Pages

Friday, September 21, 2018

அறப்பளீசுரம் - எது அழகு

அறப்பளீசுரம் - எது அழகு 


ஒருத்தர் கிட்ட திட்டு வாங்குவது அழகா? ஒரு பெண், நாணத்தை விட்டு,  தானே காமத்தோடு வந்து மேலே விழுந்தால் அது சிறப்பா?  பொருள் இல்லாமல் ஏழையாக இருப்பதில் என்ன பெருமை இருக்க முடியும்? கை கால் போய் முடமாக இருப்பது ஒரு அழகா ? ஒரு செயலை செய்ய முயன்று அதில் தோல்வி அடைந்தால் அது அழகா ?


அழகுதான். அதிலும் ஒரு அழகு இருக்கு என்கிறது அறப்பளீசுரம்.


யார் செய்கிறார்கள் என்பதில் இருக்கிறது அழகு.


வகுப்பில், ஆசிரியர் நம்மைத் திட்டுகிறார்..."மண்டு மண்டு ...எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தேன்...இன்னும் உன் மர மண்டையில் ஏற வில்லையா...சரி இப்படி படி " என்று திட்டி சொல்லித் தருகிறார். வீட்டில் பெற்றோர் கண்டிக்கிறார்கள். இவர்களிடம் திட்டு வாங்குவது அவமானமா? இல்லை. பெரியவர்கள் பாராட்டினாலும், திட்டினாலும் அது ஒரு அழகுதான்.


கட்டிய மனைவி அன்போடு ஆசையோடு வந்து அணைத்தால் அது அசிங்கமா? சுகம்தானே ?


தன்னிடம் இருந்த செல்வங்களை மற்றவர்களுக்கு வாரி வாரி வழங்கி ஒருவன் ஏழையாக போனால் அது பெருமை இல்லையா?


நாட்டை காக்க போராடி ஒருவன் கையையோ காலையோ இழந்து விட்டால், அவனை முடவன் என்றா ஊர் கேலி செய்யும்? அவனை பெருமையோடு பார்க்கும் அல்லவா?


பெரிய யானை மேல் ஏறும் போது தவறி விழுந்தால் யாரும் சிரிக்க மாட்டார்கள். அதுவே ஒரு நாயின் மேல் ஏற முயன்று தவறி விழுந்தால், ஊரே கை கொட்டி சிரிக்கும் அல்லவா ?


செயலிலோ, செயலின் வெளிப்பாட்டிலோ அசிங்கம் இல்லை. யார் , எதற்காக செய்கிறார்கள் என்பதில் இருக்கிறது உயர்வும் தாழ்வும்.


தோல்வி ஒரு பெரிய விஷயம் இல்லை. இதில் தோல்வி அடைந்தோம் என்பதில் இருக்கிறது அது உயர்வா தாழ்வா என்பது.


பாடல்



வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
     மேன்மையோர் செய்யில் அழகாம்!
  விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
     விழைமங்கை செய்யில் அழகாம்!

தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து
     சாரிலோ பேர ழகதாம்!
  சரீரத்தில் ஓர்ஊனம் மானம்எது ஆகிலும்
     சமர்செய்து வரில்அ ழகதாம்?

நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
     நாளும்அது ஓர ழகதாம்!
  நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்
     நகைசெய்தழ கன்றென் பர்காண்!

அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

பொருள்

வெகுமானம் ஆகிலும்  = பாராட்டு ஆனாலும்

அவமானம் ஆகிலும் = அவமானம் ஆனாலும்

மேன்மையோர் செய்யில் அழகாம்! = மேன்மை உடைய பெரியவர்கள் செய்தால் , அல்லது தந்தால் அது அழகு


விரகமே ஆகிலும்  = காம வயப்பட்டாலும்

சரசமே ஆகிலும் = சரசம் செய்ய வந்தாலும்

விழைமங்கை செய்யில் அழகாம்! = நமக்கு உரிய பெண் (மனைவி) செய்தால் அது அழகு.

தகுதாழ்வு = தகுதியான தாழ்வு (என்ன ஒரு வார்த்தை)

வாழ்வு = வாழக்கை

வெகு தருமங்க ளைச்செய்து = பெரிய தருமங்களைச் செய்து

சாரிலோ  = வந்தாலோ

பேர ழகதாம்! = அந்த ஏழ்மையும் ஒரு பெரிய அழகு

சரீரத்தில் ஓர்ஊனம் = உடம்பில் ஒரு ஊனம்

மானம் = அவமானம்

எது ஆகிலும் = எது என்றாலும்

சமர் செய்து வரில் அழகதாம்? = நாட்டை காக்க எதிரியோடு போராடி பெற்றால் அதுவும் ஒரு அழகுதான்

நகம் மேவு = மலை போன்ற

மதகரியில் = மதம் கொண்ட யானையின் மேல்

ஏறினும் தவறினும் = ஏறினாலும், தவறி ஏறும் போது தவறி விழுந்தாலும்

நாளும்அது ஓர ழகதாம்! = அதுவும் ஒரு அழகுதான்

நாய்மீதில் = நாயின் மேல்

ஏறினும் = ஏறினாலும்

வீழினும் = வீழ்ந்தாலும்

கண்டபேர்  = காண்போர்

நகைசெய்தழ கன்றென் பர்காண்! = கை கொட்டிச் சிரிப்பார்கள்

அகம்ஆயும் = தன்னை ஆராய்ச்சி செய்யும்

 நற்றவர்க் கருள் புரியும் = நல்லவர்களுக்கு அருள் புரியும்

ஐயனே! = ஐயனே

ஆதியே!  = மூலப் பொருளே

அருமை மதவேள் = அருமையான மதவேள் (அரசன்)

அனுதினமும் = தினமும்

மனதில்நினை = மனதில் வழிபடும்

தருசதுர கிரிவளர் = தருகின்ற சதுர கிரி என்ற மலையில் உறையும்

அறப்பளீ சுரதே வனே! = அறப்பளீசுர தேவனே

சின்ன காரியத்தை எடுத்து, அதில் வெற்றி பெற்றாலும் ஊரார் நகைப்பார்கள். பெரிய காரியத்தில் தோல்வி அடைந்தாலும் ஊர் பாராட்டும்.


விளைவுகள் மட்டுமே உயர்வு தாழ்வை நிர்ணயம் செய்வது இல்லை. யார் செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே உயர்வும் தாழ்வும் அமைகிறது.


இந்தப் பட்டியல் ஒரு சில உதாரணம் மட்டுமே. அது சொல்ல வரும் கருத்தை மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும்.



http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_21.html









1 comment:

  1. சுவாரசியமான செய்திகள் கொண்ட பாடல். (இந்தச் செய்திகளுக்கும், இறை வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு என்பது புரியவில்லை.)

    ReplyDelete