Pages

Thursday, December 20, 2018

திருப்பாவை - வையத்து வாழ்வீர்காள்

திருப்பாவை - வையத்து வாழ்வீர்காள் 



பாடல்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!


பொருள்

வையத்து  = உலகில்

வாழ்வீர்காள்! = வாழ்பவர்களே

நாமும் = நாமும்

நம் பாவைக்கு = நம்முடைய பாவை நோன்புக்கு

செய்யும் கிரிசைகள் = செய்ய வேண்டிய காரியங்களை

கேளீரோ!  = கேட்க மாட்டீர்களா

பாற்கடலுள்  = பால் கடலில்

பையத் = மெல்ல

துயின்ற = உறங்கிய

பரமனடி பாடி = பரமன் அடி பாடி

நெய்யுண்ணோம்  = நெய் உண்ண மாட்டோம்

பாலுண்ணோம்  = பால் உண்ண மாட்டோம்

நாட்காலே = அதிகாலையில்

நீராடி = நீராடி , குளித்து

மையிட்டெழுதோம் = கண்ணுக்கு மை இட்டுக் கொள்ள மாட்டோம்

மலரிட்டு = கூந்தலில் மலரை

நாம் முடியோம் = நாம் சூடிக் கொள்ள மாட்டோம்

செய்யாதன செய்யோம் = செய்யக் கூடாதவற்றை செய்ய மாட்டோம்

தீக்குறளைச் = தீய குறளை

சென்றோதோம் = சென்று + ஓதோம்.

ஐயமும்  = ஐயமும்

பிச்சையும் = பிச்சையும்

ஆந்தனையும் = ஆகும் அளவும்

கைகாட்டி = கையால் செய்து

உய்யுமாறெண்ணி  = உய்யுமாறு எண்ணி

உகந்தேலோரெம்பாவாய்! = விருப்பத்துடன் ஏற்று செய்வோம், என் பாவையே


மிக எளிய பாசுரம். ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது.

 ஒவ்வொன்றாக பார்ப்போம்.


வையத்து வாழ்வீர்காள்! -  முதலில் ஆயர்பாடி பெண்களை மட்டும் அழைத்தாள். அது என்ன ஆயர்பாடி மட்டும் என்று நினைத்தாளே என்னவோ, உலகில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள்.

யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்று திருமூலர் கூறிய மாதிரி..உலகில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள்.

இறைவன் கருணை நமக்கு மட்டும் கிடைத்தால் போதாது, எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த மனம்.

அடுத்தமுறை கோவிலுக்குப் போகும் போதோ, அல்லது வேறு ஏதாவது நல்ல காரியம் செய்யும் போதோ இன்னும் கொஞ்ச பேரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அந்த பாற்கடல், யார் குடித்தும் வற்றி விடாது.


"நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ! "

நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டால் அதை நாலு பேருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் பயன் பெற்றதைப் போல மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும். இங்கே ஆண்டாள்,  இறைவனை அடையும் வழிகள் என்ன என்று சொல்கிறாள்.

எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது என்று இரண்டு பட்டியல் தருகிறாள்.

அறம் என்றால் என்ன ? அறம் என்பது என்ன என்று சொல்லுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதை ஒரே வரியில் சொன்னார் பரிமேலழகர்.

"வேதம் முதலிய நூல்களில் சொன்னவற்றை செய்வதும், அவை விலக்க வேண்டும் என்று சொன்னவற்றை விலக்குவவதும் அறம் "

என்றார்.

அதாவது, நல்லனவற்றை செய்வதும் அறம். தீயனவற்றை செய்யாமல் இருப்பதும் அறம்.

உதாரணமாக, தானம் செய்வதும், ஏழைகளுக்கு உதவுவதும் அறம் .

அதே போல், பொய் சொல்லாமல் இருப்பது, கொலை களவு செய்யாமல் இருப்பதும் அறம்.  நீங்கள் இதுவரை கொலை செய்யாமல் இருந்தீர்கள் என்றால், நீங்கள் அற வழியில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம்.

அறம் பொருள் இன்பம் என்று தனது நூலை வகுத்த வள்ளுவர் , அறத்துப் பாலில் எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது என்று சொல்கிறார்.

கல்வி, கேள்வி,  ஊருடன் ஒத்து வாழ்தல், அன்பு , அருள், என்று செய்ய வேண்டியதை சொன்ன வள்ளுவர்,

கள்ளுண்ணாமை, வெகுளாமை, சிற்றினம் சேராமை என்று செய்யக் கூடாதவற்றையும் எடுத்துக் கூறுகிறார்.

அதே போல, ஆண்டாளும், செய்ய வேண்டியவற்றையும், செய்யக் கூடாதவற்றையும் கூறுகிறாள்.


"பாற்கடலுள் பையத்துயின்ற " - இந்த பைய துயின்ற சொல் தொடருக்கு பின் வருவோம்.

செய்ய  வேண்டியவை

"நாட்காலே நீராடி" = அதி காலையில் நீராடி

"பரமனடி பாடி"  = இறைவன் திருவடிகளை பாடி

"ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி" = நம்மை விட உயர்ந்தவர்களுக்குத் தருவது ஐயம் எனப்படும். துறவிகளுக்கு, ஆச்சாரியனுக்கு, சான்றோருக்குத் தருவது பிச்சை அல்ல, அது ஐயம் எனப்படும்.

நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு அதாவது உடல் ஊனம் உற்றவர்கள்,  நோய்வாய்ப் பட்டவர்கள் ...போன்றோருக்கு உதவுவது பிச்சை எனப்படும்.

இரண்டையும் செய்ய வேண்டும்.

எவ்வளவு செய்ய வேண்டும் என்றும் ஆண்டாள் கூறுகிறாள். ஆகும் அளவு. எவ்வளவு முடியுமோ.  இலட்ச கணக்கில் பணம் இருக்கும்,உடல் ஊனம் உற்றவருக்கு ஐம்பது பைசா போடுவார்கள். ஒரு பத்து உரூபாய் கொடுத்தால் ஒண்ணும் குறைந்து விடாது. கொடுக்க மனம் வராது.


முடிந்தவரை செய்யுங்கள் என்கிறாள் ஆண்டாள்.

செய்யக் கூடாதது:

நெய்யுண்ணோம் =  நெய் உண்ணோம்

பாலுண்ணோம் = பால் உண்ணோம்

அது என்ன நெய்யும் பாலும் மட்டும் உண்ண மாட்டேன் என்கிறாள். மத்தது எல்லாம் ஒரு கட்டு கட்டலாமா?

அது அல்ல அர்த்தம். ஆயர் பாடியில் நெய்யும் பாலும் பஞ்சமில்லாமல் இருக்கும். எல்லோரும் விரும்பி உண்பார்கள். விருப்பமானவற்றை தள்ளி வைப்போம் என்கிறாள். அதாவது புலன்கள் போகின்ற பக்கம் எல்லாம் போகாமல், அவற்றை அடக்கி இறைவனை நினைப்போம் என்கிறாள்.

சில பேர், காலையில் எழுந்து ஒரு காப்பி குடித்த பின் தான் பூஜை முதலியவற்றை செய்வார்கள். நாக்கு.


மையிட்டெழுதோம் =கண்ணுக்கு மை இட மாட்டோம்

மலரிட்டு நாம் முடியோம் = கூந்தலுக்கு மலர் சூடிக் கொள்ள மாட்டோம்

இறைவன் புற அழகை விரும்புவது இல்லை. அகம் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிறாள். கோவிலுக்குப் போகும் போது கூட , பட்டுப் புடவை, வைர அட்டிகை, கொஞ்சம் பௌடர் , கொஞ்சம் லிப்ஸ்டிக், மேட்சிங் கைப் பை (handbag ) என்று மினுக்கிக் கொண்டு செல்பவர்கள் இருக்கிறார்கள். தலையில் பூ கூட வைத்துக் கொள்ள மாட்டோம் என்கிறாள்.

