திருக்குறள் & ஆத்திச் சூடி - படிக்கணும்
இன்றைய சூழ்நிலையில், நிறைய இளம் பையன்களும் பெண்களும் அயல் நாட்டுக்குப் போய் படிக்க வேண்டும். அயல் நாட்டுக்குப் போய் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்கா. கனடா. ஐரோப்பா. ஆஸ்திரேலியா. என்று கண்டம் விட்டு கண்டம் சென்று படிக்க மற்றும் வேலை தேடி செல்கிறார்கள்.
நாளடைவில் அந்த நாட்டிலேயே குடியுரிமை பெற்று விடுகிறார்கள். அங்கேயே வீடு வாசல் வாங்கி, பிள்ளைகளை அங்கேயே படிக்க வைத்து மொத்தமாக குடி பெயர்ந்து விடுகிறார்கள்.
அது நல்லது தான்.
உயர்ந்த கல்வி. நிறைய சம்பளம். சிறப்பான சுற்றுப் புற சூழ்நிலை. எல்லாமே நல்லது தான்.
இப்படி பிறந்த நாட்டை விட்டு விட்டு, இன்னொரு நாட்டுக்குப் போகலாமா ? பிறந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? தாய் நாடு அல்லவா என்ற கேள்வி ஒரு புறம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. சில பெரியவர்கள், வயதானவர்கள் "ஆயிரம் தான் இருந்தாலும், நம்ம ஊரு போல வருமா " என்று அங்கலாய்ப்பார்கள். "உள்ளூரில் விலை போகாத மாடு தான் வெளி ஊரில் விலை போகும் " என்று குதர்க்கம் பேசுபவர்களும் உண்டு. "இங்க பத்து ரூபாய் இட்லி, அங்க நூறு ரூபாய். இங்க பத்து ஆயிரம் சம்பாதிப்பதும் ஒன்று தான் , அங்க போய் இலட்ச ரூபாய் சம்பாதிப்பதும் ஒன்று தான் " என்று கூறும் பொருளாதார மேதைகளும் உண்டு.
இதற்கு விடை யார் தருவது? வள்ளுவரிடமே கேட்போம்.
என்னது வள்ளுவரா ? அவருக்கு என்ன தெரியும் இந்த பாஸ்போர்ட், விசா, workpermit , immigration, citizenship பத்தி எல்லாம் என்று நினைக்கிறீர்களா?
அவரு பெரிய ஆளு.
போற போக்கில ஏழு வார்த்தைகளில் நமக்கு விடை சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
பாடல்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
பொருள்
யாதானும் = எதானாலும் (எந்த இடம் ஆனாலும்)
நாடாமால் = நாடு ஆம்
ஊராமால் = ஊர் ஆம்
என்னொருவன் = ஏன் ஒருவன்
சாந்துணையும் = சாகும் வரையில்
கல்லாத வாறு = கல்வி கற்காமல் இருப்பது
அதாவது, படித்தவனுக்கு, எல்லா நாடும், எல்லா ஊரும் தன் நாடு, தன் ஊர் போலத்தான். அப்படி இருக்க, எவனாவது சாகும் வரையில் படிக்காமல் இருப்பானா என்று கேட்கிறார்.
மிக மிக ஆழமான பொருள் கொண்ட குறள் . ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
முதலாவது, படித்தவனுக்கு எல்லா ஊரும், தன் சொந்த ஊர் போல. எல்லா நாடும் தன் சொந்த நாட்டைப் போல. எனவே, எங்கு ஒரு வேறுபாடும் இல்லை. அவன் எங்கு வேண்டுமானாலும் போய் தங்கலாம், படிக்கலாம், வேலை செய்யலாம். வள்ளுவர் விசா தந்து விட்டார்.
இரண்டாவது, ஒருவன் பிறந்த நாட்டில் அவனுக்கு குடி உரிமை இருக்கிறது. படித்தவன் எந்த நாட்டுக்கு சென்று அங்கு குடி உரிமை கேட்டாலும், அந்த நாடு அவனை தன் குடிமகனாக / மகளாக ஏற்றுக் கொண்டு குடி உரிமை வழங்கி விடும். எல்லா நாடும் அவனை தங்கள் நாட்டு குடிமகனாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும். அவனுக்கு பிறந்த ஊரும் ஒன்றும் தான், மற்ற ஊரும் ஒன்று தான். ஒரு வேறுபாடும் இல்லை.
