கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்
IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் சில பல மாதங்கள் தனியாக பயிற்சி எடுத்துக் கொள்ளவார்கள். IIT போன்ற நிறுவனங்களில் சேர்வது என்பது அவ்வளவு எளிதல்ல. இந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்வதும் அவ்வளவு எளிதல்ல. அவற்றில் சேர்வதற்கும் நுழைவு தேர்வு உண்டு. வருகிற எல்லோரையும் அவர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. அந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, பயிற்சி பெற்று IIT ல் சேர முடியும்.
இப்போது என்ன ஆகிறது என்றால், அந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள்.
அதில் சேர்ந்து பயிற்சி பெற்று, இந்த பயிற்சி நிறுவனங்களில் நுழைந்து, அங்கு மீண்டும் IIT க்கு பயிற்சி பெற்று, IIT ல் சேர வேண்டும்.
சரி, அதுக்கும், இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம் ? IIT எங்கே இருக்கிறது, இராமாயணம் எங்கே இருக்கிறது ?
இராமன் தவம் செய்ய கானகம் வந்தான்.
தவம் செய்யவா வந்தான் ?
ஆம். அப்படித்தான் கைகேயி சொல்லி அனுப்பினாள்.
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ
தாழிரும் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற் கொண்டு
பூழி வெங்கானம் நல்கி புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்
என்றாள்
"பரதன் நாட்டை ஆளட்டும். நீ காட்டில் போய் தவம் செய்"
என்று சொல்லித்தான் அனுப்பினாள்.
எனவே இராமன் தவம் செய்ய காட்டுக்கு வந்திருக்கிறான்.
சூர்ப்பனகை பார்க்கிறாள். எல்லோரும் தவம் செய்து அதன் பலன்களைப் பெறுவார்கள். ஆனால், இந்த இராமன் தவம் செய்ய, இந்த தவம் , என்ன தவம் செய்ததோ என்று வியக்கிறாள்.
இராமன் தவம் செய்கிறான் என்றால் அது தவத்திற்கே பெருமையாம்.
நாம் எல்லாம் தவம் செய்தால் அது நமக்குப் பெருமை. இராமன் தவம் செய்தால் அதனால் தவத்துக்கு பெருமை.
இராமன் தவம் செய்ய வேண்டுமே என்று அந்த தவம் முன்பு தவம் செய்ததாம்.
பாடல்
எவன் செய, இனிய இவ்
அழகை எய்தினோன்,
அவம் செயத் திரு உடம்பு
அலச நோற்கின்றான்?
நவம் செயத் தகைய இந்
நளின நாட்டத்தான்
தவம் செயத் தவன் செய்த
தவன் என்? ‘என்கின்றாள்.
பொருள்
எவன் செய = எதைப் பெறுவதற்காக
இனிய = இனிமையான
இவ் அழகை எய்தினோன், = இந்த அழகை அடைந்தவன்
அவம் செயத் = துன்பப் பட்டு
திரு உடம்பு = அவனுடைய இந்த உயர்ந்த உடம்பு
அலச நோற்கின்றான்? = நோகும்படி தவம் மேற்கொள்கிறான்
நவம் செயத் தகைய = புதுமையை உண்டாக்கக் கூடிய
இந் நளின நாட்டத்தான் = இந்த நளினமான கண்களை உடைய இராமன்
தவம் செயத் = தவம் செய்ய
தவன் செய்த = தவம் செய்த
தவன் என்? ‘என்கின்றாள். =தவம் என்ன என்கிறாள்
இவன் தவம் செய்ய, அந்த தவம் என்ன தவம் செய்ததோ என்கிறாள்.
நீங்க எங்க வீட்டுக்கு வர இந்த வீடு என்ன புண்ணியம் பண்ணியதோ என்று சொல்லுவதைப் போல.
IIT ல் சேர கோச்சிங் சென்டர். கோச்சிங் சென்டரில் சேர ஒரு டுடோரியல் சென்ட்ரல் மாதிரி.
தவம் செய்ய தவம் செய்த தவம் .
கம்பனின் கவித் திறமைக்கு ஒரு உரைகல்.
மேலும்,
நாம் ஒரு வேலை செய்கிறோம் என்றால், நம்மால் அந்த வேலை பெருமை அடைய வேண்டும். அந்த அளவுக்கு நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். இராமன் உயர்த்திக் கொண்டான்.
இராமாயணம் படிப்பது கம்பனின் கவிதத்திறமையை இரசிக்க மட்டும் அல்ல, அதில் உள்ள கதையை படிப்பதற்கு மட்டும் அல்ல, அதில் உள்ள பாடங்களையும் படித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு காரியத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்ய வேண்டும். நம்மால் அந்த காரியத்துக்கு பெருமை வந்து சேர வேண்டும்.
அணு ஆராய்ச்சி செய்தாலும் சரி, தெரு பெருகினாலும் சரி....மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.
மார்ட்டின் லூதர் கிங் சொல்லுவார்
நல்ல பாடம்தான். சூர்ப்னகையில் ஆரம்பித்து மார்ட்டின் லூதர் கிங்கு வரை இட்டுச்சென்று பாடலில் உள்ள படிப்பினையை அழகாக சொன்னீர்கள்
ReplyDeleteகம்ப ராமாயணத்தைப் படிக்கும்போது மனதில் ஒரு சுவையும், உதட்டில் ஒரு புன்முறுவலும் ...என்ன இனிமை!
ReplyDelete