அறப்பளீசுர சதகம் - செய்ய முடியாத செயல்
அறப்பளீசுர சதகம் என்ற நூல் அம்பலவாண கவிராயர் என்பவரால் எழுதப் பட்டது. கொல்லிமலையில் உள்ள சிவன் மேல் பாடப்பட்ட நீதி நூல். மிக மிக எளிமையான நூல். 100 பாடல்களை கொண்டது. அதில் இருந்து ஒரு பாடல். பிடித்திருந்தால் , மற்ற பாடல்களை மூல நூலை படித்து அறிக.
உலகில் யாராலுமே செய்ய முடியாத ஒன்று இருக்கிறது. எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் முடியாது. அது என்ன காரியம் தெரியுமா ?
பாடல்
நீர்மே னடக்கலா மெட்டியுந் தின்னலா
நெருப்பைநீர் போற் செய்யலாம்
நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலா
நீளரவி னைப்பூண லாம்
பார்மீதில் மணலைச் சமைக்கலாஞ் சோறெனப்
பட்சமுட னேயுண் ணலாம்
பாணமொடு குண்டுவில கச்செய்ய லாமரப்
பாவைபே சப்பண் ணலாம்
ஏற்மேவு காடியுங் கடையுற்று வெண்ணெயு
மெடுக்கலாம் புத்தி சற்று
மில்லாத மூடர்த மனத்தைத் திருப்பவே
எவருக்கு முடியாது காண்
ஆர்மேவு கொன்றைபுனை வேணியா சுரர்பரவு
மமலனே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே. 15
பொருள்
நீர்மே னடக்கலாம் = நீர் மேல் நடக்கலாம்
எட்டியுந் தின்னலாம் = விஷம் நிறைந்த எட்டிக் காயையும் தின்னலாம்
நெருப்பைநீர் போற் செய்யலாம் = நெருப்பை நீர் போல குளிரச் செய்யலாம்
நெடிய = நீண்ட
பெரு வேங்கையைக் = பெரிய புலியை
கட்டியே தழுவலாம் = கட்டித் தழுவலாம்
நீளரவி னைப் = நீள் + அரவினை = நீண்ட பாம்பை
பூண லாம் = ஆபரணமாக அணிந்து கொள்ளலாம்
பார்மீதில் = உலகில்
மணலைச் சமைக்கலாஞ் = மணலை சமைக்கலாம்
சோறெனப் = சோறு என்று
பட்சமுட னேயுண் ணலாம் = பலகாரமாக அதை உண்ணலாம்
பாணமொடு = அம்பு
குண்டு = துப்பாக்கி குண்டு
விலகச் செய்ய லாம் = விலகி ஓடும்படி செய்யலாம்
மரப் பாவை = மர பொம்மையை
பே சப்பண் ணலாம் = பேசும்படி செய்யலாம்
ஏற்மேவு காடியுங் = காடியை
கடையுற்று = கடைந்து
வெண்ணெயு மெடுக்கலாம் = வெண்ணை எடுக்கலாம்
புத்தி சற்று மில்லாத = புத்தி இல்லாத
மூடர் தம் மனத்தைத் = மூடர்களின் மனதை
திருப்பவே எவருக்கு முடியாது = திருப்ப யாருக்கும் முடியாது
காண் = கண்டு கொள்
ஆர்மேவு = விருப்பமுடன்
கொன்றை = கொன்றை மலரை
புனை வேணியா = புனைபவனே
சுரர் = தேவர்கள்
பரவு = போற்றும்
மமலனே = அமலனே
யருமை = அருமை
மதவேள் = தேவனே
அனுதினமும் = அனு தினமும்
மனதினினை = மனதில் நின்னை
தரு சதுர கிரிவள = தருகின்ற சதுர கிரி வளர்
அறப்பளீ சுர தேவனே = அறப்பளீசுர தேவனே
http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_20.html
இது ஒன்றே பதம் பார்க்க போதுமானது. எ்லா பாடல்களையும் படிக்க ரசிக்க அவா. தேடி பார்க்கிறேன்.
ReplyDeleteஉங்களுடைய ஈமெயில் கொடுக்க இயலுமா?
kpartha12@gmail.com
Deletemy email id is rethin@hotmail.com
Deleteவேடிக்கையான பாடல்!
ReplyDeleteமிக அருமை ஐயா இன்றே தங்கள் தளம் கண்டேன்..
ReplyDeleteபடிக்கும் ஆவல் பிறக்கிறது..
தொடர்கிறேன்
அன்புடன்
அனுபிரேம்
https://anu-rainydrop.blogspot.com/