Pages

Thursday, April 11, 2019

கம்ப இராமாயணம் - சூர்பனகையை இராமன் வியத்தல்

கம்ப இராமாயணம் - சூர்பனகையை இராமன் வியத்தல் 


தேவ மங்கை வடிவம் கொண்டு சூர்ப்பனகை வருகிறான்.

சீதையைத் தவிர வேறு யாரையும் சிந்தையாலும் தொட்டேன் என்ற உறுதி பூண்டவன் இராமன். சூர்ப்பனகை வரும் கொலுசு, மேகலை சப்தத்தை கேட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பி இருப்பான்...அது தானே நாம் எதிர் பார்ப்பது?

நடந்தது என்ன?

"வானத்தில் இருந்து வந்த அமுதம் போல, அழகிய மார்பகங்களையும், அதன் பாரம் தாங்காமல் துவளும் இடையையும் தன் இரு கண்களால் கண்டான் "

என்கிறான் கம்பன்.


பாடல்

விண் அருள வந்தது ஒரு 
     மெல் அமுதம் என்ன, 
வண்ண முலை கொண்டு, இடை 
     வணங்க வரு போழ்தத்து,- 
எண் அருளி, ஏழைமை துடைத்து, 
     எழு மெய்ஞ்ஞானக் 
கண் அருள்செய் கண்ணன் 
     இரு கண்ணின் எதிர் கண்டான்.

பொருள்

விண் அருள வந்தது = வானில் இருந்து மண் உயிர்களுக்கு அருள

ஒரு  மெல் அமுதம் என்ன = ஒரு மென்மையான அமுதம் போல

வண்ண முலை கொண்டு = வண்ண மயமான  மார்பகங்களை கொண்டு

இடை வணங்க = அதன் பாரத்தால் இடை துவண்டு விழ

வரு போழ்தத்து = அவள் வரும் போது

எண் அருளி = மனதில் எண்ணி, அருள் செய்து

ஏழைமை துடைத்து = அறியாமையை துடைத்து

எழு மெய்ஞ்ஞானக்  = எழுகின்ற மெய் ஞான

கண் = கண்களை

அருள்செய் = அருளிச் செய்கின்ற

கண்ணன்  = கண்களைக் கொண்ட இராமன்

இரு கண்ணின் எதிர் கண்டான். = தன்னுடைய இரு கண்களால் எதிரில் வரக் கண்டான்

இங்கே ஏழைமை என்பது பொருள் செல்வம் இல்லாத ஏழ்மை அல்ல, அறிவுச் செல்வம் இல்லாத ஏழ்மை. அறிவு இல்லாவிட்டால் என்ன, பொருள் இருந்தால் போதும்  என்று நினைக்கிற உலகம்.

வயிற்றுப் பசி தெரிகிறது.

உடல் பசி தெரிகிறது.

அறிவுப் பசி தெரிவதில்லைல். பலருக்கு அந்தப் பசி எடுப்பதே இல்லை.

வயிற்றில் பசி இல்லை என்றால், மருத்துவரிடம் சென்று "டாக்டர் எனக்கு இரண்டு மூணு நாளா சரியா பசியே இல்ல. ஏதாவது மருந்து கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி மருந்து சாப்பிட்டு, அதன் மூலம் பசியைத் தூண்டி, உணவு உண்கிறார்கள்.

யாராவது, எங்காவது போய் "எனக்கு கடந்த 30 அல்லது 40 வருடமாக அறிவுப் பசியே இல்லை.  ஒண்ணுமே படிப்பது இல்லை. படிக்கணும்னு தோணவே மாட்டேங்குது. புத்தகத்தை கண்டாலே வெறுப்பா இருக்கு.  அதுக்கு எதாவது மருந்து இருக்கா...நல்லா படிக்க ஏதாவது மருந்து இருந்தா கொடுங்க " என்று கேட்டது உண்டா ?

அறிவுச் செல்வம் இல்லாத ஏழ்மையை போக்குபவன் இராமன். நமக்கு அப்படி ஒரு செல்வம் இருப்பதே தெரியாது. அறிவு இல்லை என்பதே நமக்குத் தெரியாது. அப்புறம் அல்லவா அதை அடைய முயற்சி செய்வது. அறியாமை என்ற ஏழ்மையில் மூழ்கிக் கிடக்கிறோம். அதை நீக்கி நமக்கு அறிவு என்ற செல்வத்தை  அருளுபவன் அவன். ஞானக் கண்ணைத் தருபவன்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை 
முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் "

என்கிறார் மணிவாசகப் பெருந்தகை.

அவன் அருள் இருந்தால் தான் அவன் தாளை வணங்க முடியும்.

நாம் கேட்காமலேயே அவன் நமக்குத் தருகிறான். நாம் கூப்பிடாமலேயே நம் உள்ளத்தை கவர்ந்து கொள்கிறான்.

"உள்ளம் கவர் கள்வன்" என்பார் திரு ஞான சம்பந்தர்


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் "உள்ளங்கவர் கள்வன்"        
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.   



அப்படிப்பட்ட இராமன், சீதை குடிசைக்கு உள்ளே இருக்கிறாள்...இங்கே எதிரில் வரும் பெண்ணை  பார்க்கிறான்...

அவள் கண்ணை மட்டும் பார்த்தான் என்று சொல்லி இருந்தால் பெருமையாக இருந்திருக்கும்.

அவள் மார்பைப் பார்க்கிறான்.

தேவலோக அமுதம் போல் இருக்கிறதாம்.

அதன் எடையால், அவள் இடை தாங்கவில்லையாம்.

இது ஒரு சரியான பார்வையா என்ற முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_11.html


2 comments:

  1. “எழு மெய்ஞ்ஞானக் கண் அருள்செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான்.” என கூறின பிறகு வேறு சிந்தனைக்கே இடமில்லையே!
    அடுத்த பதிவில் உங்கள் விளக்கம் கிடைக்கும்

    ReplyDelete
  2. "அருள் செய்யக்கூடிய கண்ணன், தன் கண்களால் கண்டான்" என்கிறது இந்தப் பாடல்.

    அவன் கண்டான், அவ்வளதுதான்.

    அருள் செய்தான் என்று சொல்லவில்லை.

    மேலே போகப் போகப் பார்க்கலாம்!

    ReplyDelete