Pages

Thursday, February 21, 2019

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ 


உயிர்களை வருத்தக் கூடாது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் , அதற்காக நாம் ரொம்ப சிரமம் எடுத்துக் கொள்வது கிடையாது. ஒரு கொசு கண் முன் பறந்தால் , ஒரே அடி.

குசேலர். கண்ணனின் தோழன். மிகுந்த வறுமையில் வாடினார். நிறைய பிள்ளைகள். வருமானம் இல்லை. பசி. பட்டினி. "கண்ணன் உங்கள் நண்பர் தானே, அவரிடம் சென்று ஏதாவது உதவி கேட்டால் என்ன " என்று கொஞ்சம் அவலை ஒரு பழைய துணியில் முடிந்து குசேலரை கண்ணனிடம் அனுப்பி வைக்கிறாள்.

குசேலர் கண்ணனை காண புறப்பட்டுப் போகிறார்.

போகிற வழியில் நல்ல வெயில். நிழல் பார்த்து மரத்தடியிலேயே போகலாம். நமக்கு எப்படி நிழல் வேண்டுமோ அது போலத்தானே எறும்பு போன்ற சின்ன உயிர்களுக்கும் நிழல் வேண்டும். அவைகளும் மர நிழலில் தானே நகரும். நாம் அந்த வழியில் சென்றால், அவற்றின் மேல் மிதித்து அவை இறந்து போகாதா? அவை பாவம் இல்லையா என்று நினைத்து, நிழலை விட்டு விட்டு வெயிலில் நடக்கிறார். வெயில் மண்டையைப் பிளக்கிறது. குடை எல்லாம் வாங்க வசதி இல்லை. தன் கையை விரித்து தலைக்கு குடை போல வைத்துக் கொண்டு நடந்து போகிறார். ....

பாடல்

சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
     போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
     ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
     காத லங்கை விரித்துக் கவித்தரோ.

பொருள்

சீத = குளிர்ந்த

நீழற் = நிழல்

செலிற் = செல்லும்

சிற் றுயிர் = சின்ன உயிர். ஈ எறும்பு போன்றவை

தொகை = கூட்டம்

போதச்  = அறிவு. இங்கே அறிந்து அல்லது எண்ணி என்று கொள்ளலாம்

 சாம்பும் = வருந்தும்

மென் றெண்ணிய = என்று எண்ணிய

புந்தியான் = புத்தி உள்ளவன்

ஆத வந்தவழ் = ஆதவன் + தவழ் = சூரியன் தவழும்

ஆறு = வழி

நடந்திடுங் காதல்  = நடக்க விரும்பி

அங்கை = அவருடைய கையை

விரித்துக் = விரித்து

கவித்தரோ. = குடை போல கவிழ்த்துக் கொண்டார்

ஜீவ காருண்யத்தின் உச்சம். தன்னால் ஒரு எறும்புக்குக் கூட தீங்கு வரக் கூடாது என்று எண்ணி, தன்னை வருத்திக் கொண்டு வெயிலில் நடந்தார்.

ஏழ்மை ஒரு புறம்.  பசி ஒரு புறம். வீட்டில் பிள்ளைகள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு புறம் நினைத்துப் பார்ப்போம். நாமாக இருந்தால் என்ன எல்லாம் நினைத்துப் பார்ப்போம் என்று.

ஏழையாக பிறந்ததற்காக பெற்றோரை ஏசுவோம், இந்த சமுதாயத்தை திட்டுவோம்,  அந்த கடவுளை தூற்றுவோம்.

எறும்புக்கு அருள் செய்ய மனம் வருமா அந்த சூழ்நிலையில் ?

அப்படிப்பட்ட அருளாளர்கள் பிறந்த மண் இது.

இவற்றை எல்லாம் படிப்பதன் மூலம், நம் மனத்திலும் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம்  அருள் சுரக்கத்தான் செய்யும்.

இல்லையா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_21.html

2 comments:

  1. தன்னையே வருத்திக் கொண்டு ஜீவகாருண்யத்தை கடைபிடிக்கும் சான்றோர் பற்றிய பாடலும் விளக்கமும் அருமை.

    ReplyDelete
  2. ஜீவா காருண்யத்துக்கு ஒரு எல்லை!

    ReplyDelete