Pages

Monday, April 29, 2019

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை 


அம்மையே அப்பா என்று இறைவனை தொழுது கேட்டு இருக்கிறோம்.

என்ன பெத்த இராசா என்று குழந்தையை கொஞ்சுவதை கேட்டு இருக்கிறோம்.

"என்னை பெற்ற தாயார்" என்று ஒரு திருத்தலத்தில் அம்பாளின் பெயர் இருக்கிறது தெரியுமா ? அம்பாள் பெயரே "என்னைப் பெற்ற தாயார்" என்பது தான்.

அந்தத் திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

எல்லோரும் இறைவனிடம் சென்று அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள். பொருள், பதவி , வேண்டாவிட்டாலும், முக்தி கொடு, பரம பதம் கொடு, வைகுந்தம் கொடு, சுவர்க்கம் கொடு என்று ஏதோ ஒன்றைக் கேட்பார்கள்.

பக்தனிடம் இறைவன் கேட்டு வந்தான் என்று கேள்விப் பட்டதுண்டா? அதுவும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பகவானே நேரில் சென்று பக்தனிடம் கை ஏந்தி நின்ற கதை தெரியுமா ?

இறைவனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன பக்தனிடம் இருந்து விடப் போகிறது ?

எல்லாவற்றிற்கும் விடை, இந்தத் திருத்தலத்தில் இருக்கிறது. 


திரு நின்ற ஊர் !

சென்னைக்கு மிக சமீபத்தில், பூந்தமல்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது.

திரு நின்ற ஊர் என்பது எவ்வளவு அழகான பெயர். திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர். அது காலப் போக்கில் நம் மக்கள் வாயில் சிதிலமடைந்து திண்ணனூர் என்று ஆகி  விட்டது.

இடிந்த கோயில்களை புனரமைத்தது கும்பாபிஷேகம் செய்வது போல, திரிந்து போன ஊர் பெயர்களையும் மீட்டு எடுத்தால் எவ்வளவோ நல்லது.

இந்த திருத்தலத்தை திருமங்கை ஆழ்வார் மங்களாசானம் செய்து இருக்கிறார்.


பாடல்


ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
          இம்மையை மறுமைக்கு மருந்தினை
     ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
          ஐ யனைக் கையிலாழி யொன்றேந்திய
     கூற்றினை, குருமாமணிக் குன்றினை
          நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
     காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
          கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் - (1642)
                          பெரியதிருமொழி 7-10-5


பொருள் 

ஏற்றினை = ஏறு போல கம்பீரமானவனை 

இமயத்து = இமய மலையில் 

ளெம் மீசனை = எம் ஈசனை 

இம்மையை = இப்பிறவிக்கு 

மறுமைக்கு = மறு பிறவிக்கு 

மருந்தினை = மருந்து போன்றவனை 

ஆற்றலை = சக்தி வடிவானவனை 

அண்டத் தற்புறத் துய்த்திடும் = அண்டத்து அப்புறம் உயித்திடும் 

ஐ யனைக் = ஐயனை 

கையிலாழி யொன்றேந்திய = கையில் ஆழி ஒன்று ஏந்திய 

கூற்றினை = தீயவர்களுக்கு எமன் போன்றவனை 

குருமாமணிக் குன்றினை = நீல மாணிக்க மணி போன்ற குன்றினை 

நின்றவூர் = திரு நின்ற ஊரில் 

நின்ற = நின்ற 

நித்திலத் தொத்தினை = முத்தை போன்றவனை (நித்திலம் = முத்து) 

காற்றினைப் = காற்றினை 

புணலைச் = நீரை 

சென்று = சென்று 

நாடிக் = நாடி 

கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் = திரு கண்ணமை என்ற ஊரில் கண்டு கொண்டேனே 

திருமால் இருந்த ஊர் திருநின்றவூர் என்கிறார். கண்டது திருக்கண்ணமையில் என்கிறார். என்ன குழப்பம் இது ?

ஒரு முறை திருமங்கை ஆழ்வார் திருநின்றவூர் வழியாகச் சென்றாராம். சென்றவர், இந்த கோவிலை தரிசனம் செய்து விட்டு, மங்களாசாசனம் செய்யமால் சென்று விட்டாராம்.

அப்போது, இலக்குமி "சுவாமி, எல்லா ஊரிலும் மங்களாசாசனம் செய்யும்  திருமங்கை ஆழ்வார் நம்ம ஊரை மட்டும் விட்டு விட்டாரே, அவரிடம் சென்று ஒரு பாசுரம் வாங்கி வாருங்கள்" என்று சொன்னாளாம்.

"அதுவும் சரிதான். எப்படி இந்த ஊரை மட்டும் விட்டு விட முடியும். இப்பவே போய்  வாங்கி வருகிறேன் " என்று சுவாமி கிளம்பி விட்டார்.

அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருமல்லை என்ற மாமல்லபுரத்துக்கு சென்று விட்டாராம். பெருமாள் விடவில்லை. மாமல்லபுரம் வரை தொடர்ந்து சென்று பாசுரம் வாங்கி வந்துவிட்டார்.

அந்தப் பாசுரம் ...

நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
          நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
     காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
          கண்டது நான் கடல்மலலை தலசயனத்தே

இப்போது கூட, மனைவிமார்கள் கணவனிடம் ஏதாவது வாங்கி வரும் படி சொல்லுவார்கள். சொல்லும் போது முழுதாக சொல்லுவது கிடையாது. அரைகுறையாக சொல்லிவிட வேண்டியது. கணவன் வாங்கி வந்த பின், "அய்ய , இதையா வாங்கிட்டு வந்தீங்க...போய் திருப்பிக் கொடுத்துட்டு வேற வாங்கிட்டு வாங்க" என்று சொல்லி திருப்பி அனுப்புவார்கள்.

பெருமாள், ஒரு பாசுரம் வாங்கி வந்து, இலக்குமியிடம் காட்டினார். உடனே இலக்குமி "என்ன எல்லா ஊருக்கும் பத்து பாட்டு பாடுகிறார். நமக்கு மட்டும் ஒரு பாட்டுத்தானா? போய்  இன்னொரு பாசுரம் வாங்கிட்டு வாங்க " என்று அனுப்பிவிட்டாள்.

வேற வழியில்லை. பெருமாள் மறுபடியும் கிளம்பி விட்டார்.

அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணமை என்ற ஊருக்கு சென்று விட்டார். அங்கு வரை போய், பாடல் பெற்று வந்தாராம் பெருமாள்.

அந்தப் பாடல் தான் மேலே இருக்கும் "ஏற்றினை" என்று ஆரம்பிக்கும் மேலே சொன்ன பாடல்.

பக்தன் வாயால் பாடல் வேண்டும் என்பதால் ஆண்டவனுக்கு அவ்வளவு விருப்பம்.

இறைவனே வந்து எனக்கு ஒரு பாசுரம் கொடு என்று ஒன்றுக்கு இரண்டாக கேட்டு வாங்கிப் போன இடம் இது.


ஒரு முறை, இலக்குமி ஏதோ ஒரு காரணத்துக்காக சமுத்திர இராஜனிடம் கோபித்துக் கொண்டு பாற் கடலை விட்டு இங்கே வந்து விட்டாளாம்.

திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் அதற்கு "திரு நின்ற ஊர்" என்று பெயர் வந்தது.

சமுத்திர இராஜன் எவ்வளவோ சொல்லியும் தேவி சமாதானம் ஆகவில்லை.

கடைசியில், " நீ என்னை பெற்ற தாய் அல்லவா" என்று சொல்ல, தேவிக்கு மனம் குளிர்ந்து விட்டது. எந்தத் தாய்க்குத் தான் பிள்ளை மேல் தீராத கோபம் வரும்.

சமுத்திர இராஜன் "என்னை பெற்ற தாய்" என்று சொன்னதால், அம்பாளுக்கு அந்தப் பெயரே நிலைத்து விட்டது.


இம்மைக்கும் மறுமைக்கும் மருந்தினை என்கிறார் திருமங்கை.

இந்த பிறவி இருக்கிறதே, அது ஒரு பிணி.

நோய் என்றால் மருந்து சாப்பிட்டால் குணம் ஆகிவிடும். பிணி அப்படி அல்ல.

உதாரணமாக பசி பிணி என்று சொல்லுவார்கள். எத்தனை உணவு சாப்பிட்டாலும், நாலு அஞ்சு மணி நேரம் கழித்து மீண்டும் பசிக்கும். அதுக்கு மருந்தே கிடையாது.

இந்தப் பிறவி இருக்கிறதே. அதுக்கும் மருந்தே கிடையாது. மருந்து கிடையாது என்றால் , கடையில், வைத்தியரிடம் கிடையாது.

ஆண்டவன் ஒருவன் தான் பிறவி நோய்க்கு மருந்து.

இராமாயணத்தில், இராமனையும் இலக்குவனையும் கண்ட அனுமன் சொல்லுவான், இவர்கள் "அரு மருந்து" என்று.

தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,
அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள்.

என்பது கம்ப வாக்கு.



அடுத்த முறை சென்னைப் பக்கம் போனால், பூந்தமல்லிக்கு பக்கத்தில் தான் இருக்கிறது இந்த இடம். ஒரு எட்டு போய் விட்டு வாருங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_29.html

2 comments:

  1. சுவையான கதை!

    ReplyDelete
  2. அருமை. இன்று அக்கோவில் செல்கிறேன். கோவில் வரலாறு ஓரளவு தெரிந்திருந்தாலும் தாங்கள் எழுதிய விதம் அருமை.

    ReplyDelete