால் வரை = வரை என்றால் மலை. மால் வரை என்றால் பெரிய மலை. சொல்ல சொல்ல கற்பனை செய்து கொண்டே வாருங்கள். பெரிய கரிய மலை.

இழி தரும் = கீழே இறங்கி வரும்

 தூ வெள் அருவி = தூய்மையான வெள்ளை நிற அருவி . கரிய  முரட்டு மலை. அதில் இருந்து பட்டுப் போல இறங்கி வரும் தூய்மையான வெண்மையான அருவி.


கல் முகைத் = மலை குகை. அந்த மலையில் அங்கங்கே குகைகள் இருக்கின்றானா.

ததும்பும் = நிறைந்து இருக்கும்

பன்மலர்ச்  = பல விதமான மலர்களைக் கொண்ட

சாரல் =  மலைச் சரிவு

சிறு குடிக் குறவன் = சிறிய குடிசையில் வாழும் குறவன்

பெருந்தோள் = பெரிய தோள்களை உடைய அவனின்

குறுமகள் = சின்னப் பெண்

நீரோரன்ன = நீர் போன்ற

சாயல் = சாயலை உடையவள்

தீயோரன்ன = தீய குணங்கள் கொண்ட

என் = என்னுடைய

உரன்  = வலிமையை

வித்தன்றே = அவித்தன்றே. குறைத்து விட்டாள்


பாறைகள் நிறைந்த கரடு முரடான பெரிய மலை.

அதில் உள்ள குகைகள். அங்கே பூத்து குலுங்கும் பல வித மலர்கள். அங்குள்ள சிறிய குடிசையில் வாழும் பெரிய தோள்களை உடைய குறவன். அவனின் சின்னப் பெண். அந்தப் பெண், முரடனான என் வலிமையை குறைத்து விட்டாள் என்கிறான்.

மலை, பாறை, குகை - ஆணின் இயல்பு.

மலர், தூய்மை, வெண்மை, நீர் - பெண்ணின் இயல்பு.

அப்படி என்று பாடல் ஆசிரியர் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் இன்றைய பெண்ணிய (feminist ) வாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஏன், பெண்களிலும்  முரடு இல்லையா, நாங்களும் சண்டை போடுவோம்.

பாடல் ஆசிரியர் சொலல்வில்லை. என் கற்பனை அது.


ஆணை, மென்மைப் படுத்தி, அவனை நெறிப் படுத்தும் இயல்பு இயற்கையாகவே பெண்ணிடம் இருக்கிறது.



ஒரு பெண்ணிடம் தான் வலு இழந்ததைக் கூட ஒரு ஆண் பெருமையாகச் சொல்கிறான் என்றால் அது பெண்ணின் பெருமை.  அவளிடம்  தோற்றவன் பெருமைப் படுகிறான்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள ?

http://interestingtamilpoems.blogspot.com/2018/07/blog-post_30.html

Saturday, July 28, 2018

அபிராமி அந்தாதி - திரிபவராம்

அபிராமி அந்தாதி - திரிபவராம் 



எதற்காக பிறந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? இந்த வாழ்வின் நோக்கம் என்ன? அர்த்தம் என்ன? இவ்வளவு இன்பம், துன்பம், சுகம், துக்கம், சண்டை, சச்சரவு, நேசம், பாசம், அடி தடி, கருணை, காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், என்று இவை எல்லாம் எதற்காக?

நமக்கு முன்னால் எவ்வளவோ பேர் பிறந்து, வளர்ந்து , இறந்தும் போனார்கள். அவர்கள் செய்ததுதான் என்ன? சாதித்தது என்ன? நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? அப்படியே சாதித்தாலும் அதனால் என்ன ஆகி விடப் போகிறது?

நாம் ஒரு புதிதாக ஒரு இயந்திரத்தைப் பார்க்கிறோம்.  நமக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்தால் ஏதோ ஒரு இயந்திரம் போல இருக்கிறது. ஆனால், அது என்ன செய்யும், எப்படி செய்யும் என்றெல்லாம் நமக்குத் தெரியாது.

எப்படி கண்டு பிடிப்பது ?

அந்த இயந்திரத்தை  செய்தவனை பார்த்து கேட்கலாம் "இது என்ன மாதிரி இயந்திரம், இது எப்படி வேலை செய்யும்? எதற்காக இதை செய்தாய்?" என்று கேட்கலாம்.

ஒருவேளை, அவன் "இது எதுக்காக செய்தேன் என்று எனக்குத் தெரியாது. சும்மா பொழுது போகல. என்னத்தையோ சேர்த்து வைத்தேன். அவ்வளவுதான். ஒரு பெரிய நோக்கம் எல்லாம் இல்லை " என்று சொன்னால்  நாம் என்ன செய்வோம்? சரி தான், இந்த இயந்திரம் ஏதோ வேலை செய்கிறது. அதற்கென்று ஒரு நோக்கமும் கிடையாது என்று நினைத்துக் கொள்வோம் அல்லவா ?

