ஒளவையார் - அரியது
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே
இந்தப் பாடல் பள்ளிக்கூடத்தில் படித்து இருப்பீர்கள். பெரிய சிக்கலான பாடல் ஒன்றும் இல்லை. சில சமயம், மிக எளிமையாக இருப்பதால் அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை நாம் அறியத் தவறி விடுகிறோம்.
இந்தப் பாடலில் அப்படி என்ன ஆழ்ந்த கருத்து இருக்கிறது என்று பார்ப்போம்.
மானிடராதல் அரிது - சரி தான். நாம் மானிடராகப் பிறப்பதற்கு நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை. பிறந்து விட்டோம். அவ்வளவுதான். நம் முயற்சி ஒன்றும் இல்லை.
பேடு நீங்கி பிறத்தல் அரிது - அதுவும் சரி தான். ஆனால், அதற்காக நாம் என்ன செய்ய முடியும். தாயின் கருவில் இருக்கும் போதே குருடு, செவிடு போன்ற குறைகளை நாம் சரி செய்து கொள்ள முடியுமா ? முடியாது. ஏதோ, நம் நல்ல காலம் , குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து விட்டோம்.
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது....ஞானமும் கல்வியும் பெறுதல் அரிது என்று சொல்லவில்லை. அடைதல் அரிது என்று சொல்லவில்லை. நயத்தல் அரிது என்று சொல்கிறாள் ஒளவை. நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று பொருள். ஞானமும் கல்வியும் எங்கு இருந்தாலும் அதை கண்டு முதலில் மகிழ வேண்டும், அதை அடையும் போது மனதில் இன்பம் பிறக்க வேண்டும். "ஐயோ, இதை படிக்க வேண்டுமே " என்று மனம் நொந்து படிக்கக் கூடாது. "அடடா, எவ்வளவு நல்ல விஷயம்..இத்தனை நாளாய் இது தெரியாமல் இருந்து விட்டேனே ...நல்லது இப்பவாவது தெரிந்ததே " என்று மகிழ வேண்டும்.
ஞானம் வேறு, கல்வி வேறு. கல்வி கற்பதன் மூலம் வருவது. ஞானம் உள்ளிருந்து வருவது. உள்ளே செல்லும் கல்வி, உள்ளிருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும்.
"தானமும் தவமும் தான்செயல் அரிது"
படிப்பதாவது எப்படியாவது தத்தி முத்தி படித்து விடலாம். தானமும் தவமும் செய்வது இருக்கிறதே மிக மிக கடினமான செயல்.
இலட்சக் கணக்கில் செல்வம் இருந்தாலும், நூறு ரூபாய் தருமம் செய்ய மனம் வருமா ? தானம் கூட ஒரு வழியில் செய்து விடலாம். வெள்ள நிவாரண நிதி, முதியோர் பாதுகாப்பு, பிள்ளைகள் பாதுகாப்பு நிதி என்று ஏதோ ஒன்றிற்கு நாம் தானம் கூட செய்து விடுவோம்.
தவம் ? தவம் செய்வது எளிதான செயலா ? யாராவது தவம் செய்வதைப் பற்றி நினைத்தாவது பார்த்தது உண்டா ? தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , மரத்தடியில் அன்ன ஆகாரம் இல்லாமல் இருப்பது என்று நினைக்கக் கூடாது. அது என்ன என்று பின்னால் ஒரு blog இல் பார்க்க இருக்கிறோம்.
தானமும் தவமும் செய்து விட்டால், வானவர் நாடு வழி திறக்குமாம்.
சொர்கத்துப் போக வேண்டும், இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று விரும்பாதவர் யார்.
சொர்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?
ஔவை சொல்கிறாள் - தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.
சம்பாதிப்பதை எல்லாம் வீடு வாசல், நகை, நட்டு , கார், shares , bonds என்று சேமித்து வைத்து விட்டு, சொர்கத்து எப்படி போவது ?
"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே " என்றார் பட்டினத்தார்.
தானமும் தவமும் எப்போது வரும் என்றால்,
ஞானத்தையும், கல்வியையும் நயத்தால் வரும். முதலில் கல்வி, அப்புறம் ஞானம். அது வந்தால், செல்வத்தின் நிலையாமை தெரியும். இளமையின் நிலையாமை தெரியும். அப்போது தானமும் தவமும் செய்யத் தோன்றும்.
ஞானத்தையும் கல்வியையும் எப்படி நயப்பது ?
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தால் , ஞானத்தையும், கல்வியையும் நயக்க முடியும்.
உங்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறை ஒன்றும் இல்லையே ?
அப்படி என்றால், அடுத்த இரண்டையும் செய்யுங்கள், வானவர் நாடு வழி திறந்து உங்களுக்காக காத்து நிற்கும்.
ஔவைப் பாட்டியின் ஞானத்தின் வீச்சு புரிகிறதா ?
எளிமையான பாடல் தான். எவ்வளவு ஆழம்?
https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_11.html
நாம் கரப்பானாகவோ கழுதையாகவோ பிறந்திருக்கத்தான் வாய்ப்பு அதிகம். இருப்பினும் பூர்வ ஜன்ம புண்ணியத்தினால் நாம் உடற்குறையில்லாது மானிடராய் பிறந்து கல்வியுடனும் ஞானத்தோடும் சற்று செல்வத்துடனும் இருப்பது மிகவும் அரியது. தானம் தவம் செய்ய இந்த பெரிய வாய்ப்பை இழக்காதே என நயம்பட கூறியிருக்கிறாள். தவத்தை பற்றி உங்கள் கருத்தை படிக்க காத்திருக்கிறேன்.
ReplyDeleteமனவளக்கலை மன்றம் நாடுங்கள்.
Deleteஎளிமையான, இனிமையான, வலிமையான, செலவில்லாத, ஆனால் உயர்தரமான தவ முறைகள் கற்றுத்தருவார்கள்.
வாழ்க வளமுடன் !!
ஐயா, வணக்கம் புதுவையில் மனவளக்கலை மன்றம் இருப்பின் அதன் விலாசம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்
Deleteஇத்தனை நாளாய் இது தெரியாமல் இருந்து விட்டேனே ...நல்லது இப்பவாவது தெரிந்ததே.. ❤️
Deleteஎனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. நன்றி.
ReplyDeleteகாரணம் தெரிந்து கொள்ளலாமா நண்பரே
Deleteஅருமையான விளக்கம்
ReplyDeleteஅரிதரிது மானிடர் ஆதல் அரிது - ஔவையார்.
ReplyDeleteபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு - வள்ளுவம்.
இவ்விரண்டும் முரணல்லவோ.
அடியேனுக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியுமா ?
பிறவிப்பயன் தான் என்ன ?
email: srfmetals@gmail.com
9840302270-Prakash Ramanujam - Chennai
இறைவன் திருவடிகளைச் சென்றடைவதே இந்த மானிடப் பிறவியின் பலன்.
DeleteKarma margam vs gnana/bhakti margam
Deleteஇரண்டும் முரண் அல்ல. முதலாவதின் தொடர்ச்சி அடுத்தது.
Deleteமானிடராய் பிறத்தல் அரிது. பிறகு பிறவிக்கு காரணமான அறியாமை நீங்க வேண்டும். நீங்குவதற்கு சிறப்பான செம்பொருளை காணவேண்டும். அதற்கு முயற்சிக்க வேண்டும்.
அற்புத விளக்கம்
Deleteஉடம்பினை பெற்ற பயன் யாவதெனின் - உடம்பினுள் உத்தமனைக்காண்
ReplyDeleteஔவை.
அத்வைதம்
Deleteஉடம்பின் உள்ளே எப்படி உத்தமனை காண்பது
Deleteவணக்கம் வாழ்க வளமுடன் உடம்பினுள் உத்தமனை கான்
Deleteஉடம்பு என்பது எதனால் ஆனது?
அந்தப் பொருள் எங்கே உள்ளது?
உடம்பினை இயக்கிக் கொண்டிருப்பது யார் ?உடம்பினுள் உள்ளிருக்கும் உள் உறுப்புகளை இயக்குவது யார்?
உயிர் என்பது என்ன?
அந்த உயிர் எங்கே உள்ளது?
உயிரின் படர்க்கை நிலையை மனம் என்பதும் உயிர் ஆற்றல் மனமாக இயங்குகிறது என்பதையும் இவை அனைத்தையும் ஆட்சி செய்து கொண்டிருப்பது யார் ?(அறிவு)
என்பதையும் உள்முகமாக பயணம் செய்து
கடவுள் என்பது பெயர்ச்சொல் அல்ல
கடந்து உள்ளே செல்
கட +உள் என்பதாக பொருள்படும் வினைச்சொல் நம்முள் கடந்து உள்ளே சென்றாள் உத்தமனை காணலாம்
இந்த உடலும் உயிரும் மனமும் எங்கிருந்து தோன்றியது என்ற உண்மை நிலையை
இவற்றிற்கெல்லாம் காரணமான மூலப் பொருளை செம்பொருளை மெய்ப்பொருளை காண்பதே தவம்
தவம் என்ற முறையால் மட்டுமே இது சாத்தியம்
நன்றி வணக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நன்று
ReplyDeleteவிளக்குகின்ற விதம் அற்புதம்.
ReplyDeleteஅற்புதமான பாடல் மற்றும் விளக்கம் நன்றி
ReplyDeleteசிறப்பு
ReplyDelete