Pages

Friday, October 5, 2018

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஓர் அடியானும் உளன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஓர் அடியானும் உளன் 


தினமும் நூற்றுக் கணக்கான பேர் கோவிலுக்குப் போகிறார்கள். வருகிறார்கள்.

கோவிலில் என்ன செய்கிறார்கள் ?

ஆண்டவா, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு என்று வேண்டுவார்கள்.

அல்லது

என்னை இந்த சோதனையில் இருந்து காப்பாத்து, எனக்கு ஏன் இந்த சோதனை என்று அவனிடம் முறை இடுவார்கள்.

அல்லது

இன்னும் சில பேர் சொல்லக் கூடும்,  "நான் அப்படி எல்லாம் இல்லை...நான் கோவிலுக்குப் போனால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு வருவேன்...எவ்வளவோ எனக்கு கிடைத்து இருக்கிறது. அனைத்துக்கும் நன்றி சொல்வேன்" என்று பெருமிதமாகச் சொல்வார்கள்.

எல்லாம் சுயநலம் தானே ?

நம்மாழ்வார் கேட்கிறார், யாராவது ஒருத்தர் , உலகில் எவ்வளவோ பேர் துன்பப்  படுகிறார்கள். அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை பண்ணியது உண்டா என்று ?

நம் கவலைதான் நமக்கு பெரிதாக தெரிகிறது. நம்மை விட ஆயிரம் மடங்கு கவலை உள்ளவர்கள் எவ்வளவோ பேர் இருப்பார்கள், சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், உயிருக்கு போராடிக் கொண்டு, நெருங்கிய உறவுகள் மருத்துவமனையில் நோயோடு துன்பப் பட்டுக் கொண்டு, நாளை என்ன ஆகப் போகிறதோ என்ற பயத்தோடு எவ்வளவு பேர் எவ்வளவு துன்பம் அனுபவிக்கிறார்கள்.  அவர்களுக்காக நாம் ஒரு கணம் பரிந்து இறைவனிடம்  வேண்டுகிறோமா ? நாம் மற்றவர்களுக்கு இரங்கா விட்டால், இறைவன் நம் மேல் எப்படி இரக்கம் கொள்ளுவான் ?

ஆழ்வார், திருவண்பரிசாரம் என்ற ஊரில் இருக்கிறார். அந்த ஊரில் நிறைய பேர் கோவிலுக்கு போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். ஒருத்தராவது பெருமாளிடம் போய் "பெருமாளே, உம்மை காண வேண்டும், உம்மோடு இருக்க வேண்டும்   என்று துடித்துக் கொண்டு ஒருவன் வெளியே இருக்கிறான். அவனுக்கு அருள் செய்யும் " என்று எனக்காக வேண்டுவார் யாரும் இல்லையே. அவர்கள் பாட்டுக்கு வருகிறார்கள், போகிறார்கள். அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு போகிறார்கள் என்று வருந்துகிறார்.

பாடல்

வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என் 
திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு* 
ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே.  

பொருள்


வருவார் = (கோவிலுக்கு) வருகிறார்கள்

செல்வார் = செல்கிறார்கள்

வண்பரிசாரத்து = வண்பரிசாரம் என்ற திருத்தலத்தில்

இருந்த = எழுந்து அருளி இருக்கும்

என் = என்னுடைய

திருவாழ்மார்வற்கு = திருமகள் இதயத்தில் வசிக்கும் திருமாலுக்கு

என்திறம் = என்னுடைய  நிலைமையை

சொல்லார் = சொல்ல மாட்டார்கள். சொல்லாமல் பின் அவர்கள்

செய்வதுஎன் = வேறு என்னதான் செகிறார்கள்

உருவார் சக்கரம் = அழகிய உருவான சக்கரம்

சங்கு = சங்கு

சுமந்து = கைகளில் ஏந்தி

இங்கு உம்மோடு = இங்கு உம்மோடு

ஒருபாடுஉழல்வான் = இருக்க அலை பாயும், தவிக்கும்

ஓர்அடியானும் = ஒரு அடியவன் ஒருவன்

உளன் என்றே = இருக்கிறான் என்று

எனக்காக அந்தப் பெருமாளிடம் சொல்லுங்கள் என்று சொல்லுகிறார்.

சங்கதி அது அல்ல.

அவருக்கு இறைவனிடம் போக நாம் யார் இடையில். அவர் சொல்ல வருவது என்ன என்றால்,

முதலாவது, உலகில் எவ்வளவோ பேர் மிக துன்பப் படுகிறார்கள். அவர் களுக்காக பெருமாளிடம்  வேண்டிக் கொள்ளுங்கள்

இரண்டாவது, மற்றவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள்

மூன்றாவது, எப்போதும் சுயநலமாக எனக்கு எனக்கு என்று இருக்காதீர்கள்.

நான்காவது, மற்றவர்கள் துன்பத்தைப் பார்க்கும் போது , நம் துன்பம் பெரிது அல்ல என்று தெரியும். அப்படி தெரியும் போது , அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றும். அது மட்டும் அல்ல, நமக்கு இவ்வளவு கிடைத்தே, இதெல்லாம் கிடைக்காமல் எவ்வளவு பேர் துன்பப் படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வரட்டும் என்று நெஞ்சார நினைக்கத் தோன்றும்.

ஐந்தாவது, எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவனை சென்று அடையும் போது , நாம் மட்டும் போனால் போதாது. மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு போக நினைக்க  வேண்டும். இராமானுஜர் அப்படித்தான் நினைத்தார். எல்லோருக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.

"சேர வாரும் ஜெகத்தீரே" என்று உலகில் உள்ள அனைவரையும் அழைத்தார் தாயுமானவர்.

 "தலைவர் அன்னவருக்கே சரண் நாங்களே" என்றது எல்லோரையும் அவன் திருவடிகளில்  சரணம் அடைய வைத்தார் கம்ப நாட்டாழவார்.

அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது தனியாகப் போகாதீர்கள். யாரையாவது கூட அழைத்துக் கொண்டு போங்கள்.

உங்களுக்காக மட்டும் பிரார்த்தனை பண்ணாதீர்கள். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணுங்கள்.

அது ஆழ்வார் காட்டிய நெறி.

http://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post.html

3 comments:

  1. ஓம் நமோ நாராயணா..

    திருவாழ்மார்பன் பற்றிய நம்மாழ்வார் பாசுரம் ஆஹா தரிசித்தேன்..

    ReplyDelete
  2. எவ்வளவு கருத்து செறிந்த பாசுரம். அதை நீங்களும் அழகாக விளக்கினீர்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  3. I am Blessed to read this content and know the meaning of this Pasuram

    ReplyDelete