Pages

Friday, March 22, 2019

திருக்குறள் - எண்ணியாங்கு எய்துப

திருக்குறள் - எண்ணியாங்கு எய்துப


ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்.

அப்படி கிடைக்க என்ன வழி?

நாமும் தான் எவ்வளவோ ஆசைப்படுகிறோம். பணம், பொருள், செல்வம், புகழ், ஆரோக்கியம், அன்பு, நட்பு, உறவு என்று ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்கே கிடைக்கிறது?

வள்ளுவர் சொல்கிறார், "நீ ஆசைப்பட்டது எல்லாம் உனக்குக் கிடைக்க ஒரு வழி இருக்கிறது.  நீ எண்ணியதை , எண்ணியபடியே அடைவாய், நீ உறுதியானவனாய் இருந்தால் "

பாடல்


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்


பொருள்

எண்ணிய = எண்ணியவற்றை

எண்ணியாங்கு = எண்ணியபடியே

எய்துப  = அடைவார்

எண்ணியார் = எண்ணியவர்கள்

திண்ணியர் = உறுதியானவர்களாய்

ஆகப் பெறின் = இருக்கப் பெற்றால்

சும்மா, இதெல்லாம் கதை. ஏதேதோ வேண்டும் என்று எவ்வளவு உறுதியாக ஆசைப் பட்டோம். எங்கே கிடைத்தது? வள்ளுவர் ஏதோ சும்மா சொல்லிவிட்டுப் போகிறார். இதெல்லாம் நடக்கிற காரியமா என்ற சந்தேகம் எழலாம்.

கொஞ்சம் விரித்துப் பார்ப்போம்.  வள்ளுவர் சொல்லுவது சரியா இல்லையா என்ற முடிவை, இறுதியில், உங்களிடமே விட்டு விடுகிறேன். என்ன சரியா ?


முதலாவது, வள்ளுவர் ஏன் தேவை இல்லாமல் ஒரு வார்த்தையை போடுகிறார்? 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

என்பதில் "எண்ணியாங்கு" என்ற வார்த்தை எதற்கு? 

எண்ணிய  எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே. எண்ணியவர்கள் உறுதி உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் எண்ணியது கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ? எதற்கு அந்த "எண்ணியாங்கு" என்ற வார்த்தை?

அதில்தான் இருக்கிறது இரகசியம்.

"எண்ணிய படியே" அடைவர்.

அப்படி என்றால் நம் எண்ணம் தெளிவாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, "நிறைய பணம் வேண்டும், பெரிய செல்வந்தனாக வேண்டும்" என்று நினைத்தால் நடக்காது. ஏன் ? நிறைய பணம், பெரிய செல்வந்தன் என்றால் என்ன ? எவ்வளவு பணம் இருந்தால் "நிறைய" பணம்?  ஒரு பத்து ரூபாய், நூறு ரூபாய், இலட்ச ரூபாய், கோடி ரூபாய்?

ஒரு வீடு, நாலு காரு, ஒரு தோட்டம், இவ்வளவு fxied டெபாசிட் என்று ஒரு தெளிவான எண்ணம் வேண்டும்.

"சிறந்த கல்விமானாக வேண்டும்" என்று நினைத்தால் நடக்காது. பட்டப் படிப்பு, உயர்நிலை, முனைவர் (doctorate ) என்று ஒரு தெளிவான குறிக்கோள் வேண்டும். 

"நல்ல பாடகனாக வேண்டும்" என்று நினைத்தால் போதாதது. கர்நாடக சங்கீதத்தில், இந்தியா அளவில் பல ஊர்களில் பாடி, இன்ன இன்ன பரிசில்களை பெற வேண்டும், இன்ன இன்ன பட்டங்களை பெற வேண்டும் என்ற  தெளிவான குறிக்கோள் வேண்டும். 

ஏன் அப்படி ஒரு குறிக்கோள் வேண்டும் என்று பின்னே சொல்லுகிறேன். 

