Pages

Sunday, September 9, 2018

தாயுமானவர் பாடல் - மன நிலை

தாயுமானவர் பாடல் - மன நிலை 


நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்போம்....செய்யத் தொடங்குவோம்...ஒரு whatsapp மெசேஜ் வரும், டிவி யில் நல்ல பாட்டோ, படமோ வரும், இல்லை என்றால் சீரியல், ஒரு போன் கால், இப்படி ஏதாவது வரும். நாமும் அதுதான் சாக்கு என்று தொடங்கிய வேலையை விட்டு விட்டு மற்றவற்றின் பின் சென்று விடுவோம்.

நல்ல புத்தகங்களை படிப்பது, நல்லவர்கள் சொல்வதை கேட்பது , அவர்களை சென்று பார்ப்பது எல்லாம் "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் " என்று தள்ளிப் போட்டு விடுகிறோம்.

தாயுமானவர் சொல்கிறார், நல்லவர்கள் எதிரில் வந்தால், ஒளிந்து கொள்வேன் என்று. எதுக்கு வம்பு, அவர் ஏதாவது சொல்வார், நமக்கு பிடிக்காது, என்று ஒளிந்து கொள்வாராம்.

பிள்ளைகளுக்கு எப்படி பெற்றோர் சொல்வது பிடிக்காமல் ஒதுங்கிக் கொள்கிறார்களோ, எப்படி ஆசிரியர் சொல்வது பிடிக்காமல் மாணவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்களோ அப்படி....


பாடல்



இரக்கமொடு பொறைஈதல் அறிவா சாரம்
    இல்லேன்நான் நல்லோர்கள் ஈட்டங் கண்டால்
கரக்குமியல் புடையேன்பாழ் நெஞ்சம் எந்தாய்
    கருந்தாதோ வல்லுருக்கோ கரிய கல்லோ.


பொருள்


இரக்கமொடு = இரக்கத்தோடு

பொறை = பொறுமை

ஈதல் = மற்றவர்களுக்கு கொடுத்தல்

அறிவா சாரம் = அறிவு , ஆசாரம் (ஒழுக்கம்)

இல்லேன்நான் = இல்லேன் நான்

நல்லோர்கள் = நல்லவர்கள்

ஈட்டங் கண்டால் = வரவு கண்டால்


கரக்குமியல் புடையேன் = மறைந்து கொள்ளும் இயல்பு உடையவன் நான்

பாழ் நெஞ்சம் = பாழான என் நெஞ்சம்

எந்தாய் = என் தந்தை போன்றவனே

கருந்தாதோ  = கரிய தாதோ (இரும்பு)

வல்லுருக்கோ = வலிமையான உருக்கு உலோகமோ

கரிய கல்லோ = கரிய கல்லோ


நல்லது எது கெட்டது எது என்று தெரியும். இருந்தும் செய்வது கிடையாது. ஏன் ?

அவை மனதில் படிவது இல்லை.

மனம் இளகினால் அல்லவா அதில் எதுவும் பதியும்.

கல்லிலும், இரும்பிலும் என்ன பதியும்?

நெஞ்ச கனகல்லு நெகிழ்ந்து உருக வேண்டும்...

அதற்கு என்ன செய்ய வேண்டும்...நல்லவர்களை கண்டால் ஓடி ஒளியக் கூடாது.

3 comments:

  1. நாம் அறியாமையிலும் மன இருளிலிருந்து விடு பட நல்லவர்களின் சகவாசமும் அறிவுரைகளும் அவசியம்.அவர்களை கண்டு ஒளிவதால் நமக்குதான் நஷ்டம் என நயம்பட கூறியிருக்கிறார்.
    இருந்தும் நாம் மனம் தெளிந்த கற்று உணர்ந்த பெரியோர்களை தயக்கத்தினால் காண அல்லது பேச அணுகுவதில்லை. சான்றோர் சகவாசம் நம்மை அறியாமல் நம்மனதை நல் வழியில் திருப்பிவிடும்.

    ReplyDelete
  2. நாம் நமக்குத் பிடித்த விஷயங்களை மட்டுமே கேட்க விரும்புகிறோம்.

    ReplyDelete
  3. புதியதகவல். தாயுமானவரின் இந்தப் பாடலை இப்போதுதான் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete