கந்த புராணம் - வேதமும் கடந்து நின்ற
இன்று சூர சம்ஹார தினம். எனவே கந்த புராணத்தில் இருந்து ஒரு பாடலை சிந்திப்போம்.
சூரன் என்ற அரக்கன் சம்காரம் செய்யப்பட்டது எதனால் ?
பல காரணங்கள் சொல்லலாம்.
முதல் காரணம் - நன்றி மறந்தது.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
என்பார் வள்ளுவப் பேராசான்.
சூரனுக்கு அளவற்ற வரங்களை தந்தது யார் - சிவன்.
முருகன் போர் செய்ய வந்த போது முருகனை பாலன் என்று இகழ்ந்தான் சூரன்.
இராமனை , மானிடன் என்று எண்ணிக் கெட்டான் இராவணன்.
கண்ணனை, இடையன் என்று எண்ணிக் கெட்டான் துரியோதனன்
முருகனை, பாலன் என்று எண்ணிக் கெட்டான் சூரன்.
முருகன் வேறு, சிவன் வேறு அல்ல என்ற உண்மை தெரியாமல், வரம் தந்த சிவனோடு போரிட்டு, நன்றி கொன்று கெட்டான் சூரன்.
அது என்ன முருகன் வேறு சிவன் வேறு அல்ல என்ற புதுக் கதை ? முருகனும் சிவனும் வேறு வேறு தானே. அப்படித்தானே படித்து இருக்கிறோம்...
இல்லை. அந்தத் தவற்றை செய்தவன் சூரன். நாம் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சூரன், தேவர்களை ஆட்டிப் படைக்கிறான். தேவர்கள் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள். அப்படியே ஒரு வேண்டுகோளும் வைக்கிறார்கள்.
சைவ சித்தாந்ததின் சாரம் இந்தப் பாடல். இந்த ஒரு பாடலைப் புரிந்து கொண்டால் சைவ சித்தாந்தம் முழுவதும் புரிபடும்.
கச்சியப்ப சிவாசாரியாரின் தேனொழுகும் இனிய பாடல்...
பாடல்
ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமல ஓர் குமரன் தன்னை
நீ தரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்.
பொருள்
ஆதியும் = ஆரம்பமும்
நடுவும் = நடுவும்
ஈறும் = இறுதியும்
அருவமும் = உருவம் இல்லாததும்
உருவும் = உருவம் உள்ளதும்
ஒப்பும் = ஒப்பிட்டு சொல்ல முடியாததும்
ஏதுவும் = வேறு எதுவும்
வரவும் = வருவதும்
போக்கும் = போவதும்
இன்பமும் = இன்பமும்
துன்பும் = துன்பமும்
இன்றி = இவை எல்லாம் இல்லாமல்
வேதமும் = வேதமும்
கடந்து நின்ற = அப்பால் நின்ற
விமல = மலம் என்றால் குற்றம். வி+மலம் = குற்றமற்ற
ஓர் குமரன் தன்னை = ஒரு பிள்ளையை
நீ தரல் வேண்டும் = நீ எங்களுக்குத் தர வேண்டும்
நின்பால் = உன்னிடம் இருந்து
நின்னையே நிகர்க்க = உன்னைப் போலவே
என்றார் = என்று வேண்டினார்கள்
உலகில் பெண் தானே பிள்ளை பெற்றுத் தர வேண்டும். ஆண் பிள்ளை பெற்றதாக எங்காவது கேள்விப் பட்டு இருக்கிறோமா ? இல்லையே?
தேவர்கள் , சிவனிடம் "உமா தேவியிடம் இருந்து எங்களுக்கு ஒரு குமாரனை பெற்றுத் தர வேண்டும் " என்று கேட்கவில்லை.
"நீ தரல் வேண்டும்" என்று சிவனிடம் வேண்டினார்கள்.
அது மட்டும் அல்ல, அந்தக் குழந்தை உன்னிடம் இருந்து வர வேண்டும்
"நின் பால்"
அது மட்டும் அல்ல , அது உனக்கு இணையாக இருக்க வேண்டும்
"நின்னையே நிகர்க்க" என்றார்.
சிவனிடம் இருந்து வர வேண்டும். சிவன் மட்டுமே தர வேண்டும். அது சிவனுக்கு இணையாக இருக்க வேண்டும்.
இதுதான் வேண்டுகோள்.
சிவனுக்கு இணையாக என்றால் சிவனும் , முருகனும் ஒன்று என்று ஆகிறது அல்லவா. சிவன் என்னவெல்லாம் செய்வானோ, முருகனும் அதை எல்லாம் செய்வான் என்று அர்த்தம்.
சிவன் வேறு , முருகன் வேறு அல்ல.
இந்த ஒற்றுமை தெரியாமல் மாண்டான் சூரன்.
தங்கள் குறை தீர்க்க ஒரு குமாரனைத் தரவேண்டும் என்று வேண்டும் பொழுது சிவனின் தன்மை பற்றி கூறுகிறார் கச்சியப்பர்.
ஆதி - நடு - அந்தம் இந்த மூன்றும் இல்லை.
போக்கும் வரவும் புணர்வும் இல்லா புண்ணியனே என்று மணிவாசகர் சொன்ன மாதிரி , போக்கும் வரவும் இல்லாதவனே என்கிறார்.
இன்பமும் துன்பமும் உள்ளானே இல்லானே என்று திருவாசகம் சொன்ன மாதிரி "இன்பமும் துன்பும் இன்றி " என்றார்.
இறைவனுக்கு உதாரணம் சொல்ல முடியாது. இறைவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
என்பார் வள்ளுவப் பெருந்தகை.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்பார் வள்ளலார்
எல்லாம் ஒன்றையே குறித்து நிற்கிறது.
பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
மிக மிக எளிமையான பாடல். ஆழ்ந்த அர்த்தமும் கவிதைச் சுவையும் நிறைந்த பாடல்.
கந்த புராணம் 10345 பாடல்களைக் கொண்டது. மூல நூலை படித்துப் பாருங்கள். அத்தனையும் கற்கண்டு.
https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_14.html
சுமாரான பாடல். மன்னிக்கவும்.
ReplyDeleteநீங்கள் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு (1986 detroit speech)கேட்டு இந்த பாடல் அருமையான விளக்கம் தருகிறார்
Deleteநன்றி
சூப்பர். அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்.
ReplyDelete