கம்ப இராமாயணம் - கூற்றினுக்கு ஊட்டி
சிறு பிள்ளைகளுக்கு தாய்மார்கள் ஊட்டி விடுவார்கள். அன்பு மிகுதியால் சில சமயம் கணவன்/மனைவி, காதலன்/காதலிக்கு ஊட்டி விடுவதும் உண்டு.
ஊட்டி விடுவது ஒரு சுகம். பிள்ளைகள் சந்தோஷமாய் உண்பதை காண்பதும் ஒரு சுகம்தான். சில சமயம், கொஞ்சம் சாப்பிட்டபின் , குழந்தை போதும் என்று தலையை திருப்பிக் கொள்ளும், என்ன முயன்றாலும் சாப்பிடாது என்ன செய்ய. கிண்ணத்தில் உணவு கொஞ்சம் மிச்சம் இருக்கும். நெய்யும், பருப்பும், கீரையும் போட்டு குழைய செய்த உணவு. தூரவா போட முடியும் என்று அதை உருட்டி தாய்மார்கள் தாங்கள் உண்டு விட்டு, பாத்திரத்தை கழுவப் போடுவார்கள்.
கம்பன் ஒரு ஊட்டுதலை காட்டுகிறான். நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
எமனுக்கு ஊட்டி விட்டால் எப்படி இருக்கும் ?
ஜடாயு, அரக்கர்களை கொன்று யமனுக்கு ஊட்டி விடுவானாம். ஊட்டிய பின், மிச்சம் இருப்பதை தான் தின்று விடுவானாம்.
பாடலைப் பாருங்கள்
பாடல்
வீட்டி வாள் அவுணரை,
விருந்து கூற்றினை
ஊட்டி, வீழ் மிச்சில் தான்
உண்டு, நாள்தொறும்
தீட்டி, மேல் இந்திரன் சிறு
கண் யானையின்
தோட்டிபோல் தேய்ந்து
ஒளிர் துண்டத்தான்தனை
பொருள்
வீட்டி வாள் = வீசும் வாளை (கத்தி) கொண்ட
அவுணரை = அரக்கர்களை
விருந்து = விருந்தாக
கூற்றினை ஊட்டி = எமனுக்கு ஊட்டி
வீழ் மிச்சில் = வீழ்ந்த மிச்சத்தை
தான் உண்டு = தான் (ஜடாயு) உண்டு
நாள்தொறும் = தினமும்
தீட்டி = கூர் செய்து
மேல் இந்திரன் = இந்திரன் அமரும்
சிறு கண் யானையின் = சிறிய கண்களை கொண்ட யானையின்
தோட்டிபோல் = அங்குசம் போல
தேய்ந்து = தேய்ந்து (கூர் மழுங்கி)
ஒளிர் = ஒளி வீசும்
துண்டத்தான்தனை = அலகைக் கொண்ட ஜாடாயுவை (இராமனும் இலக்குவனும் கண்டார்கள் )
பிள்ளைக்கு ஊட்டிய பின் மிச்சத்தை தாய் உண்பது போல, எமனுக்கு ஊட்டிய பின் மிச்சத்தை தான் உண்பானாம்.
எமனுக்கு வேண்டியது உயிர் தான். அவனுக்கு அதை ஊட்டிய பின், மிச்சமிருக்கும் உடலை தான் தின்பானாம்.
என்ன ஒரு கற்பனை.
இப்படி அரக்கர்களோடு சண்டை போட்டு, சண்டை போட்டு, ஜடாயுவின் அலகு தேய்ந்து போய் விட்டதாம். இந்திரனின் யானையை அடக்கும் அங்குசம் போல.
தேய்ந்து போனாலும், எப்போதும் வேலை செய்து கொண்டே இருந்ததால் அது ஒளி வீசிக் கொண்டிருத்ததாம்.
கவிதை. கற்பனை.
நம் வீட்டில் தங்க வைர நகைகள் இருக்கும். அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து பூட்டி வைப்போம்.
குப்பை இருக்கும். அதை அலமாரியில் வைத்தா பூட்டி வைப்போம் ?
உயர்த்த கருத்துகளை நம் மூளையில் சேர்த்து வைக்க வேண்டும்.
பெரும்பாலும் என்ன செய்கிறோம் ? குப்பைகளை சேர்த்து வைக்கிறோம்.
குப்பை வைக்கும் இடமா நம் மூளை? ஒவ்வொரு நாளும் லாக்கரை திறந்து கொஞ்சம் குப்பையை அதில் திணித்து பின் மூடி வைக்கிறோம்.
என்ன பலன் ?
டிவி, செய்தித் தாள்கள், தொடர் சீரியல்கள், வாட்சப் செய்திகள், facebook படங்கள், செய்திகள், youtube, அரட்டைகள், என்று குப்பைகளாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.
முதலில் உங்கள் பெட்டகத்தைத் திறந்து அதில் உள்ள குப்பைகளை அள்ளி வெளியே போடுங்கள். பெட்டகத்தை சுத்தம் செய்யுங்கள்.
நல்லவற்றை மட்டும் உள்ளே வையுங்கள்.
இனிமேல், குப்பைகளை உள்ளே வைப்பது இல்லை என்று முடிவு செய்யுங்கள்.
இராமாயணம், அறிவியல், திருக்குறள், போன்ற உயர்ந்த நூல்களில் உள்ள சிறந்த கருத்துகளை மட்டுமே உங்கள் மூளைக்குள் வைப்பது என்று முடிவு செய்யுங்கள்.
ஒன்றும் இல்லாவிட்டால் பரவாயில்லை. பெட்டகம் காலியாகத்தானே இருக்கிறது என்று கொஞ்சம் குப்பையை உள்ளே வைக்காதீர்கள்.
உங்களை, உங்கள் அறிவை, உங்கள் நேரத்தை மதிக்கப் பழகினால், எதை படிக்கலாம், எதை கேட்கலாம் என்ற தன்னுணர்வு தானே வரும்.
எப்போது சுத்தம் செய்யப் போகிறீர்கள்?
https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_11.html
எமனுக்கு ஊட்டி விடுவதா? அசந்து போய்விட்டேன் உங்கள் விளக்கத்தை படிக்கும் வரை.
ReplyDeleteஅழகான பாடல்.
நல்லதை தேக்கி வைத்து குப்பைகளை அகற்றுவது பற்றி நன்றாக சொன்னீர்கள்
எவ்வளவு இனிய கற்பனை!
ReplyDelete