மூன்றாவது, அடடா, அந்தக் காலத்திலேயே யாரும் எனக்கு இதை சொல்லவே இல்லையே. சொல்லி இருந்தால் நானும் படித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று போய் செட்டில் ஆகியிருப்பேனே என்று நினைத்து வருந்த வேண்டாம். வள்ளுவர் சொல்கிறார், இன்னைக்கு ஆரம்பி. இன்றிலிருந்து படிக்கத் தொடங்கு. இளமையில் கல் என்று சொன்னது சரிதான். எப்போது நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. "சாம் துணையும்" . சாகும் வரை படிக்க வேண்டும் என்கிறார். இன்று ஆரம்பித்து , சாகும் வரை படித்துக் கொண்டே இருந்தால், எல்லா நாடும் நம் நாடு ஆகும். 40 , 50, 60 வயதுக்கு மேல் படிக்கத் தொடங்கி சாதித்தவர்கள் இல்லையா ? இதுவரை படிக்காவிட்டாலும் பரவாயில்லை. இன்று நல்ல நாள் ஆரம்பிக்கலாம்.
நான்காவது, சரி வெளி நாட்டுக்குப் போய் , தத்தி முத்தி குடியுரிமை வாங்கியாச்சு. அப்புறம் என்ன. ஜாலிதான். புத்தகத்தை எல்லாம் மூட்டை கட்டி போட்டுற வேண்டியதுதானா ? இல்லை. சாகும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புதிது புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஐந்தாவது, சில பேர் நினைப்பார்கள்...ஆமா இப்பவே இவ்வளவு வயாசாச்சு...இனிமேல் படிச்சு ...என்னத்த செய்ய ...என்று. அப்படி நினைக்கக் கூடாது. கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சாகும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்..
ஆறாவது, வயதான காலத்தில் மிக பெரிய சிக்கல் எது என்றால் நோய் , உடல் வலிமை குன்றுவது, காது கேட்காமல் போவது, கண் சரியாக தெரியாமல் போவது போன்றவை அல்ல. தனிமை. தனிமை தான் மிகப் பெரிய கொடுமை. சிறையில் போட்டது மாதிரி இருக்கும். பேசக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எல்லாம் அவர்கள் வாழ்வில் மும்மரமாக இருப்பார்கள். நம்மோடு இருந்து பேச அவர்களுக்கு நேரம் இருக்காது. என்ன செய்வது ? சாகும் வரை கற்றுக் கொண்டே இருந்தால், அந்தத் தனிமை தெரியாது. கற்பது என்பது அவ்வளவு இனிமையான விஷயம். படுக்கையில் கிடந்து கடைசி மூச்சு வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
வள்ளுவராவது ஏழு வார்த்தை எடுத்துக் கொண்டார்.
நம்ம கிழவி, ஒளவை இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய்விட்டாள்.
ஓதுவது ஒழியேல்
படிப்பதை விட்டு விடாதே. ஓதுவது என்றால், படிப்பது, படித்தையே மீண்டும் மீண்டும் படிப்பது. நன்றாக மேடையில் ஏறும்வரை படிப்பது. ஓதுவார் என்று சொல்லுவார்கள். அவர் படித்து. படித்ததை பல முறை சொல்லிப் பார்த்து, மற்றவர்களுக்கும் சொல்லுவார். அவர் சொல்லுவதை, பாடுவதை கேட்டு கேட்டு நமக்கு பாடம் ஆகி விடும். படி. திரும்பத் திரும்பப் படி. மனதில் தெளிவாகும் வரை படி. படித்ததை மற்றவர்களுக்கு சொல். இதை ஒரு நாளும் விட்டு விடாதே என்கிறாள் ஒளவை.
ஏதாவது சால்ஜாப்பு சொல்லாமல், படிக்கத் தொடங்குங்கள்.
என்ன படிக்கப் போகிறீர்கள்?
https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_17.html
படித்தவன் எங்கும் வாழ முடியும் என்பது எண்ணத்தகுந்த கருத்து. நன்றி.
ReplyDeleteபயனுள்ள பதிவு
ReplyDeleteநன்றியுடன் பகிர்ந்துள்ளேன்