நற்றிணை - அம்ம , நாணுதும்
அவள் ஒரு இளம் பெண். கடற்கரை ஓரம் அவள் ஊர். எந்நேரமும் அலையின் சத்தமும், தலை வருடும் கடல் காற்றும் உள்ள ஊர். வயதில் வரும் காதல் அவளுக்கும் வந்தது. காதலனோடு ஓடி ஆடி மகிழ்கிறாள். இருவரும் ஓடி வந்த களைப்புத் தீர ஒரு பபுன்னை மரத்தின் அடியில் வந்து நிற்கிறார்கள். இருவர் முகத்திலும் சந்தோஷம் கரை புரண்டு ஓடுகிறது.
அந்த சந்தோஷத்தில், அவன் அவளிடம் ஒரு முத்தம் கேட்கிறான். அவளுக்கும் ஆசை தான். இருந்தும் நாணம் அவளைத் தடுக்கிறது.
அவள் சொல்கிறாள்
"நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த போது , ஒரு நாள் ஒரு புன்னை மரத்தின் விதையை விளையாட்டாக நட்டு வைத்தேன். அப்படி நட்டத்தை நான் மறந்தே விட்டேன். ஆனால், என் தாய் மறக்கவில்லை. என்னை வளர்த்ததைப் போலவே அவள் அந்த புன்னை மரத்தையும் நெய்யும் பாலும் ஊட்டி வளர்த்தாள். என்னை அந்த மரத்தின் அடியில் காணும் போதெல்லாம் அந்த மரம் எனக்கு தங்கை போன்றது என்று சொல்லுவாள். அந்த மரம் வேறு எதுவும் இல்லை. இந்த மரம் தான். என் தங்கையின் முன்னால் உன்னோடு கட்டிப் பிடித்து இன்பம் அனுபவிக்க எனக்கு வெட்கமாக இருக்கிறது. வா, இது போல வேறு நிறைய மரங்கள் இங்கே இருக்கின்றன...அங்கு போய் விடலாம் " என்று.
பாடல்
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே- 5
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. 10
பொருள்
விளையாடு = என்னோடு விளையாடும்
ஆயமொடு = தோழிகளோடு
வெண் மணல் அழுத்தி = வெள்ளை மணலில் அழுத்தி
மறந்தனம் = மறந்து விட்டோம்
துறந்த = துறந்தும் விட்டோம்
காழ் = விதை
முளை = முளை விட்டு
அகைய = கிளை விட்டு பெரிதாகி
'நெய் பெய் = நெய் ஊற்றி
தீம் பால் பெய்து = சுவையான பாலை இட்டு
இனிது வளர்ப்ப; = சிறப்பாக வளர்த்து வரும் போது
நும்மினும் சிறந்தது = உன்னை விட சிறந்தவள்
நுவ்வை ஆகும்' என்று = உன் தமக்கை ஆகும் என்று
அன்னை கூறினள் = என் தாய் கூறினாள்
புன்னையது நலனே = என்று அதன் சிறப்பை புனைந்து உரைத்தாள்
அம்ம! = அம்மா
நாணுதும் = எனக்கு வெட்கமாக இருக்கிறது
நும்மொடு நகையே = உன்னோடு சிரித்து மகிழ்ந்து இருப்பது
விருந்தின் பாணர் = விருந்தாக வந்த பாணன்
விளர் இசை கடுப்ப = மெல்லிய இனிய இசை போல
வலம்புரி = வலம்புரி சங்கு
வான் கோடு நரலும் = வானம் போல வெளுத்த , அது இசைக்கும்
இலங்கு நீர்த் = அப்படிப்பட்ட நீரை உடைய
துறை கெழு = நிலத்தின் தலைவனே
கொண்க!- = அறிந்து கொள்
நீ நல்கின் = நீ கொடுத்தால், நீ சம்மதித்தால்
https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_4.html
ஆயமொடு = தோழிகளோடு
வெண் மணல் அழுத்தி = வெள்ளை மணலில் அழுத்தி
மறந்தனம் = மறந்து விட்டோம்
துறந்த = துறந்தும் விட்டோம்
காழ் = விதை
முளை = முளை விட்டு
அகைய = கிளை விட்டு பெரிதாகி
'நெய் பெய் = நெய் ஊற்றி
தீம் பால் பெய்து = சுவையான பாலை இட்டு
இனிது வளர்ப்ப; = சிறப்பாக வளர்த்து வரும் போது
நும்மினும் சிறந்தது = உன்னை விட சிறந்தவள்
நுவ்வை ஆகும்' என்று = உன் தமக்கை ஆகும் என்று
அன்னை கூறினள் = என் தாய் கூறினாள்
புன்னையது நலனே = என்று அதன் சிறப்பை புனைந்து உரைத்தாள்
அம்ம! = அம்மா
நாணுதும் = எனக்கு வெட்கமாக இருக்கிறது
நும்மொடு நகையே = உன்னோடு சிரித்து மகிழ்ந்து இருப்பது
விருந்தின் பாணர் = விருந்தாக வந்த பாணன்
விளர் இசை கடுப்ப = மெல்லிய இனிய இசை போல
வலம்புரி = வலம்புரி சங்கு
வான் கோடு நரலும் = வானம் போல வெளுத்த , அது இசைக்கும்
இலங்கு நீர்த் = அப்படிப்பட்ட நீரை உடைய
துறை கெழு = நிலத்தின் தலைவனே
கொண்க!- = அறிந்து கொள்
நீ நல்கின் = நீ கொடுத்தால், நீ சம்மதித்தால்
இறைபடு நீழல் = நிறைந்த நிழல் தரும் மரங்கள்
பிறவுமார் உளவே. = இங்கு நிறையவே இருக்கிறது
நாம், நமது சூழ்நிலையை மறந்து இயந்திரம் போல வாழ்கிறோம். நம் சூழ்நிலை
நம்மை பாதிக்கும். அதை நாம் உணர்வது இல்லை.
