இராமானுசர் நூற்றந்தாதி - வாயமுதம் பரக்கும்
நாம பெரிய சந்நியாசி, துறவி எல்லாம் கிடையாது. அதே சமயம் சமய கோட்பாடுகளை முற்றும் விட்டு விட்டவர்களும் கிடையாது. குடும்ப வாழ்கை கொஞ்சம், ஆன்மீகம் கொஞ்சம், சமயம் கொஞ்சம், உண்மை பற்றிய ஆவல் மற்றும் தேடல் கொஞ்சம் என்று எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறோம்.
சமய உண்மைகளை அறிந்து கொள்ள ஆசை உண்டு. அவற்றை கடை பிடிக்கவும் ஆசை உண்டு. ஆனால், கடமைகள் மறு புறம் இழுக்கின்றன. படித்து, அவை சரி என்று அறிந்தாலும், "நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
உள்ளும் இல்லை, புறமும் இல்லை. வாசல் படியில் இருக்கிறோம். இரணியன் கேட்ட வரம் போல - உள்ளும் இல்லை,புறமும் இல்லை வாசல்படி தான் இடம்.
ஆரவமுதனார் சொல்கிறார் , "படியில் உள்ளவர்களே , உங்களுக்குச் சொல்கிறேன்" என்று இராமனுஜரின் பெருமையை கூறுகிறார்.
பாடல்
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே
பொருள்
சுரக்கும் = தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்
திருவும் = செல்வமும்
உணர்வும் = உண்மையை உணரும் ஞானமும்
சொலப்புகில் = சொல்லத் தொடங்கினால்
வாயமுதம் = வாயில் அமுதம்
பரக்கும் = தோன்றும்
இருவினை = இரு வினைகள்
பற்றவோடும் = பற்றிக் கொள்ள, நாளும் அது துரத்த ஓடும்
படியிலுள்ளீர் = படியில் உள்ளவர்களே
உரைக்கின்றனன் = சொல்லுகின்றேன்
உமக்கு = உங்களுக்கு
யான் = நான்
அறம் சீறும் = அறத்தை மறுக்கும்
உறு கலியைத் = பெரிய தொல்லை தரும் கலியை
துரக்கும் = .விலக்கி விடும்
பெருமை = பெருமை கொண்டது
இராமானுசன் = இராமானுசன்
என்று சொல்லுமினே = என்று சொல்லுங்கள்
துன்பம் ஏன் வருகிறது ? அறத்தை விட்டு விலகுவதால் துன்பம் வருகிறது. தர்மத்தை விட்டு விலகினால் துன்பம் வரும்.
"அறம் சீர் உறு கலி"
கலி என்றால் சனியன்.
"இராமானுசன்" என்று சொன்னால் போதும்
- செல்வம் பெருகும்
- அறிவு வளரும்
- துன்பம் தொலைந்து போகும்
பாடலை வாசித்துப் பாருங்கள்.
நிச்சயம் வாயில் அமுது ஊறும் .
படியில்லுள்ளீர் என்கிற வார்த்தையில் இவ்வளவு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது என்பதை உணர்ந்தேன.
ReplyDeleteஅருமையான விளக்கம் பாடலுக்கு.