முதலில் வரையறுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். பொத்தாம் பொதுவாக சொல்லக் கூடாது. 

ஒரு காகிதத்தில் எழுதுங்கள். 

"என் கணவன்/மனைவி என்னிடம் அன்பாக இருக்க வேண்டும்" என்று நினைத்தால் போதாது. 

உங்களுக்கு வேண்டிய அன்பு என்றால் என்ன என்று தெளிவாக சொல்லுங்கள். 

"என் கணவன் என்னை மாதம் ஒரு முறை சினிமாவுக்கு கூட்டிப் போக வேண்டும், வருடத்துக்கு நாலு பட்டுச் சேலை வாங்கித் தர வேண்டும், வாரம் ஒரு நாள் சமயலில் இருந்து விடுதலை வேண்டும் ...." இப்படி ஒரு தெளிவான பட்டியலை போட்டுக் கொள்ளுங்கள்.  அன்பாய் இல்லை, அன்பாய் இல்லை என்று  அனத்தக் கூடாது. அன்பு என்றால் உங்கள் அகராதியில் என்ன என்று எழுதுங்கள். 

"பிள்ளை சரியாக படிக்க மாட்டேன் என்கிறான்" என்று சொன்னால், நீங்கள் வேண்டுவது என்ன என்பது தெளிவாக இல்லை. குறை சொல்லிக் கொண்டே இருந்தால்  அது தான் கிடைக்கும். கணவன்/மனைவி அன்பு செய்யவில்லை என்று குறை சொன்னால், நீங்கள் குறை சொல்லுவதியிலேயே குறியாக இருக்கிறீர்கள். உங்கள் மனம் எல்லாம் குறையை சுற்றியே வருகிறது. குறையே சொல்லிக் கொண்டு இருந்தால் அது தான் கிடைக்கும். மாறாக, "என் பிள்ளை வகுப்பில் முதலாவதாக வர வேண்டும் " என்று நினையுங்கள். 

நினைத்தால் நடந்து விடுமா ? சும்மா நினைத்தால் போதுமா ?

இல்லை, அடுத்தது சொல்லுகிறார் வள்ளுவர். 


"திண்ணியர் ஆகப் பெறின் "

அது என்ன திண்ணியர்? நிறைய தின்னச் சொல்லுகிறாரா ?

திண்ணியர் என்றால் உறுதியானவராக இருக்க வேண்டும்.

உறுதி என்றால் மன உறுதி, செயலில் உறுதி, உடலில் உறுதி. 

சும்மா கனவு கண்டுகொண்டு, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினால் எண்ணிய படி ஒன்றும்  நடக்காது.

எதை அடைய வேண்டுமோ, அதில் மன உறுதி வேண்டும். 

அதை செயல் படுத்துவதில், செயலில் உறுதி வேண்டும். 

செய்யும் உடலுக்கு உறுதி வேண்டும். 

சில பேர், உடல் எடை குறைய வேண்டும் என்று உடற் பயிற்சி தொடங்குவார்கள், உணவு கட்டுப்பாடு கொள்ள வேண்டும் நினைப்பார்கள். அப்படி  நினைத்த சில நாட்களில், ஏதாவது கல்யாணம், பிறந்த நாள் என்று ஒரு  விஷேசம் வரும். இனிப்பு, ஐஸ் கிரீம் என்று ஒரு கட்டு கட்டிவிடுவார்கள். மனதில் உறுதி  இல்லை.

இன்னும் சிலர் செயலில் இறங்குவார்கள். எதிர்ப்பு வரும், தோல்வி வரும்...இது நமக்கு  சரி வராது என்று விட்டு விடுவார்கள். விடா முயற்சி இல்லை. 

எந்த செயலுக்கும் கடின உழைப்பு வேண்டும். உழைக்காமல், வேலை செய்யாமல்  ஒன்றும் கிடைக்காது. அதைச் செய்ய சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும். அதற்கு உறுதியான உடல் வேண்டும். 