அது போல,

நம் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று நம்மை படைத்தவனை போய் அபிராமி பட்டர் கேட்டார் ...அதற்கு அவன் சொன்னான் "பெரிய அர்த்தம் எல்லாம் இல்லை. சும்மா விளையாட்டுக்கு செய்தேன் அவ்வளவுதான் " என்று.

வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மட்டும்தான். வேறு பெரிய நோக்கம் எல்லாம் கிடையாது. போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பாடல்


ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும் 
காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு 
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென் 
நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு  நகையுடைத்தே.


பொருள்

ஏத்தும் அடியவர் = போற்றும் அடியவர்கள்

ஈரேழ் உலகினையும் = பதினான்கு உலகையும்

படைத்தும் = படைத்து

காத்தும் = காத்து

அழித்தும் = அழித்து

திரிபவராம் = திரிபவராம்

கமழ் பூங்கடம்பு = மணம் வீசும் கடம்ப பூவின் மாலையை

சாத்தும் = அணிந்து இருக்கும்

குழல் = குழலை (தலை முடி) உடைய

அணங்கே = பெண்னே (அபிராமியே)

மணம் நாறும் = மணம் வீசும்

நின் = உன்

தாளிணைக்கு = தாள் + இணைக்கு = இணையான இரண்டு திருவடிகளுக்கு

கென் = என்

நாத்தங்கு = நா+ தங்கு = நாவில் தங்கும்

புன்மொழி = மோசமான வார்த்தைகள்

ஏறிய வாறு = சென்று அடைந்தது எவ்வாறு ?

நகையுடைத்தே = ஒரே சிரிப்புக்கு இடமாக இருக்கிறது. நகைக்கும் படி இருக்கிறது.


ஒருவன் வேலை வெட்டி இல்லாமல், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால், "பாரு வேலை வெட்டி இல்லாமல் சும்மா ஊர் சுத்திக்கிட்டு திரிகிறான்" என்று சொல்லுவார்கள்.

திரிதல் என்றால் ஒரு நோக்கமும் இல்லாமல் காரியம் செய்தல்.


இறைவன், இந்த உலகை படைத்தும், காத்தும், அழித்தும் செய்யும் செய்கைக்கு ஒரு நோக்கமும் இல்லை.

"படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்"

அவனுக்கே ஒரு நோக்கமும் இல்லை என்றால், உங்களுக்கு எங்கிருந்து ஒரு நோக்கம் வருகிறது?  விட்டுத் தள்ளுங்கள்.

சரி, இந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இந்த உலகை படைத்து, காத்து, அழித்து செய்யும் செயலுக்கு ஒரு நோக்கமும் இல்லை என்று சொல்லி விட முடியுமா ?


நல்ல கேள்வி. முடியாதுதான்.

வேறு எங்காவது இப்படி சொல்லி இருக்கிறார்களா என்று பார்ப்போம்.

கம்ப இராமாயணம். மிதிலை நகர். அங்குள்ள பெண்கள் எல்லாம் அவ்வளவு அழகாக இருப்பது மட்டும் அல்ல, அழகாகவும் நடப்பார்களாம். பெண்களின் நடை அழகுக்கு அன்னப் பறவையை  உதாரணம் சொல்லுவார்கள். ஆனால், மிதிலை நகர் பெண்கள் அன்னப் பறவையை விட அழகாக நடக்கிறார்கள். இதனால், அந்த ஊர் அன்னப் பறவைகளுக்கு ரொம்ப வருத்தம். எப்படியாவது  தங்கள் நடை அழகை சரி செய்ய வேண்டும் என்று அவை எவ்வளவோ முயன்றன. முடியவில்லை. வெறுத்துப் போய் , கால் போன போக்கில், ஒரு நோக்கம் இல்லாமல் "திரிய" ஆரம்பித்து விட்டன.


சேலுண்ட ஒண்க ணாரின் திரிகின்ற செங்கால் அன்னம் 
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை 
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளி கனைப்பச் சோர்ந்த 
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா ராட்டும் பண்ணை

அன்னங்கள் திரிந்தன. ஒரு நோக்கமும் இல்லாமல்.

அது மட்டும் அல்ல, கம்பர் சொல்கிறார்,  இறைவன் இந்த உலகை படைப்பதும் , காப்பதும், அழிப்பதும் ஒரு விளையாட்டு என்கிறார்.

விளையாட்டு என்றால் என்ன ? ஒரு தீவிர நோக்கம் இல்லாதது. சும்மா ஒரு பக்கம் பந்தை போடுவார்கள், இன்னொரு பக்கம் அடிப்பார்கள். அதில் என்ன பெரிய   காரியம் நடக்கிறது. ஒன்றும் இல்லை.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே

இறைவன் செய்யும் இந்த வேலை ஒரு விளையாட்டு. பெரிய காரியம் ஒன்றும் கிடையாது.

நீங்களும் வாழ்க்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். எதற்கு இவ்வளவு தீவிரம் (seriousness ), tension , anxiety , மன அழுத்தம், போட்டி, பொறாமை, ஏமாற்றம் எல்லாம் ?

நெகிழ விடுங்கள். விளையாட்டாக எடுங்கள். எல்லாம் இனிமையாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/07/blog-post_28.html