திருப்பாவை - தெய்வ நம்பிக்கை மூட நம்பிக்கையா ?
தெய்வ நம்பிக்கை என்பது ஒரு மூட நம்பிக்கையா ? ஒரு அறிவியல் பார்வை இல்லாதர்வர்கள் தான் தெய்வத்தை நம்புவார்களா ? நம்பிக்கை என்பதே ஒரு சோம்பேறிகளின் இருப்பிடமா? நம்புவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்ய வேண்டாம் ? சும்மா தலையை தலையை ஆட்டினால் போதும்...அப்படித்தான் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆண்டாள் ஒரே பாசுரத்தில் மிகத் தெளிவான அறிவியல் பார்வையையும் , ஆன்மீகப் பார்வையையும் கொண்டு வருகிறாள். இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாள்.
முதலில் பாடலைப் பார்த்து விடுவோம்.
பாடல்
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
பொருள்
எளிய பாடல் தான். ஆண்டாளின் அனைத்து பாடல்களும் மிக எளிமையானவைதான்.
ஆழி மழைக்கண்ணா! = ஆழி என்றால் கடல். கடல் போல் மழை நீரைத் தரும் வருண தேவனே.
ஒன்று நீ கைகரவேல் = கரத்தல் என்றால் மறைத்தல். உடையது கரவேல் என்பாள் ஒளவை. இங்கே, நீ எதையும் மறைக்காதே
ஆழியுள் புக்கு = கடலில் புகுந்து
முகர்ந்துகொ டார்த்தேறி = நீரை மொண்டு கொண்டு, ஆர்த்து ஏறி என்றால் சப்தம் போட்டுக் கொண்டு மேலே சென்று
ஊழி முதல்வன் = ஊழி காலம் தொட்டு இருக்கும் முதல்வன் (திருமால் )
உருவம்போல் = உருவத்தைப் போல
மெய்கறுத்து = உடல் கருமை வண்ணம் கொண்டு
பாழியந் தோளுடைப் = பாழி என்றால் அகன்ற என்று பொருள். அம் தோள் என்றால் அழகிய தோள்.
பற்பநா பன்கையில் = பத்ம நாபன் கையில். தாமரை மலரை நாபிக் கமலத்தில் கொண்டவன். அவன் கையில் உள்ள
ஆழிபோல் = சக்கரம் போல
மின்னி = மின்னல் அடித்து
வலம்புரிபோல் நின்றதிர்ந்து = வலம்புரி சங்கு போல நின்று அதிரும் படி சப்தம் செய்து
தாழாதே = தாமதம் செய்யாமல்
சார்ங்கம் = இராமனின் வில்
உதைத்த சரமழைபோல் = புறப்பட்ட அம்பு மழை போல
வாழ = வாழ
உலகினில் = உலகினில்
பெய்திடாய் = பெய்திடுவாய்
நாங்களும் = நாங்களும்
மார்கழி நீராட = மார்கழியில் நீராட
மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! = மகிழ்ந்து ஏற்றுக் கொள்வாய், என் பாவையே
மழை என்பது ஏதோ அதிசயம் அல்ல. அது நீர் ஆவியாகி , மேலே சென்று, மேகமாகி, கறுத்து , பின் நீராக பொழிவது தான் மழை. இது ஒரு அறிவியல் நோக்கு. பார்வை. நவீன விஞ்ஞானம் இதை கண்டு சொல்வதற்கு பல ஆண்டுகள் முன்பே ஆடல் சொல்லி விட்டாள்.
மழை எப்படி பொழிகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான விடை.
நீர் ஆவியாகி மழையாகப் பொழிகிறது. அதிலும் ஆண்டாள் குறிப்பாக சொல்கிறாள். "ஏ வருண பகவானே, நீ பாட்டுக்கு ஊருக்குள்ள இருக்கிற கிணறு , குளம் , குட்டை, ஏரி இதில் உள்ள நீரை ஆவியாக்கி கொண்டு போய் மழையாகப் பெய்யாதே . அதில் என்ன பலன். இருக்கிற நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் அதையே மழையாகத் தருவதில்? அதனால, கடல்ல போய் நீரை எடுத்துக் கொண்டு வந்து மழையாகப் பொழி" என்கிறாள்.
சரி, மழை பொழிகிறது. மேகம் எல்லாம் மழை பொழிந்தவுடன் காலியாகி விடும். அப்பறம் என்ன செய்வது ?