மனமும், உடலும், செயலும் உறுதியாகச் செயல்பட்டால், எண்ணியதை எண்ணியபடியே அடையலாம்.

"எண்ணியாங்கு" என்பதற்கு பின்னால் விளக்கம் சொல்லுகிறேன் என்று சொல்லி இருந்தேன்..

நம் எண்ணங்கள் மிக மக தெளிவாக இருந்தால் தான் திட்டம் இட முடியும். 

"என் மனைவி என் மேல் அன்பாக இருக்க வேண்டும்" என்று நினைத்தால் அதில் நாம்   செயல் பட ஒன்றும் இல்லை. 

மாறாக "என் மனைவி என் வேலைப் பளுவை புரிந்து கொள்ள வேண்டும்,  என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், எனக்கு பிடித்த  பண்டங்கள் செய்து தர வேண்டும்,  எப்போது நை நை என்று அரிக்கக் கூடாது " என்று தெளிவான தேவைகள் இருந்தால் அதை செயல்படுத்த முடியும். 

அவளிடம் பேசலாம். வேலைப் பளுவை பற்றி விளக்கலாம். என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று   விளக்கிச் சொல்லலாம். இவற்றை எல்லாம் அவள் செய்ய  வேண்டும் என்றால், அவளுக்கென்று சில தேவைகள் இருக்கும். அவள் அவற்றை உங்களிடம்  சொல்லலாம். பரஸ்பரம் , நீ இதைச் செய், நான் அதைச் செய்கிறேன்  என்று புரிந்து கொண்டு பகிர்ந்து வாழலாம். 

இப்படி எந்த ஒரு துறையிலும், எது தேவை என்று தெளிவாக வரையறுத்தால், அதை அடைய என்ன   செய்ய வேண்டும் அறிந்து கொண்டு செய்யலாம்.

இன்னொரு உதாரணம்.

எனக்கு 1000 கோடி ரூபாய் சொத்து வேண்டும் என்று நினைத்தால் அதையும் அடையலாம். 

இப்போது எவ்வளவு இருக்கிறது. 1000 கோடி ரூபாய் எப்போது வேண்டும். அப்படி என்றால்  இந்த இடைப்பட்ட நேரத்தில் வருடத்துக்கு எவ்வளவு சம்பாதிக்க வேண்டும். அப்படி யாராவது சம்பாதிக்கிறார்களா ? அவர்கள் எப்படி   அப்படி சம்பாதிக்கிறார்கள். நாம் அவ்வாறு சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்   என்றெல்லாம் சிந்திக்கலாம். அப்போது, அந்த இலக்கை அடைய எவ்வளவு  உழைப்பு தேவைப் படும் என்று கணக்கு போடலாம். நம்மால்  அந்த அளவு உழைக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும். முடியாது என்றால், 1000 கோடி என்பதை 100 கோடியாக்கி , அதன் பின் 300 கோடி, 500 கோடி, 1000 கோடி என்று படிப்படியாக முன்னேறலாம். 

பள்ளியில் முதலாவதாக வர வேண்டுமா, ஒரு நாளைக்கு 5 மணி நேரம் படிக்க வேண்டும். முடியுமா ? உறுதியாக (திண்ணியர்) செய்ய முடியுமா ? 

இலக்கு தெளிவானால், அதை அடையும் வழி தெரியும். வழி தெரிந்தால், பின் என்ன  நடக்க வேண்டியதுதானே. இன்றில்லாவிட்டால், நாளை இலக்கை அடைந்தே தீருவீர்கள்.

இப்போது சொல்லுங்கள், வள்ளுவர் சொன்னது சரிதானா என்று. 

(வாசகர்கள் மன்னிக்க. blog சற்று நீண்டு விட்டது)

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_22.html

2 comments:

  1. திரூக்குறள் விளக்கம் அருமை

    ReplyDelete