நாம் வாழும் வீடு, அது இருக்கும் இடம், அதன் சுற்றுப் புற சூழல் இவை எல்லாம்
நம்மை , நம் சிந்தனைகளை பாதிக்கும்.
பெரிய வீடு, சுத்தமான வீடு, தோட்டம் உள்ள வீடு,அமைதியான வீடு நம்மை
ஒரு விதத்தில் பாதிக்கும் என்றால், சிறிய வீடு, குப்பை போல இருக்கும் வீடு,
நெருங்கிய வீடுகளின் நடுவில் இருக்கும் வீடு வேறு விதத்தில் பாதிக்கும்.
இந்த பாதிப்புகளை அறியாமலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சுற்றுப் புறத்தை மேம் படுத்துங்கள்..உங்கள் மனமும் மேம்படும்.
தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை நிலத்தை ஒட்டி அமைத்தார்கள். நிலம், அதில் பெய்யும் மழை, அங்கு வளரும் தாவரங்கள், அங்கே இருக்கும் விலங்குகள் எல்லாமே நம்மை பாதிக்கும். நம் எண்ணங்களை, சிந்தனைகளை மாற்றும். வீட்டில் ஒரு நாயோ, பூனையோ, கிளியோ வளர்ப்பவர்களுக்குத் தெரியும் அந்த விலங்குகள் எப்படி தங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது என்று.
அதே போலத் தான் வீட்டில் ஒரு துளசிச் செடியோ, வேறு எந்த செடியோ, கொடியோ நட்டு வைத்து வளர்த்துப் பாருங்கள், அவை வெளியில் மட்டும் அல்ல, உங்கள் மனதுக்குள்ளும் வேர் விட்டு வளர்வதை உணர்வீர்கள்.
இந்த பாடலின் பெண், தான் நட்ட மரம் தன் உணர்வுகளை எப்படி பாதிக்கிறது என்று சொல்கிறாள். அப்படி இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள்.
மரத்தைக் கூட உடன் பிறந்த சகோதரியாக நினைத்து வாழ்ந்த சமுதாயம் நம் சமுதாயம்.
குகனோடு ஐவரானோம், குன்று சூழ்வான் மகனோடு அறுவரானோம், உன்னோடு எழுவரானோம் என்று இராமன் கூறினான்.
அனைத்து மக்களையும் சகோதர அன்புடன் கண்டது அவன் மனம்.
இங்கே ஒரு படி மேலே போய் , தான் நட்டு வைத்த மரத்தை கூட தன் சகோதரியாக நினைக்கிறாள்.
நாணம் வந்தாலும், ஆசையும் விடவில்லை. இந்த மரம் வேண்டாம்...இது போல நிறைய நிழல் தரும் மரங்கள் இருக்கின்றன என்று கூறுகிறாள். குறும்பு கொப்பளிக்கும் இடம்.
யார் கண்டது அந்தப் பெண் நம் பாட்டியின், பாட்டியின், பாட்டியின் பாட்டியாகக் கூட இருக்கலாம்.
நற்றிணை. சங்ககாலப் பாடல். எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட்டது.
அவளின் காதல், அவளின் நாணம், அந்த மரத்தின் மேல் அவள் கொண்ட அன்பு எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கிறது அல்லவா...அது தான் கவிதை.
கொடுத்து வைத்திருக்க வேண்டும்...இதையெல்லாம் படிக்க, இரசிக்க.
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.
சுற்றுபுர சூழலின் அழகை ரசிக்க ஒரு மனப்பாங்கு வேண்டும்.. எல்லோரும் பார்க் போகிறார்கள். ஆனால் அங்கு உள்ள செடி கொடி வண்ணமிக்க மலர்களை , ஆரவாத்துடனும் சந்தோஷத்துடனும் ஓடியாடி விளையாடும் குழந்தைகளை ரசிப்பவரகள தற்காலத்கதில் மிக குறைவு.எதிலும்அவசர காலம்
ReplyDeleteஇந்த பாடலில் வரும் பெண்ணைப்போல் மரம் செடிகளோடு ஒன்றிப் போய் உறவுமுறை கொண்டாடுவது றந்து போன சமாசாரம்.
உங்மிகள்க பதிவை மிகவும் ரசித்தேன்.
குறும்பான பாடல். மனத்தைத் துள்ள வைக்கிறது.
ReplyDeleteஇந்தப் பாடலையும், இந்த blogஐயும் படிக்க நாங்கள் உண்மையிலேயே அதிருஷ்டசாலிகள்தாம்.
நற்றிணைப் பாடல் காட்டும் அவ்விள மங்கையின் உணர்வையும் தங்கள் விளக்கத்தையும் மெத்த இரசித்தேன். நன்றி வணக்கம் . நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteநானும் அவ்வண்ணமே கோருகிறேன்.
ReplyDeleteஇந்த நற்றிணைப்பாடல் பற்றி வேறு சிலஇணையப்பதிவுகள் இருந்தாலும்இந்தப்பதிவு முழுமையான. சிறந்தவிளக்கம் தருவதாகஅமைந்துள்ளது.
வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு🙏