நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் ?
நமக்கு ஒரு சின்ன துன்பம் வந்து விட்டால் கூட, "ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது. நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் ...அந்த கடவுளுக்கு கண் இல்லையா .." என்று புலம்புவோம்.
நமக்கு வந்தது அவ்வளவு பெரிய கவலையா ?
பல இலக்கியங்களைப் படிக்கும் போது, அந்தக் கதைகளில் வரும் மாந்தர்களை விட நமக்கு ஒன்றும் பெரிய கவலை இல்லை என்று தோன்றும். அந்த எண்ணமே கவலையை குறைக்கும்.
இலக்கியம் படிப்பதால் கிடைக்கும் இன்னொரு பலன் - மன ஆறுதல்.
நளவெண்பாவில், தருமன் சூதாடி நாடிழந்து , காட்டில் வந்து தனித்து இருக்கிறான். அர்ஜுனன் , தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்றுவர புறப்பட்டுப் போய்விட்டான். தனித்து இருந்த தருமன் கவலைப் படுகிறான்.
அப்போது அங்கு வந்த வியாசர், "தருமா ஏன் கவலையாக இருக்கிறாய் " என்று கேட்கிறார்.
அதற்கு தர்மன் சொல்கிறான் "கண் மூடித்தனமாக சூதாடி, நாட்டை இழந்து, காட்டை அடைந்து இப்படி துன்பப் படுகிறேன். இந்த உலகில் என்னைப் போல துன்பப் படுபவர்கள் யார் இருக்கிறார்கள் " என்று புலம்புகிறான்.
பாடல்
கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.
பொருள்
கண்ணிழந்து = கண்மூடித் தனமாக
மாயக் கவறாடிக் = வஞ்சகமான சூதாட்டத்தில் விளையாடி
காவலர்தாம் = காவல் காக்க வேண்டிய
மண்ணிழந்து = நாட்டை இழந்து
போந்து =போய்
வனம்நண்ணி = காட்டை அடைந்து
விண்ணிழந்த = விண்ணை விட்டு மண் நோக்கி வரும்
மின்போலும் = மின்னலைப் போல உள்ள
நூல்மார்ப = நூலை அணிந்த மார்பை உடையவனே (வியாசனே)
மேதினியில் = இந்த உலகில்
வேறுண்டோ = வேறு எவரும் உண்டோ
என்போல் = என்னைப் போல
உழந்தார் இடர் = துன்பத்தில் வருந்துபவர்கள்
சரி தானே. தர்மனின் நிலையை நினைத்துப் பார்போம். ஒரே நாளில் பெரிய சாம்ராஜ்யத்தை இழந்து, காட்டில் வந்து தனித்து இருக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும். நம்மால் முடியுமா ? ஒரு நாள் வீட்டை விட்டு காட்டில் போய் இரு என்றால் முடியுமா ? ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே விட்டு விட்டு ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல பன்னிரண்டு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.
நம் துன்பம் அதை விட பெரிய துன்பமா ?
இப்படி ஒரு பெரிய துன்பத்தில் இருக்கும் தருமனுக்கு வியாசர் என்ன தான் ஆறுதல் சொல்லி விட முடியும் ?
நாளை அது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.
https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_4.html
நற்கருத்து... அருமை.
ReplyDelete