அதாவது, புற அழகு முக்கியம் அல்ல. மனமும், அறிவும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது பொருள்


செய்யாதன செய்யோம்  =  பெரியவர்கள், நல்லவர்கள், சான்றோர் செய்யாத எதையும் நாம் செய்ய மாட்டோம். அது தானே ஒழுக்கம் என்பது. ஒழுகுதல் என்றால் மேலிருந்து கீழே வருவது. கூரை ஒழுகுகிறது என்கிறோம். அதே போல் பெரியவர்கள் செய்ததை நாம் செய்வதும், அவர்கள் செய்யாமல் இருந்ததை நாம் செய்யாமல் இருப்பதும் ஒழுக்கம் எனப்படும்.

தீக்குறளைச் சென்றோதோம் = தீயனவற்றை பேசக் கூடாது. செய்வது மட்டும் அல்ல, பேசுவதும் கூட கூடாது. எவ்வளவு பேசுகிறோம்? அரட்டை அடிக்கிறோம்.  அவற்றை நிறுத்த வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.


உய்யுமாறெண்ணி  = இதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும் ? செய்தால் தப்பிக்கலாம். இதில் இருந்து தப்பிக்கலாம்? இந்த பிறவி சுழலில் இருந்து தப்பிக்கலாம்.

உகந்தேலோரெம்பாவாய்! = இதை எல்லாம் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.  உகந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். கடமையே என்று செய்யக் கூடாது.

பூஜை செய்யும் போது உங்கள் முகம் சந்தோஷமாக இருக்கிறதா என்று எண்ணிப் பாருங்கள். ஒரு பாசுரம் படிக்கும் போது , விளக்கு ஏற்றும் போது , நாலு பூ போடும் போது மனம் மகிழ்ச்சியில் மிதக்க வேண்டும். அது தான் பூஜை.

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, இயந்திரம் போல் வாய் எதையோ முணுமுணுக்க , கை எதையோ செய்ய, மனம் எதையோ நினைக்க அப்படி செய்வது பூஜை இல்லை.

மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். விருப்பத்துடன் செய்ய வேண்டும்.

அலுத்துக் கொள்ளாமல், கோபம் கொள்ளாமல், எரிச்சல் படாமல், மகிழ்ச்சியோடு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்து பழகுங்கள்.

வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

மனதில் ஒரு இனம் புரியாத இன்பம் பிறக்கிறதா இல்லையா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_20.html

5 comments:

  1. அற்புதமான விளக்கம்.இனி பூஜை செய்யும் போது எப படி இருக்க வேண்டும் என்பது மனதில் பதிந்து விட்டது.

    கோதை ஆயர்பாடியை ஶ்ரீவில்லிபுத்துருக்ககே கொண்டு வந்துவிட்டாள்.அவளும் அவள் தோழிகளும் ஆயர் சிறுமிகளாகிவீட்டனர்,யமுனையும் கோவில் குளமாகி விட்டது.எல்லோரும் கிரம்ப்நோபடி ன்பு நூற்க ஆரம்பித்து விட்டனர்.ஆண்டாளும் நோன்புக்காக பாடவும் தொடங்கி விட்டாள்
    .
    இனி மார்கழி முழுவதும் சிறு காலையிலேயே எழுந்து உங்கள் பகிர்வை படிக்க நானும் முடிவு பண்ணியாச்சு!

    ReplyDelete
  2. கிரமப்படி நோன்பு

    ReplyDelete
  3. ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் சொல்லிப் பாடலில் இனிய அனுபவத்தைப் பல மடங்கு உயர்த்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  4. தங்களுடைய விளக்கங்களை படிக்கும் பொழுது கண்களில் நீர்த்துளிகள், நீங்கள் கூறிய அந்த இன்பம் கண்டேன்.

    ReplyDelete
  5. மிகவும் அருமையான விளக்கம்

    ReplyDelete