குறுந்தொகை - நீரோரன்ன சாயல்
ஆண் எப்போதுமே கொஞ்சம் முரடு தான். ஒரு மென்மை , நளினம் கிடையாது. ஆக்கிரமிக்கும் மனம், தான் தான் பெரியவன் என்ற ஆளுமை, எதையும் வலிமையால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, போர், போட்டி, வெற்றி, தோல்வி என்று ஒரு போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது ஒரு ஆணின் வாழ்க்கை.
களங்கள் மாறி விட்டன. யுத்த களம் போய் , விளையாட்டு, வணிகம், பணம் சேர்ப்பது, பெரிய வீடு, பெரிய கார் என்று நாடு பிடிக்கும் ஆசை வேறு விதங்களில் பரிணமிக்கத் தொடங்கி இருக்கிறது.
ஆணின் இந்த முரட்டுத் தனத்தை மென்மை படுத்துபவள் பெண்.
முரடு, கடினம், சூடு, வெப்பம் இவற்றை மாற்றி பூ போன்ற மென்மை , நீர் போன்ற குளிர்ச்சி என்று தருபவள் பெண்.
குறுந்தொகையில் ஒரு காட்சி.
அவன் பெரிய வீரன். சண்டியர். முரடன். அவனின் காதலியோ மென்மையானவள். அவன் சொல்கிறான்
"நீர் போன்ற அந்த சின்னப் பெண் என் வலிமையை எல்லாம் மாற்றி என்னையும் மென்மையாக மாற்றி விட்டாளே " என்று.
பாடல்
மால் வரை இழி தரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்,
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்,
நீரோரன்ன சாயல்,
தீயோரன்ன என் உரன் வித்தன்றே.
பொருள்
மால் வரை = வரை என்றால் மலை. மால் வரை என்றால் பெரிய மலை. சொல்ல சொல்ல கற்பனை செய்து கொண்டே வாருங்கள். பெரிய கரிய மலை.
இழி தரும் = கீழே இறங்கி வரும்
தூ வெள் அருவி = தூய்மையான வெள்ளை நிற அருவி . கரிய முரட்டு மலை. அதில் இருந்து பட்டுப் போல இறங்கி வரும் தூய்மையான வெண்மையான அருவி.
கல் முகைத் = மலை குகை. அந்த மலையில் அங்கங்கே குகைகள் இருக்கின்றானா.
ததும்பும் = நிறைந்து இருக்கும்
பன்மலர்ச் = பல விதமான மலர்களைக் கொண்ட
சாரல் = மலைச் சரிவு
சிறு குடிக் குறவன் = சிறிய குடிசையில் வாழும் குறவன்
பெருந்தோள் = பெரிய தோள்களை உடைய அவனின்
குறுமகள் = சின்னப் பெண்
நீரோரன்ன = நீர் போன்ற
சாயல் = சாயலை உடையவள்
தீயோரன்ன = தீய குணங்கள் கொண்ட
என் = என்னுடைய
உரன் = வலிமையை
வித்தன்றே = அவித்தன்றே. குறைத்து விட்டாள்
பாறைகள் நிறைந்த கரடு முரடான பெரிய மலை.
அதில் உள்ள குகைகள். அங்கே பூத்து குலுங்கும் பல வித மலர்கள். அங்குள்ள சிறிய குடிசையில் வாழும் பெரிய தோள்களை உடைய குறவன். அவனின் சின்னப் பெண். அந்தப் பெண், முரடனான என் வலிமையை குறைத்து விட்டாள் என்கிறான்.
மலை, பாறை, குகை - ஆணின் இயல்பு.
மலர், தூய்மை, வெண்மை, நீர் - பெண்ணின் இயல்பு.
அப்படி என்று பாடல் ஆசிரியர் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் இன்றைய பெண்ணிய (feminist ) வாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஏன், பெண்களிலும் முரடு இல்லையா, நாங்களும் சண்டை போடுவோம்.
பாடல் ஆசிரியர் சொலல்வில்லை. என் கற்பனை அது.
ஆணை, மென்மைப் படுத்தி, அவனை நெறிப் படுத்தும் இயல்பு இயற்கையாகவே பெண்ணிடம் இருக்கிறது.
ஒரு பெண்ணிடம் தான் வலு இழந்ததைக் கூட ஒரு ஆண் பெருமையாகச் சொல்கிறான் என்றால் அது பெண்ணின் பெருமை. அவளிடம் தோற்றவன் பெருமைப் படுகிறான்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள ?
http://interestingtamilpoems.blogspot.com/2018/07/blog-post_30.html
நயம்பட விவரித்தீர்கள்.நன்றி
ReplyDeleteஅருமையாக எழுதுகிறீர்கள் ரசித்துப்படிக்கிறேன்.
ReplyDeleteபெண்ணிடம் மயங்கித் தன் வலுவிழந்ததை என்ன அழகாகச் சொல்கிறான் இந்தப் பாடலின் நாயகன்!
ReplyDeleteVery beautiful..keep sharing more such poems especially from kurunthogai.
ReplyDelete