ஆண்டாள் வருணனிடம் சொல்கிறாள்..."ஏதோ வந்தோம், பெய்தோம் , போனோம் என்று இருக்கக் கூடாது. நீ எப்படி பெய்ய வேண்டும் தெரியுமா ...இராமனின் அம்பு போல எடுக்க எடுக்க குறையாத அம்பு போல நீ பெய்ய வேண்டும் "
"சார்ங்கம் உதைத்த சரமழைபோல்"
சர மழை போல பெய்ய வேண்டும்.
அதுதான் சாக்கு என்று வருணன் விடாமல் பெய்தால் , ஊரே வெள்ளக் காடாகி விடும் அல்லவா?
அதையும் யோசித்து இரண்டு விஷயம் சொல்கிறாள் ஆண்டாள்
ஒன்று, கருணையோடு பெய்ய வேண்டும். இராமன், நிறம் கறுப்பு. "வருணனே , நீ மழை பொழிந்த பின் உன் மேகங்கள் கறுமை மாறி வெண்மையாகி விடுகின்றன. அப்படி இருக்கக் கூடாது. எப்போதும் இராமன் மாதிரி கறுப்பாக இருக்க வேண்டும்." அப்படி என்றால், எப்போதும் கருணையோடு தேவைப் படும் போதெல்லாம் பெய்ய வேண்டும்.
இராமனின் அம்புகள் பகைவர்கள் மேல் பாய்ந்து அவர்களை கொன்றது. அது போல மழை பெய்ய வேண்டுமா என்றால், இல்லை.
"வாழ உலகினில் பெய்திடாய்"
சாவதற்கு இல்லை, வாழ்வதற்கு பெய்வாய் என்கிறாள்.
ஒரு புறம் அறிவியல் சார்ந்த ஒரு நோக்கு.
இன்னொரு புறம் ஆன்மீகப் பார்வை.
இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாள் ஆண்டாள்.
அறிவியல் வேறு, ஆன்மீகம் வேறு அல்ல. இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று காட்டுகிறாள்.
தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் ஆன்மீகத்தை ஒதுக்கத் தேவை இல்லை.
ஆன்மீகத்தில் உள்ளவர்கள், அறிவியலை வெறுத்து ஒதுக்கத் தேவை இல்லை.
இரண்டையும் அரவணைத்துக் கொண்டு போகலாம் என்று காட்டுகிறாள் ஆண்டாள்.
ஒன்றுக்கொன்று முரண் அல்ல. ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அறிவியல் பார்வை இருப்பது ஒன்றும் தவறு அல்ல. அதே போல் அறிவியலில் இருப்பவர்களும் ஆன்மீக அனுபவத்தை தேடுவதில், அதை அடைவதில் தவறு இல்லை.
அது மட்டும் அல்ல, ஆண்டாளின் பரந்த பார்வையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு எல்லாமே இறை வடிவாகத்தான் தெரியும்.
மழையின் ஒவ்வொரு அங்கமும் இறை வடிவாகவே பார்க்கிறாள்.
சக்கரம் போல மின்னி
சங்கு போல ஆர்ப்பரித்து
அம்பு போல பாய்ந்து
என்று எல்லாமே அவன் வடிவாகவே அவளுக்குத் தெரிகிறது.
இயற்கையும், இறைவனும் ஒன்றென காண்கிறாள் ஆண்டாள்.
அறிவியலும் ஆன்மீகமும் இயற்கையின் கூறுகள் தானே.
இறைவன் என்பது ஒரு ஆள் அல்ல. இந்த இயற்கைதான் இறைவன். எங்கும் நிறைந்த இந்த இயற்கை தான் இறைவன். மழை ஒரு உதாரணம்.
மின்னல் - ஒளி - கண்ணால் காண்பது.
இடி - ஒலி - காதால் கேட்பது
மழை - குளுமை - உடலால் உணர்வது
மழை மண்ணில் விழும் போது எழும் மண்வாசம் - மூக்கால் உணர்வது
மழை தரும் பயிர்கள் - உணவாகி நாக்குக்கு சுவை தருவது
இப்படி இயற்கை, ஐம்புலன்களுக்கும் அனுபவம் தருவது. அது தான் இயற்கை. அது தான் இறை.
மீண்டும் ஒரு முறை பாசுரத்தை வாசித்துப் பாருங்கள். கண் மூடி இரசித்துப் பாருங்கள்.
https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_26.html
இனிமையான பாடல். பாடலின் சுகமும், விளக்கத்தின் சுவையும் மழையில் நனைந்தது மாதிரி இருக்கிறது.
ReplyDeleteஆனால், இதனால் அறிவியலை ஆண்டாள் அறிந்து கொண்டாள் என்று சொல்ல முடியாது. அவள் அறியாத எத்தனையோ செய்திகள் இப்போது நம் அறிவியலுக்குத் தெரியும்.