Pages

Wednesday, April 17, 2019

108 திவ்ய தேசம் - திருமோகூர்

108 திவ்ய தேசம் - திருமோகூர் 


ஒரு முறை தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று அமுதம் வேண்டும் என்று கேட்டார்கள். அதுக்கென்ன, கொடுத்துட்டா போகுது னு, திருப்பாற்கடலை கடைய ஆணையிட்டார். தேவர்கள் ஒருபுறம் கடைந்தார்கள். மறுபுறம் அசுரர்கள். முதலில் ஆலகால விஷம் வந்தது. சிவன் அதை எடுத்து உண்டார். ஏதேதோ வந்தது. கடைசியில் அமுதம் வந்தது.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை வந்தது.

திருமால் மோகினி வடிவம் கொண்டு, அசுரர்களை மயக்கி, அமுதம் அனைத்தையும் தேவர்களுக்கே கொடுத்து விட்டார்.

அப்படி கொடுத்த இடம் தான் திருமோகூர்.

மோகினி வடிவில் வந்ததால் திரு மோகினி ஊர், திரு மோகியூர், திருமோகூர் என்று ஆகிவிட்டது.

அந்த இடம், எங்கே இருக்கிறது தெரியுமா ?

மதுரைக்கு ரொம்ப பக்கத்தில..மேலூர் போற வழியில, ஒத்தக்கடைக்கு பக்கத்தில இருக்கு.

மதுரையில் இருந்து சைக்கிளை ஒரு மிதி மிதித்தால் போய் விடலாம்.

டவுன் பஸ் வசதியும் இருக்கும். திருவாதவூர் போகும் பஸ் அந்த வழியாத்தான் போகும்.

நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசம்.



பாடல்

நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்
தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்
காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்
நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள்.


பொருள்

நாம டைந்த  = நாம் அடைந்த, நாம் பெற்ற

நல் லரண் = நல்ல அரண், நல்ல பாதுகாப்பு

தமக் கென்று = நம்முடையதென்று

நல் லமரர் = நல்ல தேவர்கள்

தீமை செய்யும் = தீமைகள் செய்யும்


வல் லசுரரை = வன்மையான அசுரர்களை

யஞ்சிச் = அஞ்சி

சென் றடைந்தால் = சென்று அடைந்தால்

காம ரூபம் = மோகினி உருவம்

கொண் டெழு = கொண்டு எழுந்து

அளிப் பான் = அருள் செய்வான்

திரு மோகூர் = திருமோகூர்

நாம மே = அவன் நாமமே

நவின்று = சொல்லி

றெண்ணுமின் = மனதில் எண்ணுங்கள்

ஏத்துமின் = போற்றுங்கள்

நமர்காள்  = நம்மவர்களே

அவன் நாமத்தை , பெயரை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள் போதும் என்கிறார்.

நவிலுதல் என்றால் கற்றல் என்று பொருள்.

நவில் தொறும் நூல் நயம் போலும் என்பார் வள்ளுவர்.

நவிறொறும் நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு


உயர்ந்த புத்தகங்களை படிக்க படிக்க எப்படி இன்பம் உண்டாகிறதோ அது போல நல்ல பண்புடையவர்களின் தொடர்பும் இன்பம் தரும் என்கிறார்.

இறைவன் நாமத்தை நவில வேண்டும்.

சும்மா இராமா இராமா என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அதில் என்ன இருக்கிறது என்று அறிய வேண்டும்.

"எண்ணுமின்" மனதுக்குள் எண்ண வேண்டும்.

"ஏத்துமின்" கையால் வணங்க வேண்டும் .


மனம் வாக்கு காயம் என்று சொல்லும் திரிகாரணத்தாலும் வணங்க வேண்டும்.

அடுத்த தடவை மதுரை பக்கம் போனால், மறக்காமல் திருமோகூர் போய்விட்டு வாருங்கள். அங்கே ப்ரம்ம தீர்த்தம் இருக்கிறது. இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108.html


No comments:

Post a Comment