பட்டினத்தார் பாடல்கள் - ஐயா, திருவையாறா
பாடல்
மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவை யாறா
பொருள்
மண்ணும் தணல் ஆற = மீண்டும் மீண்டும் நாம் பிறந்து, பின் இறந்து கொண்டிருந்தால், நம் உடலை மீண்டும் மீண்டும் எரிப்பார்கள். அப்படி மாறி மாறி எரித்துக் கொண்டிருந்தால், இந்த மணல் (சுடுகாட்டு மணல் ) சூடாகவே இருக்கும் அல்லவா? அந்த மணல் கொஞ்சம் தணல் ஆறவும். சூடு ஆறி குளிரவும்
வானும் புகை ஆற = உடலை எரிக்கும் போது எவ்வளவு புகை வரும். நாம் மறுபடியும் மறுபடியும் பிறந்து இறந்து எரித்து எரித்து இந்த வானமே புகை மண்டி கிடக்கிறது. அந்த புகை ஆறவும்
எண்ணரிய தாயும் இளைப்பாறப் = பிள்ளையைப் பெறுவது என்றால் எவ்வளவு சிரமம் ஒரு தாய்க்கு. எத்தனை தாய்மார்கள் நம்மை மறுபடி மறுபடி பெறுவதற்கு சிரமப் படுவார்கள். அவர்கள் கொஞ்சம் இளைப்பாறவும்.
பண்ணுமயன் = பண்ணும் + அயன் . நம்மை மீண்டும் மீண்டும் படைக்கும் ப்ரம்மா
கையாறவும் = நம் தலை எழுத்தை எழுதி எழுதி அவனுக்கும் கை வலிக்காதா? அவன் கை ஆறவும்
அடியேன் கால் ஆறவும் = பிறந்தது முதல் ஆட்டம், ஓட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். பள்ளிக்கூடம், வேலை, வெட்டி என்று அலைந்து திரிகிறோம். கால் தான் வலிக்காதா நமக்கு. ஒரு பிறவி என்றால் பரவாயில்லை. எத்தனை பிறவி, எவ்வளவு நடப்பது ? கால் தான் வலிக்காதா ? என் கால் இளைப்பாறவும்
காண்பார் = இவை எல்லாம் இளைப்பாறும்படி காண்பாய்
ஐயா = ஐயா
திருவை யாறா = திருவையாறா, திருவையாற்றில் உள்ள சிவனே
பட்டினத்தாருக்கு தமிழ் வந்து விழுகிறது.
ஐந்து ஆறுகள் சேரும் இடம், திரு + ஐந்து + ஆறு. திருவையாறு.
அந்த ஆற்றினை, ஆறுதல் என்ற இளைப்பாறுதல் என்ற வார்த்தையோடு சேர்க்கும் இலாகவம் பட்டினத்தாருக்கு இருக்கிறது.
அது போகட்டும்.
நமக்கு நேற்று நடந்தது கொஞ்சம் நினைவு இருக்கிறது. போன வாரம் நடந்தது அதை விட கொஞ்சம் குறைவாக நினைவு இருக்கிறது. போன மாதம், போன வருடம் ?
நாள் ஆக , ஆக நினைவு குறைந்து கொண்டே போகிறது.
போன ஜென்மம் நினைவு இருக்கிறதா ? இல்லவே இல்லை.
ஞானிகளுக்கு அது நினைவு இருக்கிறது.
பட்டினத்தார் சொல்கிறார் எத்தனை பிறப்பு, எத்தனை தாய்மார் என்று.
மாணிக்க வாசகர் சொல்லுகிறார்
"எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்
மெய்யே உன் பொன்னடிக்கு கண்டு இன்று வீடு உற்றேன் "
என்று சிவபுராணத்தில்.
புல்லாகி, பூடாகி, புழுவாய் , பறவையாய், பாம்பாய் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். அத்தனை பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார்.
இளைத்து யார் ? இந்த உடம்பு அல்ல. இந்த ஆன்மா. மறுபடி மறுபடி பிறந்து இளைக்கிறது.
எளிய தமிழில் ஆழ்ந்த அர்த்தம்.
இது உங்கள் சொத்து. உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு விட்டுச் சென்ற சொத்து. வெட்டிக் கொண்டு போனாலும் சரி. கட்டிக் கொண்டு போனாலும் சரி. விட்டு விட்டுப் போய் விடாதீர்கள்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_15.html
இப்படி அழகான பட்டினத்தார் பாடலா? சரியாக ஐந்து ஆறுதல்களை வைத்து எழுதி இருக்கிறாரே! ஆஹா என்று வியக்கவும் சுவைக்கவும் வைக்கிறதே.
ReplyDeleteஅருமையா பதிவு நன்றி தமிழ்மொழியில் வெண்பா அறிய பட்டினத்தார் பாடல் ஓர் உம்...
Delete